Category Archives: திருமால் ஆலயங்கள்
அருள்மிகு சிங்கிரி கோயில், காவலூர்
அருள்மிகு சிங்கிரி கோயில், காவலூர், வேலூர் மாவட்டம்.
வேலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் 20 km தொலைவில் கண்ணமங்கலம் என்ற மலைகள் சூழ்ந்த அழகிய ஊர் உள்ளது. கண்ணமங்கலத்தில் இருந்து காட்டுக்கானல்லூர் சாலையில் சென்றால் 5 km தொலைவில் இந்த சிங்கிரிகோயில் உள்ளது. ஊரின் பெயரும், கோயிலின் பெயரும் ஒன்றே. இந்த கோயில் பல மலைகள் சூழ நடுவே சிறிய குன்றின் மேல் உள்ளது.
இங்கே எழுந்தருளியுள்ள ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் நான்கு கரங்களுடன் பக்தர்களுக்கு கருணையோடு அருள் பாலிக்கிறார். மற்ற கோயில்களில் லக்ஷ்மி தேவி, நரசிம்மரின் இடது மடியில் அமர்ந்திருப்பார். இத்திருக்கோயிலில் ஸ்ரீலக்ஷ்மி தேவி நரசிம்மரின் வலது மடியில் அமர்ந்து பக்தர்களின் கோரிக்கைகளை நரசிம்மரிடம் கூறி நிறைவேற்றி வைக்கிறார். ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் சன்னதியின் இடப் பக்கம், என் இதயத்தை திறந்து பார்த்தால் அதில் என் தாய் தந்தை வடிவில் இராமரும் சீதா தேவியும் இருப்பார்கள் என்று இதயத்தை பிளந்து காட்டி பக்திக்கு இலக்கணம் வகுத்த அனுமனின் சன்னதி உள்ளது.
அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில், காரமடை
அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில், காரமடை – 641 104, மேட்டுப்பாளையம் தாலுகா, கோயம்புத்தூர் மாவட்டம்.
+91- 4254 – 272 318, 273 018 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 5.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அரங்கநாதர் |
உற்சவர் | – | வெங்கடேசப்பெருமாள் |
தாயார் | – | ரங்கநாயகி |
தல விருட்சம் | – | காரைமரம் |
தீர்த்தம் | – | பிரம்ம, கருட மற்றும் அஷ்டதீர்த்தம் |
ஆகமம்/பூசை | – | பாஞ்சராத்ரம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | அரங்கவெங்கடேச அச்சுதன் |
ஊர் | – | காரமடை |
மாவட்டம் | – | கோயம்புத்தூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஒருசமயம் கருடாழ்வாருக்கு திருமால், மகாலட்சுமியின் திருமணக்கோலம் காண வேண்டுமென ஆசை எழுந்தது. அதனை சுவாமியிடம் தெரிவித்தார். அவர் விருப்பத்திற்காக சுவாமி, பூலோகத்தில் இத்தலத்தில் திருமணக்கோலம் காட்டியருளினார். அவருக்கு காட்சி தந்த சுவாமி, இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். முன்னர், இப்பகுதி காரை மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இப்பகுதியில் வசித்த இடையன் ஒருவன் பசுக்கள் மேய்த்து, வந்தான். அதில் ஒரு பசு மட்டும் தொடர்ந்து பால் சுரக்காமல் இருக்காமல் இருக்கவே, அதனை கண்காணித்தான். ஓரிடத்தில் காரை மரத்தின் அடியில் இருந்த புதர் மீது பால் சொரிந்ததைக் கண்டான். அப்புதரை அவன் வெட்டியபோது, ரத்தம் பீறிட்டது. தகவல் தெரிந்த மக்கள் இங்கு வந்தபோது அசரீரி தோன்றி, சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிருந்ததை உணர்த்தியது. அதன்பின்பு இங்கு கோயில் எழுப்பப்பட்டது.
மூலஸ்தானத்தில் சுவாமி சதுர வடிவில், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரது மேனியில் வெட்டுப்பட்ட தழும்பு இருக்கிறது. ராமானுஜர், கர்நாடக மாநிலத்திலுள்ள திருநாராயணபுரம் தலத்திற்கு சென்றபோது இங்கு சுவாமியை வழிபட்டுச் சென்றுள்ளார். திருப்பதியில் மலையப்பசுவாமி(வெங்கடாஜலபதி) மலையிலும், அலர்மேலுமங்கைத்தாயார் அடிவாரத்திலும் காட்சி தருகின்றனர். ஆனால் இத்தலத்தில் சுவாமி கீழேயும், அருகிலுள்ள மலையில் ரங்கநாயகி தாயாரும் காட்சி தருகின்றனர். இவளை, “பெட்டத்தம்மன்” என்று அழைக்கிறார்கள். சுவாமி, இந்த தாயாரையே திருக்கல்யாணம் செய்து கொள்வதாக ஐதீகம். மாசி பிரம்மோத்சவத்தின் ஐந்தாம் நாளில், இக்கோயிலில் இருந்து அர்ச்சகர் மலைக்கோயிலுக்குச் சென்று, கும்பத்தில் தாயாரை ஆவாஹனம் செய்து(எழுந்தருளச்செய்து) கோயிலுக்கு கொண்டு வருகிறார். அப்போது பெருமாள் சன்னதியில் இருந்து இராமபாணத்தை வெளியில் கொண்டு சென்று தாயாரை வரவேற்கும் வைபவம் நடக்கிறது. அதன்பின் கலசத்தை மூலஸ்தானத்தில் வைத்து பூஜிக்கின்றனர். மறுநாள் அதிகாலையில் சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. ரங்கநாதருக்கு வலப்புறத்தில் ரங்கநாயகிக்கு பிற்காலத்தில் தனிச்சன்னதி கட்டப்பட்டுள்ளது.