அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல்
அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல், நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4365 – 245 452, 245 350 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நவநீதேஸ்வரர் (வெண்ணெய் பெருமான்) | |
அம்மன் | – | சக்தியாயதாட்சி (வேல்நெடுங்கண்ணி) | |
தல விருட்சம் | – | மல்லிகை | |
தீர்த்தம் | – | க்ஷீர புஷ்கரணி, பாற்குளம் | |
ஆகமம் | – | காரண ஆகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | மல்லிகாரண்யம், திருச்சிக்கல் | |
ஊர் | – | சிக்கல் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சம்பந்தர் |
விண்ணுலகத்திலிருக்கும் காமதேனு பசு, பஞ்ச காலத்தில் மாமிசம் தின்று விட்டதாகவும், இதை அறிந்த சிவன், பசுவைப் புலியாக மாறும்படி சபித்ததாகவும் கூறப்படுகிறது. வருந்திய புலி இறைவனிடம் மன்னிப்பு கேட்டது.
மனமிறங்கிய சிவன்,”பூலோகத்தில் மல்லிகாரண்யம் என்ற தலத்தில் நீராடி, அங்குள்ள இறைவனை பூஜித்தால் சாபம் விலகும்” என்றார். சிவனின் அறிவுரைப்படி காமதேனு இத்தலம் வந்து குளம் அமைத்து நீராடிய போது, அதன் மடியில் இருந்த பால் பெருகி குளம் முழுவதும் பால் பொங்கியது. இதனால் இந்த குளம் “பாற்குளம்” ஆனது. தேங்கிய பாற்குளத்திலிருந்து வெண்ணெய் திரண்டது. சிவனின் ஆணைப்படி வசிட்டர் இத்தலம் வந்து, இந்த வெண்ணெய் மூலம் இலிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். இதனால் இத்தல இறைவன் “வெண்ணெய் நாதர்” ஆனார். வழிபாடு முடிந்தவுடன் இந்த லிங்கத்தை பெயர்த்து எடுக்கும் போது அது வராமல் சிக்கலை ஏற்படுத்தியதால் இத்தலம் “சிக்கல்” என்றழைக்கப்பட்டது. ஒரு முறை தேவர்கள், அசுரகுலத்தை சேர்ந்த மகாபலி சக்கரவர்த்தியால் ஏற்படும் கஷ்டங்கள் குறித்து பெருமாளிடம் முறையிட்டனர். இதற்காக திருமால் வாமன அவதாரம் எடுத்த போது, இத்தலம் வந்து சிவனை வழிபட்டு மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாகக் கூறப்படுகிறது. எனவே இத்தல பெருமாள் “கோலவாமனப்பெருமாள்” என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம்
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம், ஆதிகடவூர், திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4364 – 287 429,287 222, +91- 94420 12133 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பிரம்மபுரீஸ்வரர் | |
அம்மன் | – | மலர்க்குழல் மின்னம்மை, அம்மலக்குஜ நாயகி | |
தீர்த்தம் | – | காசி தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருக்கடவூர் மயானம் | |
ஊர் | – | திருமயானம், கடவூர்மயானம் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் |
ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் சிவன், பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உலகத்தை அழித்து விடுவார். இச்சமயத்தில், படைப்புக் கடவுளான பிரம்மாவும் அழிந்து போவார். புது யுகம் துவங்கும்போது, மீண்டும் பிரம்மாவை உண்டாக்கி, அவர் மூலமாக ஜீவராசிகள் பிறக்கும்படி செய்வார். அவ்வாறு பிரம்மாவை அழித்து, மீண்டும் உயிர்ப்பித்த தலம் இது. அதோடு, பிரம்மாவுக்கு உயிர்களை படைக்கும் இரகசியம் பற்றி இங்கு ஞான உபதேசம் செய்தருளினார். “பிரம்மபுரீஸ்வரர்” என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார்.
வள்ளி, தெய்வானையுடன் சிங்காரவேலர் என்ற திருநாமத்துடன் முருகப் பெருமான் இங்கு வீற்றிருக்கிறார். இவரது சன்னதி, விமானத்துடன் கூடிய தனி மண்டப அமைப்பில் வடிக்கப்பட்டிருக்கிறது. இவர் போருக்குச் செல்லும் கோலத்தில் கைகளில் வேல் மற்றும் வில் ஏந்தி, கழுத்தில் உருத்ராட்ச மாலை, பாதத்தில் குறடு (காலணி) அணிந்து காட்சி தருகிறார். இவரது சிலை, வில்லேந்திய இராமன் போல நளினமாக, இடப்புறமாக சற்றேசாய்ந்தபடி அமைக்கப்பட்டிருக்கிறது. முருகன் சிவனின் அம்சம் என்றாலும், இத்தலத்தில் இராமனின் சிலை போல வளைந்து காட்சி தருவதால், இவரை திருமாலின் அம்சமாகக் கருதுகின்றனர். மாமனைப் போல் மருமகன் என்றுகொண்டாடுகின்றனர். சிவசன்னதியின் ஒருபுறத்தில் சண்டிகேஸ்வரர் இருப்பது போல, இந்த முருகனுக்கும் ஒரு சண்டிகேஸ்வரர் உள்ளார். இவரை, “குக சண்டிகேஸ்வரர்” என்கின்றனர்.