Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில், கெங்கமுத்தூர்

அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில், கெங்கமுத்தூர், பாலமேடு, மதுரை மாவட்டம்.
***********************************************************************************************

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த நாகம்மனை தரிசிக்க செல்லலாம்.

மூலவர்: – நாகம்மாள்

தல விருட்சம்: – வேம்பு

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – பாலமேடு, கெங்கமுத்தூர்

மாவட்டம்: – மதுரை

மாநிலம்: – தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் அம்மன், பசுமையான தென்னஞ்சோலைக் குள்ளே புற்றாக வளர்ந்து காட்சி அளித்து வந்தாள்.

நாளடைவில் தாய் கருமாரி, வேம்பு மரத்தடியில் சக்தியாக உருமாறி நின்றாள் இந்த சக்திசொரூபம் தான் ஒருமுறை ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு நாக அம்மனாக மாறினாள்.

வெள்ளத்தில் வலம் வந்த நாகம்மாள், இந்த இடத்தைத்தான் தனக்குரிய இடமாக தேர்ந்தெடுத்தாள். அத்துடன் மக்களுக்கு அருள் வழங்கும் வகையில் கருமாரியையும், பெரிய நாகம்மானையும், ராக்காயியையும் தன்னுடன் இணைத்து ஒன்று சேர்ந்து ஒங்கார சொரூபமான நாகம்மாள்என்ற திருநாமத்துடன் விளங்குகிறாள்.

பார்வதியின் 108 அவதாரத்தில் ஒன்றுதான் இந்த நாகம்மாள் அவதாரம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத்தான், அன்னை பராசக்தி, நாகம்மாள் அவதாரம் எடுத்துள்ளாள் என்கிறது புராணம்.

அருள்மிகு நாககன்னியம்மன் திருக்கோயில், தும்பூர்

அருள்மிகு நாககன்னியம்மன் திருக்கோயில், தும்பூர் – 605203, விழுப்புரம் மாவட்டம்.
**********************************************************************************************

+91-90940 61721 (மாற்றங்களுக்குட்பட்டது)

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 7மணி முதல் இரவு 7 மணி வரையும், மற்ற நாட்களில் காலை, மாலையில் சிறிது நேரம் மட்டுமே கோயில் திறக்கப்படும்.

மூலவர்: – நாககன்னியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – தும்பூர்

மாவட்டம்: – விழுப்புரம்

மாநிலம்: – தமிழ்நாடு

ஆமத்தூர் என்ற தலத்தில் (விழுப்புரம் அருகே உள்ளது) திருவட்டப்பாறை என்ற பகுதி இருந்தது.

ஒருமுறை இப்பகுதியை ஆண்ட அரசனின் முன்னிலையில் ஒரு வழக்கு வந்தது. தம்பி ஒருவன் தனது அண்ணன் தனக்குச் சேர வேண்டிய சொத்துக்களை எல்லாம் பறித்துக் கொண்டதாகப் புகார் கூறினான். அந்த அண்ணன், தனது சொத்துக்களையும், தம்பிக்குரிய சொத்துக்களையும் விற்று, அத்தொகைக்கு ரத்தினக் கற்கள் வாங்கி, துவாரமுள்ள ஒரு கம்புக்குள் வைத்து, ஊன்றுகோல் போல, அதை கையில் வைத்துக் கொண்டு திரிந்தான்.

அரசன் அண்ணனை அழைத்து விசாரித்தான். “அந்தப் பாவி பொய் சொல்கிறான் அரசே,” என அண்ணன் குற்றச்சாட்டை மறுத்தான். அண்ணனின் வீட்டில் சோதனையிடப்பட்டது. அங்கு ஊன்றுகோலைத் தவிர வேறு எதுவுமே இல்லை. அரசனுக்கு குழப்பமாகி விட்டது. திருவட்டப்பாறையில் ஏறி சத்தியம் செய்யும்படி உத்தரவிட்டான்.

அண்ணனும், தம்பியும் ஏறினர். தன் கையிலிருந்த தடியை மிகவும் சமயோசிதமாக, தனது தம்பியின் கையில் கொடுத்த அண்ணன்,”இப்போது எனது சொத்துக்களும், என் தம்பியின் சொத்துக்களும் என் தம்பி கைவசமே உள்ளது. என்னிடம் எதுவுமே இல்லை,” எனக்கூறி சத்தியம் செய்தான். அவனுக்கு எதுவும் ஆகவில்லை. தம்பியோ அதிர்ச்சியடைந்தான். தனது கம்பை பெற்றுக் கொண்ட அண்ணன் நல்லவன் போல் நடித்து அங்கிருந்து அகன்றான்.