அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துறை
அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துறை, நாச்சியார் கோவில் போஸ்ட், கும்பகோணம் தாலுகா தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 435-244 8138, 94436 50826 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர் | |
உற்சவர் | – | பிரணவேஸ்வரர் | |
அம்மன் | – | மங்களாம்பிகை | |
தல விருட்சம் | – | வன்னி | |
தீர்த்தம் | – | மங்கள தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருப்பேணு பெருந்துறை | |
ஊர் | – | திருப்பந்துறை | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சம்பந்தர் |
ஒரு முறை முருகப்பெருமான், படைப்பின் நாயகனான பிரம்மனிடம் “ஓம்” எனும் பிரணவ மந்திரத்தின் பொருள் கேட்டார். பிரம்மா அதன் பதில் தெரியாமல் விழித்தார். அர்த்தம் தெரிந்த முருகன், பிரம்மனை திட்டியதோடு சிறையிலும் அடைத்து விட்டார். படைப்புத்தொழில் பாதித்தது. சிவன் இதை கண்டித்தார். அதற்கு முருகன், ஓம் எனும் அர்த்தம் தெரிந்து கொண்டு பின் பிரம்மா படைப்புத்தொழிலை ஆரம்பிக்கட்டும் என்றார். முதலில் எனக்கு அர்த்தம் கூறு என்றார் சிவன். சிவன் மண்டியிட்டு, வாய் பொத்தி நிற்க, அவரது காதில் பிரணவ மந்திரத்தின் பொருளை கூறினார் முருகன். தந்தைக்கே உபதேசம் செய்த இந்த நிகழ்ச்சி சுவாமி மலையில் நடந்தது. பிரம்மனை சிறையிலடைத்ததும், சிவனுக்கு உபதேசம் செய்துவிட்டதும் முருகனுக்கு அகங்காரத்தை ஏற்படுத்தியது. இதனால் கோபம் கொண்ட சிவன் முருகனை ஊமையாக்கிவிட்டார். வருந்திய முருகன், தனக்கு பேச்சு கிடைப்பதற்காக திருப்பந்துறையில் சிவலிங்கம் அமைத்து, பூஜை செய்து தவத்தில் ஈடுபட்டார். முருகனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் பேசும் திறனை கொடுத்தருளினார். இதனால் இத்தல இறைவன் “பிரணவேஸ்வரர்” ஆனார். இங்கு முருகன் தான் சிறப்புக்குரியவர். சுவாமி சன்னதியின் முன்பு தண்டாயுதபாணி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவர் சின்முத்திரையுடன் கண்மூடி நின்ற நிலையில் தியான கோலத்தில், தலையில் குடுமியுடன் நிற்கிறார். காது நீளமாக வளர்ந்துள்ளது. கோபுர விமானத்தில் அர்த்தநாரீஸ்வரர், தெட்சிணாமூர்த்தியும், வீணா தெட்சிணாமூர்த்தியும் உள்ளனர். கோயிலின் வாசலில் குக விநாயகரும், சாட்சி விநாயகரும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். முருகன் சுவாமிமலையிலிருந்து இத்தலத்திற்கு தவமிருக்க வந்தபோது, பாதுகாப்பிற்காக விநாயகர் இரட்டை வடிவெடுத்து வந்ததாகவும், பின் இங்கேயே தங்கிவிட்டதாகவும் கூறுவர். பிரமன், உமாதேவி, முருகன் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது. கிழக்கு நோக்கிய சிறிய ராஜகோபுரம். கொடிமரம் நந்தி பலிபீடம் உள்ளன. பிராகாரத்தில் விநாயகர், நால்வர், சோழ மன்னன் மனைவி ஆகியோர் உள்ளனர். உள்சுற்றில் விநாயகர், மருகன், கஜலட்சுமி, நவக்கிரக சந்நிதிகள், சுவாமி சந்நிதியில் பழைமையான முருகப் பெருமான் உருவமுள்ளது.
அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோழம்பியம்
அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோழம்பியம், தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 4364-232 005 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கோகிலேஸ்வரர், கோழம்ப நாதர் | |
அம்மன் | – | சவுந்தரநாயகி | |
தல விருட்சம் | – | வில்வம், முல்லைக்கொடி | |
தீர்த்தம் | – | பிரம்ம தீர்த்தம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருக்கோழம்பம் | |
ஊர் | – | திருக்கோழம்பியம் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர், சம்பந்தர் |
சிவனும் பெருமாளும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடினர். ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர, பார்வதியிடம் கேட்கிறார் சிவன். பார்வதி பெருமாளுக்கு சாதகமான பதிலை கூறினாள். இதனால் பார்வதியைப் பசுவாக பூமியில் பிறக்கும்படி சாபம் இடுகிறார். இப்படி பசுவாக பிறந்த பார்வதி இத்தலம் வந்து சிவனை பூஜித்து, மீண்டும் தன் கணவனை அடைந்தாள். பெருமாளுக்கும் பிரம்மனுக்கும் சிவனின் அடிமுடி காண்பதில் பிரச்னை ஏற்பட்டது.
பிரம்மன் முடியை காண்பதற்காகச் சென்று, முடியாமல் போக தாழம்பூவின் துணையுடன், முடியை கண்டதாக பொய் சொன்னார். இதனால் கோபப்பட்ட சிவன் பிரம்மனை தண்டித்தார். பின்பு, பிரம்மன் இத்தலம் வந்து தன் பெயரால் ஒரு குளம் அமைத்து நீராடி இறைவனை வழிபட்டார்.
சந்தன் என்னும் வித்யாதரன், தேவேந்திரனின் சாபத்தினால் குயிலாக மாறினான். சாபம் நீங்க இத்தலம் வந்து பல்லாண்டு காலம் பூஜித்து, சாபம் நீங்கி சுய உருவை அடைந்தான். குயில் (கோகில) வடிவத்துடன் வந்து பக்தன் பூஜித்ததால் இப்பெருமான் “கோகிலேசுவரர்” என அழைக்கப்பட்டார். இந்திரன் தனக்கு அகலிகை, கவுதமரின் சாபம் நீங்க, பல காலம் இங்கு சிவனை பூஜித்து சாபம் நீங்கப் பெற்றான்.