Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில், திருவொற்றியூர்
அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில், திருவொற்றியூர், திருவள்ளூர் மாவட்டம்.
+91- 98402 84456 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பட்டினத்தார் | |
தலவிருட்சம் | – | வில்வம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | திருவொற்றியூர் | |
மாவட்டம் | – | திருவள்ளூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சோழ நாட்டு தலைநகரம் காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த சிவசருமர், சுசீலை தம்பதியருக்கு, சிவபெருமானே மகனாகப் பிறந்தார். மருதவாணர் என்றழைக்கப்பட்ட இவரை, இதே ஊரில் வசித்த திருவெண்காடர் – சிவகலை தம்பதியர் தத்தெடுத்து வளர்த்தனர். திருவெண்காடர் வணிகம் செய்து வந்தார். மருதவாணரும் வளர்ப்புத்தந்தையின் தொழிலையே செய்தார். ஒருசமயம் வியாபாரத்திற்கு சென்று திரும்பிய மருதவாணர், தவிட்டு உமியால் செய்த எருவை மட்டும் கொண்டு வந்தார். இதைக்கண்டு கோபம் கொண்ட தந்தை, எருவை வீசியெறிந்தார். அதற்குள் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்று எழுதப்பட்ட ஓலை இருந்தது. “மனிதன் எவ்வளவு சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது” என்பதை உணர்ந்தார் திருவெண்காடர். பின் இல்லறத்தை துறந்த அவர், பிறப்பற்ற நிலை வேண்டி சிவனை வணங்கினார். துறவியானார். காசியை ஆட்சி செய்த பத்ரகிரியார் என்னும் மன்னனைத் தனது சீடனாக ஏற்றுக்கொண்டார். திருவிடைமருதூர் தலத்தில் இருவரும் சிலகாலம் தங்கியிருந்தனர். சிவன் பத்ரகிரியாருக்கு முதலில் காட்சி கொடுத்து முக்தி கொடுத்தார். பட்டினத்தார் தனக்கும் முக்தி வேண்டவே ஒரு கரும்பை கொடுத்து, அதன் நுனி இனிக்கும் இடத்தில் முக்தி தருவதாக கூறினார். அதன்பின் பல தலங்களுக்குச் சென்ற பட்டினத்தார் இத்தலத்திற்கு வந்தபோது நுனிக்கரும்பு இனித்தது. அங்கிருந்த சிலரை அழைத்த வெண்காடர், தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி கூறினார். அவர்களும் மூடவே, இலிங்க வடிவமாக மாறி முக்தி பெற்றார். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர், “பட்டினத்தார்” என்று அழைக்கப்பட்டார்.
அருள்மிகு பரசுராமர் திருக்கோயில், திருவல்லம்
அருள்மிகு பரசுராமர் திருக்கோயில், திருவல்லம், திருவனந்தபுரம் மாவட்டம், கேரளா மாநிலம்.
+91- 471-238 0706 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பரசுராமர் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | திருவல்லம் | |
மாவட்டம் | – | திருவனந்தபுரம் | |
மாநிலம் | – | கேரளா |
பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியைக் கொன்ற தோஷம் நீங்க பல தலங்கள் சென்று வழிபாடு செய்தார். ஒரு முறை அவர் சிவனின் கட்டளைப்படி இத்தலம் வந்து இங்குள்ள கரமனை ஆற்றில் நீராடினார். அப்போது அவருக்கு கிடைத்த இலிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து தவம் செய்து தோஷம் நீங்கப் பெற்றார். பின் தன் தாய்க்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்தார். பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோர் பரசுராமர் பிரதிஷ்டை செய்த இலிங்கத்தைப் பூஜை செய்துள்ளனர். வல்லம் என்றால் “தலை” என்று பொருள். முற்காலத்தில் திருவனந்தபுரம் அனந்த பத்மனாப சுவாமியின் தலைப்பகுதி இத்தலம் வரை நீண்டிருந்ததால் இத்தலம் “திருவல்லம்” எனப்பட்டது. திருவனந்தபுரம் பத்மநாபரைப் பிரதிஷ்டை செய்த வில்வமங்களம் சாமியாரின் வழிபாட்டால் பெருமாளின் உருவம் திருவனந்தபுரம் கோயில் மூலஸ்தானம் அளவிற்கு சுருங்கிவிட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் பெருமாளின் உடல் பகுதியாகவும், திருவல்லம் பரசுராமர் கோயில் தலைப்பகுதியாகவும், திருவனந் தபுரம் அருகே உள்ள திருப்பாதபுரம் கோயில் பெருமாளின் கால் பகுதியாகவும் விளங்குவதால் ஒரே நாளில் இம்மூன்று தலங்களையும் தரிப்பது மிகவும் நல்லது.
பரசுராமர் தன் தாய்க்கு பிதுர் தர்ப்பணம் கொடுத்த தலமாதலால் இத்தலம் “தட்சிண கயை” என அழைக்கப்படுகிறது. ஆதிசங்கரர் தன் தாய் ஆரியாம்பாளுக்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்துள்ளார். பரசுராமர் மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். வாழ்வில் முன்னேற ஒழுக்கம் வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்த அவதாரத்தின் நோக்கம். தன் தாய் ஒரு வாலிபனை ஏறிட்டு பார்த்து விட்டாள் என்ற ஒரே காரணத்துக்காக, தந்தை ஜமதக்னி முனிவரின் உத்தரவுப்படி தாயை வெட்டி கொன்றவர். பிறகு தந்தையிடம் பெற்ற வரத்தால் தாயை பிழைக்க வைத்தவர். சகல கலைகளையும் கற்றவர். அஸ்திரம் பிரயோகிப்பதில் இவருக்கு நிகர் யாருமில்லை. இவரது ஆயுதம் “பரசு” என்பதால் “பரசுராமர்” ஆனார். தன் தந்தை ஜமதக்னி முனிவரை அரசன் ஒருவன் கொன்றான் என்பதற்காக, ஒட்டு மொத்த அரச வம்சங்களையும் வேரோடு அழிக்க சபதம் எடுத்தார்.