அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளம்புதூர்
அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளம்புதூர், செல்லூர், குடவாசல் வழி, திருவாரூர் மாவட்டம்.
+91- 4366 – 262 239 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வில்வாரண்யேஸ்வரர் (வில்வநாதர், திருக்கொள்ளம்பூதூருடையார்) | |
அம்மன் | – | சவுந்தர நாயகி (அழகிய நாச்சியார்) | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | பிரம்ம, அக்னி, கங்கா தீர்த்தம் | |
ஆகமம் | – | காமிக ஆகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | கூவிளம்பூர், செல்லூர், திருக்களம்பூர் | |
ஊர் | – | திருக்கொள்ளம்புதூர் | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சம்பந்தர் |
பல சிவத்தலங்களைத் தரிசித்து பாடி வந்த ஞானசம்பந்தர், இத்தலம் வரும் போது வழியில் உள்ள வெட்டாறில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஓடம் ஓட்டுபவர்களால் ஓடம் செலுத்த முடியாமல் ஆற்றின் கரையிலேயே ஓடத்தை விட்டு சென்றனர். ஆனால் சிவனை தரிசிக்காமல் செல்ல கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார் சம்பந்தர். எனவே ஆற்றின் கரையில் இருந்த ஓடம் ஒன்றை அவிழ்க்க செய்து, அதன் மீது தன் அடியவர்களுடன் ஏறினார். தமது நாவையே ஓடக்கோலாக கொண்டு, “கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டமாடிய நம்பனை யுள்கச் செல்வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறரு ணம்பனே” எனும் திருப்பதிகம் பாடினார். இறைவனின் திருவருளால் ஓடம் ஆற்றின் மறுகரையை அடைந்தது. திருஞான சம்பந்தர் கோயிலை அடைந்து, மீதி பதிகங்ளை பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு. இந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடக்கிறது.
பிரம்மா தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று. தலவிருட்சம் வில்வம். கூவிளம் என்பதற்கு வில்வம் என்பது பெயர். “கூவிளம்புதூர்” என்ற பெயர் மருவி காலப்போக்கில் “கொள்ளம்புதூர்” ஆனது.
அருள்மிகு வண்டுறைநாதர் திருக்கோயில், திருவண்டுதுறை
அருள்மிகு வண்டுறைநாதர் திருக்கோயில், திருவண்டுதுறை, திருவாரூர் மாவட்டம்.
+91- 4367-294 640 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வண்டுறைநாதர், பிரமரேசுவரர் | |
அம்மன் | – | வேனெடுங்கண்ணி, பிரகதாம்பாள் | |
தல விருட்சம் | – | வில்வ மரம் | |
தீர்த்தம் | – | பிரம்மபுரீச தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருவெண்டுறை, வண்டுதுறை | |
ஊர் | – | திருவண்டுதுறை | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சம்பந்தர் |
பிருங்கி முனிவர் என்பவர் சிவனைத்தவிர வேறு தெய்வத்தை வழிபடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் இருந்தார். இதையறிந்த பார்வதி, அம்முனிவரின் உடலில் சக்தியாக உள்ள ரத்தம், சதை ஆகியவற்றை நீங்கச் செய்தார். உடல் தள்ளாடிய நிலையிலும் முனிவர் சிவனைத் தொடர்ந்து வழிபாடு செய்தார். சிவன் முனிவருக்கு அருள்புரிந்தார். இதனால் பார்வதி, சிவனை வழிபட்டு அவரது இடது பாகம் பெற்றார். சிவனும் சக்தியும் பிரிக்க முடியாதவர்கள் என்பதை உணராத முனிவர், வண்டு உருவம் எடுத்து, அர்த்தநாரீஸ்வர திருமேனியில் ஒரு பாதியை துளைத்து கொண்டு சிவனை மட்டும் வணங்கினார். கோபமடைந்த பார்வதி பிருங்கி முனிவரை வண்டு உருவாகவே இருக்கும்படி சாபமிட்டார். மனம் வருந்திய முனிவர் சாப விமோசனம் வேண்டினார். மனமிறங்கிய பார்வதி, “சக்தியின்றி சிவமில்லை. சிவனின்றி சக்தியில்லை. திருவண்டுதுறைத் தலத்தில் எங்கள் இருவரையும் இணைத்து வழிபாடு செய்து சாபவிமோசனம் பெறுக” என அருள்புரிந்தார். பிருங்கிமுனிவர் வண்டு உருவில் வழிபாடு செய்ததால் இத்தலம் “திருவண்டுதுறை” ஆனது. இப்போதும் கூட சிவன் சன்னதியில் வண்டின் ஒலி கேட்கிறது என்கிறார்கள்.
திருமால் இத்தல சிவனை பூஜித்து, சிவபூஜையின் சிறப்பை உலகிற்கு எடுத்துக் காட்டினார். பிரம்மா தன் படைப்புத்தொழிலில் தடை ஏற்பட்ட போது, இங்கு வழிபாடு செய்து தடை நீங்க பெற்றார். துருவ மன்னன், அங்கவன், அரிச்சந்திரன், முசுகுந்த சோழனின் மகன் தியாகசோழன் ஆகியோரும் இங்கு வழிபாடு செய்துள்ளனர்.