Category Archives: திருமால் ஆலயங்கள்

அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருத்தங்கல்

அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருத்தங்கல்-626 130, விருதுநகர் மாவட்டம்.

+91- 94426 65443 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நின்ற நாராயணப்பெருமாள் (வாசுதேவன், திருத்தங்காலப்பன்)
தாயார் செங்கமலத்தாயார்(கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி)
தீர்த்தம் பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி
ஆகமம் வைகானஸம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருத்தங்கல்
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

பகவான் நாராயணன் திருப்பாற்கடலில் சயனித்திருந்த போது, அவர் அருகில் இருந்த ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூன்று தேவியரிடையே, தங்களில் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் தோழிகள்,”மற்ற தேவிகளைக்காட்டிலும் எங்கள் ஸ்ரீதேவியே உயர்ந்தவள். இவளே அதிர்ஷ்ட தேவதை. இவளே மகாலட்சுமி(ஸ்ரீ)என்று அழைக்கப்படுபவள். தேவர்களின் தலைவன் இந்திரன் இவளால்தான் பலம் பெறுகிறான். வேதங்கள் இவளைத் திருமகள் என்று போற்றுகின்றன. பெருமாளுக்கு இவளிடம் தான் பிரியம் அதிகம். இவளது பெயரை முன்வைத்தே பெருமாளுக்கு ஸ்ரீனிவாசன், ஸ்ரீபதி, ஸ்ரீநிகேதன் என்ற திருநாமங்கள் உண்டு. பெருமாள் இவளை தன் வலது மார்பில் தாங்குகிறார்என்று புகழ்பாடினர். பூமாதேவியின் தோழியரோ,”இந்த உலகிற்கு ஆதாரமாக விளங்குபவள் எங்கள் பூமிதேவியே. அவள் மிகவும் சாந்தமானவள். பொறுமை நிறைந்தவள். பொறுமைசாலிகளை வெல்வது அரிது. இவளைக்காப்பதற்காகவே பெருமாள் வராக அவதாரம் எடுத்தார். அப்படியெனில் இவளது முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள்என்று பாராட்டினர்.

அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோயில், திருக்கோவிலூர்

அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோயில், திருக்கோவிலூர் – 605757, விழுப்புரம் மாவட்டம்.

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருவிக்கிரமர்
தாயார் பூங்கோவல் நாச்சியார்
தல விருட்சம் புன்னைமரம்
தீர்த்தம் பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம்,ஸ்ரீசக்ரதீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கோவலூர்
ஊர் திருக்கோவிலூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு

மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக் கூடாது என்பதற்காக, அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான். அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன(குள்ள) அவதாரம் எடுத்து, யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தரவிடாது தடுக்கிறார். ஆனாலும் குருவின் பேச்சை மீறி தானம்தர மகாபலி ஒப்புக் கொள்கிறான். அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியைப் பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்றுணர்ந்த மகாபலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை வைத்து அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொன்னார். மகாபலி கமண்டலத்தை எடுத்து நீரை ஊற்றித் தானத்தை தாரை வார்க்க முயல, சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கமண்டலத்தின் மூக்குப்பகுதியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க, விஷ்ணு தர்ப்பைப் புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார். மகாபலி கமண்டலத்தை எடுத்து மூன்றாவது அடியைத் தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது.