அருள்மிகு பிராணநாதேசுவரர் திருக்கோயில், திருமங்கலக்குடி
அருள்மிகு பிராணநாதேசுவரர் திருக்கோயில், திருமங்கலக்குடி, தஞ்சாவூர் மாவட்டம்.
+91-435 – 247 0480 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பிராணநாதேசுவரர் | |
அம்மன் | – | மங்களாம்பிகை | |
தல விருட்சம் | – | கோங்கு, இலவு(வெள்ளெருக்கு) | |
தீர்த்தம் | – | மங்களதீர்த்தம் (காவிரி) | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருமங்கலக்குடி | |
ஊர் | – | திருமங்கலக்குடி | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் |
பதினோறாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரியாக இருந்த அலைவாணர் என்ற மந்திரி மன்னனிடம் அனுமதி பெறாமல் வரிப்பணத்தில் இக்கோயிலை கட்டினார். இதை அறிந்த மன்னன் கோபம் கொண்டு மந்திரியை சிரச் சேதம் செய்ய உத்தரவிட்டார். கொலையுண்ட மந்திரி தன்னை திருமங்கலக்குடியில் தகனம் செய்யுமாறு ஏற்கனவே கூறியிருந்ததால் அவரது உடல் திருமங்கலக்குடிக்கு எடுத்து வரப்பட்டது. ஊரின் எல்லைக்கு வரும்போது மந்திரியின் மனைவி மங்களாம்பிகை கோயிலுக்குச் சென்று தனது கணவரின் உயிரை திரும்பத்தருமாறு வேண்டினார். அவளது பிரார்த்தனை பலிக்கும் என்று அசரீரி கேட்டது. அதுபடி மந்திரி உயிர் திரும்பபெற்றார். மகிழ்ச்சியில் கோயிலுக்குள் சென்று பிராணநாதேசுவரரை கட்டிப்பிடித்து ஜீவதாயகன் என்று கூறி பூஜித்தார். அன்று முதல் இங்குள்ள ஈசன் “பிராணநாதேசுவரன் (ஜீவதாயகன்)” என்ற பெயரால் அழைக்கப்பெற்றார். கணவர் உயிரைத் திருப்பித்தந்த அம்பாள் மங்களாம்பிகை என்றழைக்கப்பட்டாள்.
இங்கு வந்து வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உண்டாக வேண்டும் என்று மந்திரியும் மனைவியும் வேண்டிக்கொள்ள, அதுபடியே சுவாமியும் அம்பாளும் அருளியதாக வரலாறு கூறுகிறது.
பஞ்ச மங்கள ஷேத்திரம் :
இத்தலம் பஞ்ச மங்கள ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
1. இந்த ஊரின் பெயர் மங்கலக்குடி, 2. அம்பாள் பெயர் மங்களாம்பிகை, 3. இக்கோயில் விமானம் மங்கள விமானம் 4. இத்தலத்தின் தீர்த்தத்தின் பெயர் மங்கள தீர்த்தம், 5. இத்தலத்து விநாயகர் பெயர் மங்கள விநாயகர் என்பதால் இத்தலம் மங்களமே உருவாக இருப்பதால் மங்கள ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
அருள்மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்
அருள்மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்,(வழி) நரசிங்கன் பேட்டை, திருவிடை மருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
+91-0435 – 2450 595, +91-94866 70043 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கோடீஸ்வரர்(வேத்ரவனேஸ்வரர்), கோடிகாநாதர் | |
அம்மன் | – | திரிபுர சுந்தரி, வடிவாம்பிகை | |
தல விருட்சம் | – | பிரம்பு | |
தீர்த்தம் | – | சிருங்கோத்பவ தீர்த்தம், காவிரிநதி | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | வேத்ரவனம் | |
ஊர் | – | திருக்கோடிக்காவல் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் |
மந்திரங்கள் தவறான கொள்கைக்கு பயன்படுத்தப்பட்டதால் மந்திரங்கள் மீதே கோபப்பட்ட துர்வாசர், மந்திரத்திற்கு சாபம் கொடுத்தார். மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக உச்சரிக்கப்பட்டு சாபவிமோசனம் பெற்றன. அதேபோல் மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனைத் தரிசனம் செய்துள்ளனர். எனவே இத்தல இறைவனின் திருநாமம் “கோடீஸ்வரர்” என்றும், ஊர் “திருக்கோடிக்கா” அழைக்கப்பட்டது.
கிருத யுகத்தில், பன்னீராயிரம் ரிஷிகளும் மூன்று கோடி மந்திர தேவதைகளும், ஞானமுக்தி அடையும் பொருட்டு, வேங்கடகிரியில், திருவேங்கடமுடையான் (வெங்கடேசப் பெருமாள்) திருச்சந்நிதியில், மந்திரங்களைக் கோஷித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் அங்குவந்த “துர்வாச மகரிஷி” இவர்களின் நோக்கத்தை அறிந்து, பரிகசித்தார். பின் அவர்களைப் பார்த்து, “சாயுஜ்ய முக்தியை தவத்தாலோ அல்லது மந்திர சக்தியாலோ பெற முடியாது. ஞானத்தால் மட்டும் தான் பெறமுடியும். குருவிற்கு பணிவிடை செய்து, அவரது ஆசியைப் பெற்று, அந்த ஆன்ம வித்தையைப் பயின்று, பிரம்ம ஞானம் பெற்று, பின் பரமேஸ்வரனின் அனுக்கிரகத்தால் மட்டும் தான் ஞானமுக்தி பெற முடியும்” என்று கூறினார். இதைக் கேட்ட மந்திர தேவதைகளுக்கு கடும் கோபம் வந்தது. தங்கள் வலிமையைப் பழித்த துர்வாசரைத் தூற்றினர். “முக்தியடைய எங்களுக்கு சக்தியில்லை என்கிறீர்களா? வெங்கடாஜலபதியை குறித்து தவம் செய்து, இக்கணமே தாங்கள் முக்தியடையவோம்” என்று சூளுரைத்தனர். தம்மையும் பிரம்ம வித்தையையும் அவமதித்த மந்திர தேவதைகளை, “நீங்கள் பலப்பல ஜென்மங்கள் எடுத்து துன்பப்பட்டு இறுதியில்தான் முக்தி பெறுவீர்கள். அதுவும் இந்த தலத்தில் கிடைக்காது. வெங்கடேசப் பெருமாளும் அதை உங்களுக்கு அளிக்க முடியாது” என்று துர்வாசர் சபித்தார். துர்வாசருடைய கோபத்தைப் பொருட்படுத்தாத மந்திர தேவதைகள், தாங்கள் சபதம் செய்ததுபோல், திருமயிலையிலேயே தங்கி புஷ்கரணியில் நாராயணனைத் குறித்து கடும் தவம் புரியத் தொடங்கினர்.
ஆனால் பன்னீராயிரம் ரிஷிகள், துர்வாசருடைய அறிவுரையை ஏற்று, அவரைப் பின் தொடர்ந்து காசிக்குச் சென்றனர். அங்கு மணிகர்ணிகையில் நீராடி, டுண்டிகணபதி, விஸ்வேஸ்வரர், விசாலாட்சி, பிந்துமாதவர் மற்றும் காலபைரவரை தரிசனம் செய்தனர். மகரிஷிகளுக்கு எதை உபதேசம் செய்வது என்று துர்வாசர் சிந்தித்துக் கொண்டிருக்கும் சமயம், காசிவிஸ்வநாதர் அவரது கனவில் தோன்றி, மகரிஷிகளுக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து “அத்யாத்ம” வித்தையை கற்றுத் தரும்படியும், ஒரு மாதம் காசியில் தங்கிவிட்டு, பின் மகரிஷிகளுடன் திருக்கோடிக்கா வரும்படியும் கட்டளையிடுகிறார். அவ்வாறே துர்வாசர் திருக்கோடிக்கா தலத்திற்கு வந்து சேர்ந்தார். பின் திருக்கோடீஸ்வரரின் ஆணைப்படி, மகரிஷிகளுக்கு சிருங்கோத்பவ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வித்து, அத்தீர்த்தத்தை சிறிது கையில் எடுத்துக்கொண்டு, அவர்களுடன் முக்கோடி மந்திரமந்திரதேவதைகள் கடுந்தவம் புரியும் இடமான திருமயிலைக்கு வந்தார்.