Category Archives: சிவ ஆலயங்கள்
சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், நெய்வணை
அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், நெய்வணை, விழுப்புரம் மாவட்டம்.
+91-4149-291 786, 9486282952
காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். கோயில் அர்ச்சகர் வீடு அருகிலேயே இருப்பதால் எந்த நேரத்தில் சென்றாலும் சுவாமியை தரிசனம் செய்யலாம்.
மூலவர் | – | சொர்ணகடேஸ்வரர் | |
உற்சவர் | – | சந்திரசேகர் | |
அம்மன் | – | நீலமலர்க்கண்ணி | |
தல விருட்சம் | – | புன்னை | |
தீர்த்தம் | – | கிணற்று தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | நெல்வெண்ணெய் | |
ஊர் | – | நெய்வணை | |
மாவட்டம் | – | விழுப்புரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
முன்னொரு காலத்தில் இப்பகுதி வயல்கள் நிறைந்து, விவசாயம் கொழிக்கும் இடமாக இருந்தது. இதனால் மக்கள் அனைவரும் மிகவும் செழிப்பாக, குறைவில்லாத வாழ்க்கை வாழ்ந்தனர். வசதியான வாழ்க்கையால் மக்கள் இறை வழிபாட்டை முழுமையாக மறந்தனர். அவர்களுக்குப் பாடம் புகட்ட எண்ணிய சிவன், ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.
அவர் வருணனிடம் சொல்லி, இவ்விடத்தில் மட்டும் இடைவிடாது தொடர் மழையை பெய்யும்படி கூறினார். அதன்படி வருணனும் இங்கு மழை பொழிவித்தான். முதலில் மழையைக் கண்டு மகிழ்ந்த மக்கள், தொடர்ந்து நிற்காமல் பெய்யவே கலக்கம் கொண்டனர். இவ்வாறு தொடர்ந்து மழை பெய்ததால் ஊரில் இருந்த அனைத்து குளம், ஏரிகளும் நிரம்பி வழிந்தது. அப்போது ஊரின் மத்தியில் இருந்த பெரிய ஏரி உடைந்து தண்ணீர் வெள்ளமாக ஊருக்குள் பாய்ந்தது. அதுவரையில் இறை வழிபாட்டை மறந்திருந்த மக்கள், தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் நிலையில், தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டினர். மனம் இரங்கிய சிவன், ஒரு வாலிபர் வடிவில் வந்தார். ஒவ்வொருவரும் வீட்டில் வைத்திருந்த நெல் மூட்டைகளைத் தரும்படி கூறினார். அவர்களும் எடுத்து கொள்ளும்படி சொல்லவே, அவர் நெல்மூடைகளைத் தூக்கி வந்து ஏரியில் அணையாக கட்டி வெள்ளத்தை தடுத்தார். பின் அவர் வருணபகவானிடம் மழையை நிறுத்தும்படி சொல்லவே, அவரும் மழையை நிறுத்தினார். மழையினால் தங்கள் உடமைகள், பொருள் அனைத்தையும் இழந்து நின்ற மக்கள், உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் வாலிபனிடம், “நீ தான் எங்கள் தெய்வம்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினர். அவர்களிடம், சிவன், “உங்களது அனைத்து நிலைகளுக்கும் இறைவன் ஒருவனே காரணம். எனவே, எந்த சூழ்நிலையிலும் அவனை மட்டும் மறந்து விடாதீர்கள்” என்று சொல்லி, அனைவருக்கும் சொர்ணம் (தங்கம்) நிரம்பிய குடங்களை கொடுத்துவிட்டு, “இழந்ததை இதன் மூலம் மீட்டுக் கொள்ளுங்கள்” என்று சொல்லி மறைந்து விட்டார். மக்கள் புரியாமல் தவிக்கவே, அந்த வாலிபர் அவர்களுக்கு தன் சுயரூபம் காட்டி சுயம்புவாக எழுந்தருளினார். பின் மக்கள் இவ்விடத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பினர். சொர்ணம் தந்தவர் என்பதால், “சொர்ணகடேஸ்வரர்” என்று பெயர்பெற்றார். இவருக்கு “நெல்வெண்ணெய்நாதர்” என்ற பெயரும் உண்டு.
பக்தஜனேசுவரர் திருக்கோயில், திருநாவலூர்
அருள்மிகு பக்தஜனேசுவரர் திருக்கோயில், திருநாவலூர், விழுப்புரம் மாவட்டம்
+91- 94861 50804, 94433 82945, 04149-224 391
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பக்தஜனேசுவரர், ஜம்புநாதேசுவரர், திருநாவலீசுவரர் | |
அம்மன் | – | மனோன்மணி, நாவலாம்பிகை, சுந்தர நாயகி | |
தல விருட்சம் | – | நாவல்மரம் | |
தீர்த்தம் | – | கோமுகி தீர்த்தம், கருட நதி | |
ஆகமம் | – | காமிக ஆகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | ஜம்புநாதபுரி, திருநாமநல்லூர் | |
ஊர் | – | திருநாவலூர் | |
மாவட்டம் | – | விழுப்புரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சுந்தரர் |
அமிர்தத்தை கடைந்த காலத்தில், வாசுகி என்ற நாகத்தின் நஞ்சை, இறைவன் சாப்பிட்டு விடுகிறான். அதில் கொஞ்ச நஞ்சு, வித்தாக மாறி, பூமியில் விழுந்து நாவல் மரங்களாக முளைக்கப்பெற்றது. ஜம்புவனம் என்ற பெயரில் இந்த இடத்தில், இறைவன் தானாகத் தோன்றி, 4 யுகங்களாக இங்கு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆரம்ப காலத்தில் கருவறை மட்டும் முழுவதும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. பின்பு சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களால் பெரிய அளவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இது மிகப் பழமையான கோயில் ஆகும். ஜம்புநாதேசுவரர் என்று வழங்கி வந்த காலங்களில், சுந்தரர், “ஜம்பு” என்ற வடமொழிப் பெயரை “நாவல்” என்று அழைத்து “திருநாவலீசன்” என்று ஈசனையும் “திருநாம நல்லூர்” என்று ஊர்ப்பெயரையும் பாடலில் அழைத்துள்ளார்.
இங்குதான், இறைவனையே தோழனாக பழகிய சுந்தரர் பிறந்தது. ஒரு முறை சுக்கிர பகவான் காசிக்கு சென்று லிங்கம் ஒன்றைக் கொண்டுவந்து, பிரதிஷ்டை செய்து பல காலம் பூஜித்து வந்தார். இவரது பூஜைக்கு மகிழ்ந்த சிவன், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் “சஞ்சீவினி” மந்திரத்தை உபதேசித்தார். இதையறிந்த அசுரர்கள் சுக்கிரனைத் தங்கள் குல குருவாக ஏற்றுக்கொண்டார்கள். தேவ, அசுர போர் ஆரம்பமானது. தேவர்கள் அசுரர்களை கொன்று குவித்தனர். ஆனால், இறந்த அசுரர்களை எல்லாம் சுக்கிரன் தன் “சஞ்சீவினி” மந்திரத்தால் உயிர் பிழைக்க செய்தார். பயந்து போன தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவன் சுக்கிரனை அழைத்து, அவரை விழுங்கி விட்டார். சிவனின் வயிற்றில் பல காலம் யோகத்தில் இருந்தார் சுக்கிரன். பின்னர் அவரை வெளியே வரவழைத்து, நவக்கிரகத்தில் பதவியைக் கொடுத்து அனைவரும் செய்யும் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை வழங்கி வர உத்தரவிட்டார். பின்னர் சுக்கிரனுக்கு நான்கு குமாரர்கள், இரண்டு புதல்வியர் பிறந்தனர். அவர் பூலோகம் வந்து சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். இந்த இடமே இன்றைய திருநாவலூர் ஆகும். இங்கு வருவோருக்கு சுக்கிர கிரகம் தொடர்பான தோஷம் விலகி, செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.