அருள்மிகு தயாநிதீஸ்வரர் கோயில், வடகுரங்காடுதுறை

அருள்மிகு தயாநிதீஸ்வரர் கோயில், வடகுரங்காடுதுறை, தஞ்சாவூர் மாவட்டம்.

+91 4374 240 491, 244 191 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தயாநிதீஸ்வரர், வாலிபுரீஸ்வரர்
உற்சவர் குலை வணங்கி நாதர்
அம்மன் ஜடாமகுட நாயகி
தல விருட்சம் தென்னை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கபிஸ்தலம், ஆடுதுறைப்பெருமாள்கோவில், திருவடகுரங்காடுதுறை
ஊர் வடகுரங்காடுதுறை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர்

சிவபெருமான் தனது லீலைகளை பல இடங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். வாலிக்கு வால் வளர அருள்செய்த இடமே குரங்காடுதுறை ஆகும். வாலிக்கு வால் அறுந்துபோனது எப்போது என்பது பற்றி கேள்வி எழலாம். வாலியைக்கண்டு ராவணனே நடுங்கியிருக்கிறான். அவனை வாலால் அடிக்கும்போது ஒரு வேளை வால் அறுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தனது வால் வளர அவன் சிவனை வணங்கினான்.

குரங்காடுதுறை தலத்திற்கு வந்து சிவனை வணங்கியதால் அவனது வால் மீண்டும் வளர்ந்தது. இங்கு சிவன் தயாநிதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அம்பாள் ஜடாமகுட நாயகி.
சிட்டுக்குருவி ஒன்றிற்கும் சிவபெருமான் மோட்சம் அளித்துள்ளார். எனவே இவர் சிட்டிலிங்கேஸ்வரர்என்றும் வழங்கப்படுகிறார்.

தயாநிதி என்ற பெயருக்கு ஏற்ப கருணை மழை பொழிந்துள்ளார்.

செட்டிப்பெண் எனப்படும் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி தாகம் தாளாமல் இக்கோயில் வழியே நடந்து வந்துகொண்டிருந்தாள். அவள் தாகத்தால் இறந்துவிடுவாளோ என்ற நிலைமை ஏற்பட்டது. சுற்றிலும் எங்கும் தண்ணீர் இல்லை. அவள் உயிர் போகும் தருணத்தில் அங்கிருந்த சிவலிங்கத்தை வணங்கினாள். சிவபெருமானே அங்கு தோன்றி அருகிலிருந்த தென்னைமரத்தை வளைத்து இளநீரை பறித்துக்கொடுத்தார். அந்தப்பெண் தாகம் நீங்கினாள். எனவே இறைவனுக்கு குலைவணங்கிநாதர்என்ற பெயரும் உள்ளது.

இக்கோயிலுக்கு முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களே வருகிறார்கள். கர்ப்பமான பெண்களை பொதுவாக கோயிலுக்கு செல்ல வேண்டாம் என சொல்வதுண்டு. ஆனால் இக்கோயிலில் சிவபெருமான் கர்ப்பிணிக்கு அருள் செய்ததால் இந்த தலத்திற்கு வந்தால் சுகமான பிரசவம் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

திருஞான சம்பந்தர், அருணகிரி நாதரால் பாடல் பெற்றது.

இங்கு விஷ்ணுதுர்க்கை கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறாள். எட்டு புஜங்கள் கொண்ட இந்த துர்க்கைக்கு பாலபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாக காட்சியளிப்பது சிறப்பாகும். வேறு எந்த துர்க்கை தலத்திலும் இம்மாதிரியான அதிசயம் நிகழ்வதாக தெரியவில்லை. நவராத்திரி காலத்தில் இந்த அதிசய துர்க்கையை வழிபடுவதன் மூலம் மனதில் தைரியம் அதிகரிக்கும். நவராத்திரி காலத்தில் மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் செல்வச்சிறப்பு கூடும்.

இவ்வாலயம் 5 நிலைகளைக் கொண்ட கோபுரத்துடனும் இரண்டு பிரகாரங்களுடனும் காணப்படுகிறது. ஆலய விமானத்தில் வாலி இறைவனை வழிபடும் சிற்பமும், ஈசன் கர்ப்பிணிப் பெண்ணிற்கு தென்னங்குலை வளைத்த சிற்பமும் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. கருவறையில் சற்று குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார் குலைவணங்குநாதர். அம்மன் சந்நிதியில் இறைவி அழகுசடைமுடி அம்மை சிரத்தில் உயர்ந்த சடாமுடியுடன் அழகுடன் காட்சி தருகிறாள். பௌர்ணமி நாட்களில் அம்மன் அலங்காரம் மிகவும் அழகுடன் இருக்கும். பௌர்ணமி அன்று மாலை வேளையில் ஒன்பது மஞ்சள் கொண்டு மாலை தொடுத்து அம்மனுக்கு அணிவிப்பது எல்லா தோஷங்களையும் நீக்கும் என்று பக்தர்களின் நம்பிக்கை. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். நடராஜரின் கல் சிற்பம், சிவகாமி அம்பிகை, அர்த்தநாரீஸ்வரர், இரட்டை பைரவர், சூரியன், நாகர், சனீஸ்வரர், இலிங்கோத்பவர், பிரம்மா, சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் இங்கு அருள்பாலிகின்றனர்.

தேவாரப்பதிகம்:

நீலமா மணிநிறத் தரக்கனை யிருபது கரத்தொடல்க வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில் ஏலமோ டிலையில வங்கமே யிஞ்சியே மஞ்சளுந்தி ஆலியா வருபுனல் வடகரை யடைகுரங் காடுதுறையே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 49வது தலம்.

திருவிழா:

பங்குனி உத்திர திருவிழா, நவராத்திரி பத்து நாள் விழா ஆகியவை சிறப்பாக நடக்கிறது. கார்த்திகையில் அம்பிகையை பெண்கள் 1008 முறை சுற்றி வருவது விசேஷ அம்சமாகும்.

பிரார்த்தனை:

பாவங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.சில பாவங்கள் நீங்க அனுமானும் இங்கு பூஜை செய்துள்ளார். இங்குள்ள தெட்சிணாமூர்த்தியை தரிசித்தால் குருபலம் பெருகுகிறது.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

வழிகாட்டி:

திருவையாற்றிற்கு அருகில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கி.மி. தொலைவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *