Category Archives: இதர திருக்கோயில்கள்

அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில், சேர்த்தலா

அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில், சேர்த்தலா, மருத்தோர்வட்டம், ஆலப்புழா மாவட்டம், கேரளா.

+91 478 282 2962, 92491 13355

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தன்வந்திரி பகவான்
உற்சவர் தன்வந்திரி பகவான்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் சேர்த்தலா, மருத்தோர்வட்டம்
மாவட்டம் ஆழப்புழா
மாநிலம் தமிழ்நாடு

நோய்குணமடைய தங்கக்குடத்தில் மருந்து வழங்குபவர் தன்வந்திரி பகவான். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடையும் போது ஜோதி வடிவாக மஞ்சள் ஆடை தரித்து ஆபரண அலங்காரத்துடன் அமிர்தகலசத்தை கையில் ஏந்தி தோன்றியவர் இவர் ஆயுர்வேதத்தின் பிதாவாக போற்றப்படுகிறார். நான்கு கைகளை உடைய இவருக்கு, சங்கின் நாபியைப் போல மூன்று ரேகைகள் கழுத்தில் காணப்படும். தங்க ஆபரணங்கள் அணிந்து, சுருண்ட தலைமுடியுடன் இருப்பார். தசாவாதரத்துக்குப் பிறகு 11வது அவதாரமாக ஹயக்ரீவரும், 12வது அவதாரமாக தன்வந்திரியும் தோன்றினர்.

வயலார் கிராமத்தைச் சேர்ந்த தம்பான் இனத்தை சேர்ந்த ஒருவர் பல காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டர். பலரிடம் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. வைக்கத்திலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று வைக்கத்து அப்பன் சுவாமியை தரிசித்தார். வலி குறைந்தது. கோயிலை விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும் வலி வந்தது. எனவே கோயிலிலேயே தங்கிவிட்டார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய சிவன், “பக்தனே, இந்த கோயிலை விட்டு நீ வெளியே சென்றால் உனக்கு மறுபடியும் வலி ஏற்படும், எனவே நீ, இங்கிருந்து சேர்த்தலைக்கு சென்று அங்குள்ள கேளம் குளத்தில் முழ்க வேண்டும். நீருக்கு அடியில் மூன்று விக்ரகம் கிடைக்கும். முதலில் கிடைக்கும் விக்ரகம் மிகவும் சக்தி வாய்ந்ததால் அதனை குளத்திலேயே போட்டுவிடு. இரண்டாவது விக்ரகத்தை ஒரு அந்தணருக்குத் தானமாக கொடு. மூன்றாவதாக விக்ரகத்தை விதிப்படி பிரதிஷ்டை செய், அப்போது உன் நோய் அகலும்என்று கூறினார். அதன்படி இரண்டாவதாக கிடைத்த தன்வந்திரி விக்ரகத்தை வெள்ளுடு என்ற மனையை சேர்ந்த நம்பூதிரிக்கு தானம் செய்தார். அதை, நம்பூதிரி தன்னுடைய வீட்டிலேயே வைத்து பூஜை செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு மண்மூசு என்பவரின் உதவியுடன் கோயில் கட்டி, தன்வந்திரியைப் பிரதிஷ்டை செய்தார். இவர்கள் கோவில் நிர்வாகத்தை நல்ல முறையில் நடத்திவந்தனர். இவர்களுக்கு பிறகு வந்த தலைமுறையினர், கோயில் யாருக்கு சொந்தம் என்ற உரிமை பிரச்னையை எழுப்பினர். இதனால் மண்மூசு குடும்பத்தார் விக்ரகத்தின் கையை உடைத்து எடுத்து சென்றனர். கோட்டயம் அருகிலுள்ள ஓளச்ச என்ற இடத்தில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினர். வெள்ளுடு நம்பூதிரியின் குடும்பத்தினர் கை உடைந்த விக்ரகத்தை மருத்தோர் வட்டத்தில் பிரதிஷ்டை செய்தனர். உடைந்த கையை வெள்ளியில் செய்து பொருத்தினர். இவர் மேற்கு நோக்கி, வட்ட வடிவமான கர்ப்பகிரகத்தில் காட்சி தருகிறார். விக்ரகத்தின் இடது கையில் வெள்ளியால் ஆன அட்டைப்பூச்சி உள்ளது. கிருமிகள் ரத்தத்தில் இருப்பதால் அட்டை மூலம் ரத்தத்தை உறிஞ்ச வைப்பது அக்கால வழக்கம். இதைக் குறிக்கும் வகையில் தன்வந்திரியின் இடது கையில் வெள்ளியால் ஆன அட்டை காணப்படுகிறது.

அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில், வேதபுரி

அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில், வேதபுரி,தேனி மாவட்டம்.

+91- 4546- 253 908 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரஜ்ஞா தட்சிணாமூர்த்தி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் வேதபுரி
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

ஞானக் கடவுள் தெட்சிணாமூர்த்திக்குத் தனிக் கோயில் தேனி அருகே உள்ள வேதபுரியில் அமைந் துள்ளது. இத்தலம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. மூலவர் பிரஜ்ஞா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங்கள் அஸ்திவாரத்தின் கீழ் முறைப்படி வைக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தில் நமசிவாய பஞ்சாட்சர மந்திரத்தை குறிக்கும் வகையில் 5 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன.

கோயிலில் காலை பூஜை நேரங்களில் மட்டுமே தேங்காய் உடைக்கலாம். கேந்திப்பூ, கோழிக் கொண்டைப்பூ போன்றவைகளை பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாது. கொண்டைக் கடலைகளை மாலையாக கட்டி கொண்டு வருவதைத் தவிர்த்து பாக்கெட்டுகளாக கொண்டு வர வேண்டும். சுவாமிக்கு மாலை அணிவிக்க விரும்புபவர்கள் வில்வ மாலை கொண்டு வரலாம். கற்பூரம் ஏற்றுவதும் இக்கோயிலில் தடை செய்யப் பட்டுள்ளது.