Category Archives: சிவ ஆலயங்கள்

அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், இரும்பை

அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், இரும்பை, ஆரோவில், விழுப்புரம் மாவட்டம்.

+91- 413 – 268 8943, 98435 26601 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மகாகாளேஸ்வரர்
உற்சவர் சந்திரசேகரர்
அம்மன் குயில்மொழி நாயகி
தல விருட்சம் புன்னை
தீர்த்தம் மாகாள தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருஇரும்பை மாகாளம்
ஊர் இரும்பை
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

சிவனிடம் வரம் பெற்ற அம்பன், அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டனர். அவர்கள் இருவரும் பார்வதியைத் திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். அவர்களைப் பார்வதிதேவி, மகாகாளி அவதாரம் எடுத்து வதம் செய்தாள். இதனால் பிரம்மகத்தி தோஷம் பிடித்த அம்பாள், இத்தலத்தில் சிவனை நோக்கித் தவம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றாள்.

பிற்காலத்தில் மகாகாளர் எனும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது, வடக்கே உஜ்ஜயினியில் ஒரு இலிங்கத்தையும், தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு இலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து வணங்கினார்.

அவர் கிழக்கே வந்தபோது, இத்தலத்தின் மகிமையை அறிந்து, இங்கேயும் இலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து வணங்கினார். சுவாமியும் மகாகாளநாதர்என்ற பெயர் பெற்றார்.

அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், ஒழிந்தியாம்பட்டு

அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், ஒழிந்தியாம்பட்டு, விழுப்புரம் மாவட்டம்.

+91- 4147 – 235 472 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அரசலீஸ்வரர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் அரசு
தீர்த்தம் வாமன தீர்த்தம்
ஆகமம் காரணம், காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருஅரசிலி, ஒழிந்தியாப்பட்டு
ஊர் ஒழிந்தியாம்பட்டு
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

வாமதேவர் எனும் முனிவர், தான் பெற்ற சாபத்திற்கு விமோசனம் பெறுவதற்காக, பல தலங்களுக்கு சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது ஒரு அரசமரத்திற்கு அருகில் சற்று நேரம் அமர்ந்து ஒய்வெடுத்தார். அப்போது அவருக்கு ஒரு எண்ணம் எழுந்தது. “உடலுக்கு குளிர்ச்சி தரும் அரசமரத்தின் அடியில் சற்று நேரம் இருக்கும் நமக்கே இவ்வளவு சுகமாக இருக்கிறதே; இங்கு சிவன் இருந்தால் எப்படி இருக்கும்?” என மனதில் நினைத்து கொண்டார். அவரது எண்ணத்தை அறிந்த சிவன், அரசமரத்திற்கு அடியில் சுயம்பு இலிங்கமாக எழுந்தருளினார். மகிழ்ந்த வாமதேவ முனிவர், அருகில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினார். சிவன் அவர் முன் காட்சி தந்து சாபத்திற்கு விமோசனம் தந்தார். அரசமரத்தின் கீழ் சுவாமி சுயம்புவாக எழுந்தருளியதால் தலத்திற்கு அரசிலிஎன்றும், சுவாமிக்கு அரசலீஸ்வரர்என்றும் பெயர் ஏற்பட்டது.

பல்லாண்டுகளுக்கு பிறகு இத்தலத்தில் இருந்த இலிங்கம் மறைந்து விட்டது. சத்தியவிரதன் எனும் சாளுக்கிய மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். சிவன் மீது அளவிலாத பக்தி கொண்டிருந்த மன்னனுக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே, ஒரு நந்தவனம் அமைத்து, அதன் அருகிலுள்ள மற்றொரு சிவனுக்குப் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தான். பணியாள் ஒருவர் தினமும் நந்தவனத்தில் இருந்து மலர்களை எடுத்து வரும் பணியைச் செய்து வந்தார். ஒரு நாள் பணியாள் நந்தவனத்திற்கு சென்றபோது, அங்கு மலர்கள் இல்லை. அரண்மனைக்குத் திரும்பிய பணியாளன், மன்னனிடம் செடியில் மலர்கள் இல்லாத விபரத்தை கூறினான். மன்னரும் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அன்று வேறு மலர்களால் சுவாமிக்கு பூஜை செய்தான். மறுநாளும் பணியாள் நந்தவனம் சென்றபோது அங்கு செடியில் மலர்கள் இல்லை. அவன் மீண்டும் மன்னரிடம் சென்று தகவலைக் கூறினான். மலர்களை அதிகாலையில் யாரோ பறித்து சென்று விடுவதாக சந்தேகம் கொண்ட மன்னன், அடுத்தநாள் காலையில் தன் படையினருடன் நந்தவனத்திற்கு சென்று கண்காணித்தார். அப்போது நந்தவனத்திற்குள் புகுந்த மான் ஒன்று மலர்களை உண்டதைக் கண்டான். சிவபூஜைக்கு என்று ஒதுக்கப்பட்ட மலர்களை மான் சாப்பிட்டதைக்கண்ட மன்னன் கோபத்துடன், மான் மீது அம்பு எய்தான். மான் தப்பிவிடவே, காவலர்கள் அதனை விரட்டிச் சென்றனர். அந்த மான் ஒரு அரசமரத்தின் பொந்திற்குள் சென்று மறைந்து கொண்டது. மன்னன் மரத்திற்குள் அம்பு எய்தான். அதிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. மான் அம்பால் தைக்கப்பட்டிருக்கும் என நினைத்த மன்னன் உள்ளே பார்த்தபோது, அங்கு மான் இல்லை. அதற்கு பதில் இலிங்கம் (பல்லாண்டுகளுக்கு முன் மறைந்தது) இருந்தது. அதன் தலையில் இரத்தம் வழிந்தபடி இருந்தது. அதிர்ந்த மன்னன் சிவனை வேண்டினான். சிவன் மன்னனுக்கு காட்சி தந்து, மான் வடிவில் அருள்புரிந்தது தான் என்று உணர்த்தியதோடு, மன்னனுக்குப் புத்திர பாக்கியமும் கொடுத்து அருளினார். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் கட்டினான்.