அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், கொட்டாரம்
அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், கொட்டாரம், நெடுங்காடு வழி, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்.
+91- 4368 – 261 447 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஐராவதீஸ்வரர் | |
அம்மன் | – | வண்டமர் பூங்குழலி , சுகந்தகுந்தளாம்பிகை | |
தல விருட்சம் | – | பாரிஜாதம் | |
தீர்த்தம் | – | வாஞ்சியாறு, சூரிய தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருக்கோட்டாறு | |
ஊர் | – | திருக்கொட்டாரம் | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர் |
ஐராவதம் சொர்க்கலோகத்தில் இந்திரனுக்கு வாகனமாக உள்ள யானை. வெண்மை நிறமும் நான்கு கொம்புகளும் உடையது. ஒரு முறை துர்வாச முனிவர் காசியில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு இறைவனுக்கு சாத்திய தாமரை மலர் ஒன்றை யானைமீது அமர்ந்து பவனிவரும் இந்திரன் கையில் கொடுத்தார். செல்வச் செருக்கால் இந்திரன் அம்மலரை ஒரு கையால் வாங்கி யானை மீது வைத்தான். யானை அம்மலரை தன் துதிக்கையால் கீழே தள்ளிக் காலால் தேய்த்தது. துர்வாசர் இந்திரனையும் யானையையும் சபித்தார். அவர் சாபப்படி ஐராவதம் காட்டானையாகி நூறு ஆண்டுள் பல தலங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு, மதுரையில் இறைவன் அருளால் பழைய வடிவம் பெற்றது என்பது திருவிளையாடற்புராண வரலாறு. ஐராவதம் காட்டானையாய் வழிபட்ட தலங்களில் திருக்கோட்டாறும் ஒன்று.
சுபமகரிஷி என்பவர் நாள்தோறும் வந்து இப்பெருமானைத் தரிசித்து வந்தார். ஒருநாள் அவர் வருவதற்கு நேரமானதால் கோயில் கதவு சார்த்தப்பட்டது. அதைக் கண்ட “சுபர்” தேனீ வடிவம் கொண்டு உள்ளே சென்று பெருமானை வழிபட்டார். அதுமுதல் அங்கேயே தங்கிவிட்டார். அக்காலந் தொடங்கி மூலவர் சந்நிதியில் தேன்கூடு இருந்து வருகிறது. தரிசிக்கச் செல்வோர் அக்கூட்டைத் தொடாது எட்டி நின்று பார்த்துவிட்டு வரவேண்டும். ஆண்டுக்கொரு முறை இக்கூட்டிலிருந்து தேனையெடுத்துச் சுவாமிக்குச் சார்த்துகிறார்களாம். மீண்டும் கூடு கட்டப்படுகின்றதாம். இம் மகரிஷியின் – சுபமக ரிஷியின் உருவமே வெளிச் சுற்றில் பின்றத்தில் உள்ளது. முன் மண்டபத்திற்கு அருகில் குமாரபுவனேசுவரர் கோவிலுள்ளது. மேற்கு நோக்கிய பெரிய சிவலிங்கம் இங்குள்ளது. இதை அகத்தியரும் சுகமகரிஷியும் சேர்ந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். கோடு – கரை. வாஞ்சியாற்றின் கரையில் விளங்குவதால் இத்தலம் கோட்டாறு எனப்பட்டது. வெள்ளையானை தன் கோட்டினால் மேகத்தை இடித்து மழையை ஆறுபோலச் சொரிவித்து வழிபட்டதால் கோட்டாறு எனவும் பெயர் வந்திருக்கலாம். அகத்தியர், சுபகமுனிவர், குமாரபுவனதேவர், முதலியோர் வழிபட்டு அருள்பெற்ற சிறப்புடையது இத்தலம். மூன்று நிலை இராஜகோபுரத்துடன் நாற்புறமும் மதில் சூழ அழகுற விளங்குகிறது. உள்ளே கொடிமரமும், துவார கணபதி சிலையும் உள்ளன. கொடி மரத்தின் வடபுறம் அகத்திய இலிங்கம் கொண்ட தனிச் சன்னதி மேற்குமுகம் கொண்டு திகழ்கிறது.
அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், திருவாண்டார்கோயில்
அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், திருவாண்டார்கோயில், கண்டமங்கலம் வழி, புதுச்சேரி.
+91- 99941 90417 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வடுகீஸ்வரர் (பஞ்சனதீஸ்வரர்) | |
உற்சவர் | – | பஞ்சமூர்த்தி | |
அம்மன் | – | திரிபுரசுந்தரி | |
தல விருட்சம் | – | வன்னி | |
தீர்த்தம் | – | வாமதேவ தீர்த்தம் | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருவடுகூர், வடுகூர்ஊ | |
ஊர் | – | திருவண்டார்கோயில் | |
மாவட்டம் | – | புதுச்சேரி | |
மாநிலம் | – | புதுச்சேரி | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
படைப்புத்தொழிலுக்கு அதிபதியான பிரம்மா, சிவனை போலவே ஐந்து தலைகளைக் கொண்டவராக இருந்தார். இதனால், அவருக்கு மனதில் அகம்பாவம் உண்டானது. அவரது கர்வத்தை அழிக்க எண்ணினார் சிவன். ஒருசமயம் பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி, அவரை சிவன் என நினைத்து கணவனுக்கு செய்யும் மரியாதைகளைச் செய்தார். பிரம்மா மறுக்காமல் இருந்து விட்டார். இதைக்கண்டு கோபம் அடைந்த சிவன், பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கொய்து விட்டார். ஆணவம் அழியப்பெற்ற பிரம்மா, சிவனை வணங்கி தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். சிவன் அவருக்கு மன்னித்து அருள் செய்தார். இந்த வரலாறு இந்த தலத்தில் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது. பிரம்மாவின் தலையை எடுத்த சிவன் இங்கு, “வடுகீஸ்வரராக” அருளுகிறார்.
சுவாமிக்கு முன்பு அர்த்த மண்டபத்தில் 8 தூண்கள் இருக்கிறது. அதன் அருகே நின்று தரிசனம் செய்தால் இராஜபலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருஞானசம்பந்தர் இவரை “வடுகூரில் ஆடும் அடிகளே” என்று பதிகம் பாடியிருக்கிறார். அம்பாள் திரிபுரசுந்தரி லட்சுமி அம்சத்துடன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு “வடுகர் நாயகி” என்றும் பெயர் உண்டு. பைரவர் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். அஷ்டமி தினங்களில் சுவாமி மற்றும் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதனால் தோஷங்கள், பிணிகள் நீங்குவதாக நம்பிக்கை. திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு சுவாமி, பைரவருக்கு தேன், கருப்பஞ்சாறு அபிஷேகம் செய்து பின் நாய்க்கு சாதம் படைத்து வழிபடுகின்றனர். இங்கு முருகன் இடது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் காட்சி தருகிறார். 6 முகம், 12 கரங்களில் ஆயுதங்களுடன் இருக்கும் இவரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என அருணகிரியார் திருப்புகழில் பதிகம் பாடியிருக்கிறார். கோஷ்டத்தில் உள்ள துர்க்கை 8 கைகளுடன், போர்க்கோலத்தில் இருக்கிறாள். வரப்பிரசாதியாக திகழும் இவளை வழிபட்டால் எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை. இவளுக்கு இடப்புறத்தில் அர்த்தநாரீஸ்வரர், வலது புறம் பிரதோஷநாயனார் ஆகியோர் இருக்கின்றனர். இத்தலத்தின் தலவிநாயகரின் திருநாமம் வலம்புரி விநாயகர்.