Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

அருள்மிகு தயாநிதீஸ்வரர் கோயில், வடகுரங்காடுதுறை

அருள்மிகு தயாநிதீஸ்வரர் கோயில், வடகுரங்காடுதுறை, தஞ்சாவூர் மாவட்டம்.

+91 4374 240 491, 244 191 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தயாநிதீஸ்வரர், வாலிபுரீஸ்வரர்
உற்சவர் குலை வணங்கி நாதர்
அம்மன் ஜடாமகுட நாயகி
தல விருட்சம் தென்னை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கபிஸ்தலம், ஆடுதுறைப்பெருமாள்கோவில், திருவடகுரங்காடுதுறை
ஊர் வடகுரங்காடுதுறை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர்

சிவபெருமான் தனது லீலைகளை பல இடங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். வாலிக்கு வால் வளர அருள்செய்த இடமே குரங்காடுதுறை ஆகும். வாலிக்கு வால் அறுந்துபோனது எப்போது என்பது பற்றி கேள்வி எழலாம். வாலியைக்கண்டு ராவணனே நடுங்கியிருக்கிறான். அவனை வாலால் அடிக்கும்போது ஒரு வேளை வால் அறுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தனது வால் வளர அவன் சிவனை வணங்கினான்.

குரங்காடுதுறை தலத்திற்கு வந்து சிவனை வணங்கியதால் அவனது வால் மீண்டும் வளர்ந்தது. இங்கு சிவன் தயாநிதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அம்பாள் ஜடாமகுட நாயகி.
சிட்டுக்குருவி ஒன்றிற்கும் சிவபெருமான் மோட்சம் அளித்துள்ளார். எனவே இவர் சிட்டிலிங்கேஸ்வரர்என்றும் வழங்கப்படுகிறார்.

தயாநிதி என்ற பெயருக்கு ஏற்ப கருணை மழை பொழிந்துள்ளார்.

செட்டிப்பெண் எனப்படும் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி தாகம் தாளாமல் இக்கோயில் வழியே நடந்து வந்துகொண்டிருந்தாள். அவள் தாகத்தால் இறந்துவிடுவாளோ என்ற நிலைமை ஏற்பட்டது. சுற்றிலும் எங்கும் தண்ணீர் இல்லை. அவள் உயிர் போகும் தருணத்தில் அங்கிருந்த சிவலிங்கத்தை வணங்கினாள். சிவபெருமானே அங்கு தோன்றி அருகிலிருந்த தென்னைமரத்தை வளைத்து இளநீரை பறித்துக்கொடுத்தார். அந்தப்பெண் தாகம் நீங்கினாள். எனவே இறைவனுக்கு குலைவணங்கிநாதர்என்ற பெயரும் உள்ளது.

அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில், திருவைகாவூர்

அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில், திருவைகாவூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91-94435 86453, 96552 61510 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வில்வவனேசுவரர்
அம்மன் வளைக்கைநாயகி
தல விருட்சம் வில்வமரம்
தீர்த்தம் எமதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவைகாவூர், வில்வவனம்
ஊர் திருவைகாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்

தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றைத் துரத்திக்கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவரை தாக்க ஆரம்பித்தான். உடனே சிவபெருமான் புலிவடிவமெடுத்து வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறுவழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்துவிடுவமோ என்று நினைத்த வேடன் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன. அன்று மகா சிவராத்திரி நாள். ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார். அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான். நந்தி தேவன் இதை பொருட்படுத்தவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். அவருக்கு பயந்து நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார். பின் யமன் சிவனை வணங்க அவன் விடுவிக்கப்பட்டான். பின்பு ஆலய எதிரில் குளம் அமைத்து சிவனை வழிபட்டுச் சென்றதாக தல வரலாறு கூறுகிறது.