அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில், திருக்குரக்கா
அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில், திருக்குரக்கா, மயிலாடுதுறை தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4364 – 258 785 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | குந்தளேஸ்வரர் | |
அம்மன் | – | குந்தளாம்பிகை | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | கணபதி நதி | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருக்கரக்காவல் | |
ஊர் | – | திருக்குரக்கா | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருநாவுக்கரசர் |
சேதுக்கரையில் (ராமேஸ்வரம்) சிவபூஜை செய்ய எண்ணிய இராமர், இலிங்கம் கொண்டுவரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். ஆஞ்சநேயரும் இலிங்கம் எடுத்து வரச் சென்றார். இதனிடையே, சீதாதேவி கடல் மணலில் இலிங்கம் சமைக்கவே, இராமர் அந்த இலிங்கத்திற்குப் பூஜை செய்தார். அதன்பின்பு இலிங்கத்துடன் வந்த ஆஞ்நேயர், இராமர் சிவபூஜை செய்துவிட்டதை அறிந்து கோபம் கொண்டார். மேலும், மணல் இலிங்கத்தைத் தனது வாலால் உடைக்க முயன்றார். முடியவில்லை. சிவ அபச்சாரம் செய்ததால் மன்னிப்பு வேண்டிய அவர் இத்தலத்தில் சிவபூஜை செய்தார். அப்போது சிவனுக்கு மலருடன், தான் காதில் அணிந்திருந்த குண்டலத்தையும் படைத்து வணங்கி மனஅமைதி பெற்றார். ஆஞ்சநேயர் குண்டலம் வைத்து வழிபடப்பட்டவர் என்பதால், இத்தல சிவன் “குண்டலகேஸ்வரர்” என்றும் பெயர் பெற்றார்.
ஆஞ்சநேயர் சன்னதி, சிவன் சன்னதி எதிரே அமைக்கப்பட்டுள்ளது. திருமால், இராமாவதாரம் எடுத்தபோது, அவருக்கு உதவுவதற்காக சிவனே ஆஞ்சநேயராக வந்தார். எனவே, ஆஞ்சநேயர் சிவஅம்சம் ஆகிறார். அவ்வகையில் இத்தலத்தில் சிவனே, தன்னை வழிபடும் கோலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். எனவே இவரை, “சிவஆஞ்சநேயர்” என்றும், “சிவபக்த ஆஞ்சநேயர்” என்றும் அழைக்கிறார்கள். இவரே இத்தலத்தில் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது. சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது கலியுக அதிசயமாகும்.
அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், தலைஞாயிறு
அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், தலைஞாயிறு, (திருக்கருப்பறியலூர்), நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4364 – 258 833 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | குற்றம் பொறுத்தநாதர் (அபராதசமேஸ்வரர்) | |
அம்மன் | – | கோல்வளை நாயகி (விஜித்ர வலையாம்பிகை) | |
தல விருட்சம் | – | கொடி முல்லை | |
தீர்த்தம் | – | சூரிய புஷ்கரிணி, பொற்றாமரை | |
ஆகமம் | – | காரண, காமிய ஆகமம் | |
பழமை | – | 1000வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | கருப்பறியலூர், கர்மநாசபுரம், மேலைக்காழி | |
ஊர் | – | தலைஞாயிறு | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | சம்பந்தர், சுந்தரர் |
இராவணனின் மகன் மேகநாதன். இந்திரனைப் போரில் வென்றதால் இவனுக்கு “இந்திரஜித்” என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முறை இந்திரஜித் வானத்தில் புஷ்பக விமானம் மூலம் பறந்து கொண்டிருந்தான். வழியில் விமானம் தடைபட்டு நின்றது. கீழே பார்த்தபோது சிவாலயத்தின் மீது பறந்ததை உணர்ந்தான் . இதனால் இந்த தடை ஏற்பட்டது என அறிந்தான். இதனால் வருந்திய இந்திரஜித் இத்தல தீர்த்தத்தில் நீராடி இறைவனை பூஜித்தான். இவனது கவலை நீங்கியது. விமானம் மறுபடியும் பறந்தது. இப்படிப்பட்ட அற்புத இலிங்கத்தை இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றான். அது முடியாமல் போனதால் மயங்கி விழுந்தான். இந்த செய்தியை கேட்ட இராவணன் இத்தல சிவனின் திருவடியில் விழுந்து, தன் மகனின் குற்றத்தை பொறுத்து அருளுமாறு வேண்டினான். இறைவனும் அருள் செய்தார். எனவே இத்தல இறைவன் “குற்றம் பொறுத்த நாதர்” எனப்படுகிறார்.
விசித்திராங்கன் என்ற மன்னன் தன் மனைவி சுசீலையுடன் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்தான். இறைவன் அருளால் அவனுக்கு குழந்தை பிறந்தது. இதனால் மகிழ்ந்த மன்னன் இத்திருக்கோயிலை அழகுற கட்டினான் என்பது வரலாறு. சூரியபகவான் இத்தலத்தில் வழிபட்டதால் “தலைஞாயிறு” என வழங்கப்படுகிறது.