அருள்மிகு நெல்லையப்பர்திருக்கோயில், திருநெல்வேலி
அருள்மிகு நெல்லையப்பர்திருக்கோயில், திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம்.
+91- 462 – 233 9910 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர்) | |
அம்மன் | – | காந்திமதி, வடிவுடையம்மை | |
தல விருட்சம் | – | மூங்கில் | |
தீர்த்தம் | – | பொற்றாமரைக்குளம் (ஸ்வர்ண புஷ்கரணி கருமாறித் தீர்த்தம், சிந்துபூந்துறை | |
ஆகமம் | – | காரண ஆகமம், காமீக ஆகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | திருநெல்வேலி | |
மாவட்டம் | – | திருநெல்வேலி | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
தமிழகத்தில் மூன்று மூலவர்களைக் கொண்ட கோயில் நெல்லையப்பர் கோயில் மட்டுமே. மூலவரான “வேண்ட வளர்ந்தநாதர்” சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் இருக்கிறார். இவரே “நெல்லையப்பர்” எனப்படுகிறார். இந்த இலிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இதை அபிஷேகத்தின் போது காணலாம். சிவனுக்குள் சக்தி அடக்கம் என்பதை இக்கோலம் உணர்த்துவதாக சொல்கிறார்கள். எனவே, சுவாமிக்கு “சக்தி இலிங்கம்” என்ற பெயரும் உண்டு. இது தவிர, மகாவிஷ்ணு பூஜித்த இலிங்கம் ஒன்றும், மூலவர் சன்னதிக்கு முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னதியும் இருக்கிறது. இவரே இக்கோயிலின் முதல் இலிங்கம் எனக் கருதப்படுவதால், இவருக்குத் தான் முதல் பூஜை நடக்கிறது. மூவருமே மூலவராகவே வணங்கப் படுகின்றனர். இங்கு பஞ்ச தெட்சிணாமூர்த்தி களையும் தரிசிக்கலாம்.
வேதபட்டர் என்பவர் இறைவனுக்கு தினமும் நைவேத்யம் படைப்பதற்காக உலரப் போட்டிருந்த நெல், மழையினால் நனையாதவாறு இறைவன் வேலியிட்டு காப்பாற்றியதால் இறைவனுக்கு “நெல்வேலிநாதர்” என்று பெயர் ஏற்பட்டது. இத்தலமும் “நெல்வேலி (திருநெல்வேலி)” எனப் பெயர்பெற்றது.
மூங்கில் மரங்கள் நிறைந்த காட்டின் வழியாக அந்நாட்டினை ஆண்டு வந்த மன்னருக்கு தினந்தோறும் பால் நிரம்பிய குடங்களை எடுத்துச் செல்வார் இராமக்கோன் என்னும் ஆயன். இவ்வாறு தினம் பால் எடுத்துச் சென்ற வேளையில் ஒருநாள், அங்குள்ள மூங்கில் கன்றில் மோதி கால் தடுக்கி பால் மட்டும் சிந்தும், ஆனால் குடம் உடைவதில்லை. இது போன்ற நிகழ்வு நாள்தோறும் நிகழ்ந்தது. அதிசயித்த இராமக்கோன் தினமும் மூங்கில் கன்றில் கால் இடருவதால் அதனைக் கோடரியால் வெட்டினார். வெட்டிய வேகத்தில் அதில் இருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. இதனைக் கண்டு பயந்த ஆயன் மன்னரிடம் சென்று முறையிட அவர் தன் பரிவாரங்களுடன் அவ்விடத்திற்கு வந்தார். மரத்தில் குருதி வடிவத்தைக் கண்டார். அந்நிலையில் ஆயன் இறைவனை எண்ணி பெருமானின் திருவிளையாடல் தான் இது என்பதை உணர்ந்து, இறைவனது முழு திருமேனியையும் காட்டியருள்க என வேண்டி இரத்தம் வரும் பகுதியைத் தொட்டவுடன் குருதி வருவது நின்றது. நிலவினைச் சூடிய தலையில் ஆயனால் வெட்டுபட்ட காயத்துடன் அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க முழு, வானுயர வடிவத்தினையும், பின் அரசனின் வேண்டுகோளுக்கிணங்க குறுகிய தோற்றத்துடனும் காட்சியளித்தார். திருமூலநாதருக்கும், வேயின் முளைத்த லிங்கத்திற்கும் ஏனைய மூர்த்திகளுக்கும் ஆகம விதிப்படி திருக்கோயில் அமைத்து விழாக்களும் நடத்தினார் அரசர். இத்திருவிளையாடல் பங்குனி மாதம் செங்கோல் திருவிழாவின் நான்காம் நாள் அன்று நடைபெறுகிறது.
அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில், குற்றாலம்
அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில், குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம்.
+91-4633-283 138, 210 138 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | குற்றாலநாதர் | |
அம்மன் | – | குழல்வாய்மொழி, பராசக்தி (இரண்டு அம்மன் சன்னதிகள்) | |
தல விருட்சம் | – | குறும்பலா | |
தீர்த்தம் | – | சிவமதுகங்கை, வட அருவி, சித்ரா நதி | |
ஆகமம் | – | மகுடாகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திரிகூட மலை | |
ஊர் | – | குற்றாலம் | |
மாவட்டம் | – | திருநெல்வேலி | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் |
திருக்கயிலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடக்கிறது. இதை தரிசிக்க பிரம்மா, விஷ்ணு, முப்பத்துமுக்கோடி தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர் வந்துள்ளனர். இதனால் பூமியின் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர ஆரம்பிக்கிறது. இதை சமப்படுத்த சிவன் அகத்தியரை அழைத்து,”நீ ஒருவன் மட்டும் தென்திசை சென்றால் போதும், உலகம் சமநிலைக்கு வந்துவிடும். அத்துடன் இதுநாள் வரை குற்றாலத்தில் விஷ்ணுவாக அருள்பாலித்து வந்த என்னை, சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூஜை செய்தால் எங்களது திருமணத்தை அங்கிருந்தபடியே தரிசிக்கலாம்” எனக்கூறி அனுப்பிவைக்கிறார்.
சிவனின் கட்டளைப்படி அகத்தியர் குற்றாலம் வந்து, விஷ்ணு வடிவில் அருள்பாலிக்கும் சிவனை தரிசிக்கச் செல்கிறார். ஆனால் அங்கிருந்த துவாரபாலகர்கள் சைவ சமயத்தை சேர்ந்த அகத்தியரை கோயிலுக்குள் விடவில்லை. இதனால் வருத்தமடைந்த அவர் இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள இலஞ்சிக்குமாரர் கோயிலுக்குச் சென்றார். அங்கு வெண்மணலில் இலிங்கம் பிடித்து, சிவனை வழிபட்டார். தான் குற்றாலத்தில், சிவதரிசனம் செய்ய அருளும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த முருகன்,”அகத்தியரே! தாங்கள் சிவக்கோலத்தை கலைத்துவிட்டு, வைணவக்கோலத்துடன் கோயிலுக்குள் சென்று பெருமாளை சிவலிங்கமாக்கி வழிபாடு செய்யுங்கள்” என யோசனை கூறுகிறார். முருகனின் யோசனைப்படி அகத்தியரும் நெற்றியில் திருமண் இட்டு, கழுத்தில் துளசி மாலை அணிந்து கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்கிறார். உடனே திருமாலின் கையில் சங்கு இருந்த இடத்தில் மான், துளசி இருந்த இடத்தில் சந்திரன், பொட்டு இருந்த இடத்தில் நெற்றிக்கண், இரத்தினம் இருந்த இடத்தில் பாம்பு என அனைத்தும் மாறியது. அத்துடன் உயரமாயிருந்த திருமாலின் தலையில் கைவைத்து, “திருமேனி குறுக குறுக” என சிவனை வேண்டி பிரார்த்தனை செய்ய, நெடிய திருமால் குறுகிய சிவனாக மாறி விடுகிறார். அந்த இடத்திலேயே அகத்தியருக்கு திருமணக் காட்சி கிடைக்கிறது. இன்றும் கூட இத்தலத்தில் பகலில் தேவர்களும், இரவில் அகத்தியரும் பூஜை செய்வதாக கூறப்படுகிறது. அகத்தியர் தன் கைவிரல்களால் சிவலிங்கத்தில் தலையில் வைத்து அழுத்தியதால் இன்றும் கூட இலிங்கத்தின் மேல்பகுதியில் விரல்களின் தடம் இருப்பதை காணலாம்.