அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வல்லக்கோட்டை
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வல்லக்கோட்டை, காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 411- 272 225 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 5.30 மணி முதல் 1 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
சுப்பிரமணியசுவாமி (கோடை ஆண்டவர்) |
|
தலவிருட்சம் | – |
பாதிரி மரம் |
|
தீர்த்தம் | – |
வஜ்ஜிர தீர்த்தம் |
|
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – |
வல்லக்கோட்டை |
|
மாவட்டம் | – | காஞ்சிபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இலஞ்சி என்னும் தேசத்தில் சங்கொண்டபுரம் என்னும் நகரை பகீரதன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். இந்த மன்னனைக் காண நாரத முனிவர் வந்தார். ஆணவம் பிடித்த மன்னனோ நாரதரைக் கண்டு கொள்ளவே இல்லை. இதனால், கோபமடைந்த நாரதர் அருகிலிருந்த வனத்திற்கு சென்றார். அங்கு கோரன் என்ற அரக்கன் பலநாடுகளை வென்று வெற்றிக்களிப்பில் வந்து கொண்டிருந்தான். அவனை கண்ட நாரதர், பகீரதனின் ஆணவத்தை அடக்க இவன் தான் சரியான ஆள் என முடிவெடுத்தார். பின் அவனிடம் தானே வலிய சென்று, “கோரனே. நீ பல நாடுகளை வெற்றி கொண்டிருந்தாலும் இந்த இலஞ்சி நாட்டை வென்றால்தான் உனது திக்விஜயம் நிறைவுபெறும்” என்று தனக்கே உரித்தான பாணியில் சிண்டு முடித்து விட்டு அமைதியாகச் சென்றுவிட்டார். அசுரன் இலஞ்சி நாட்டின் மீது போர் தொடுத்தான். இதைச் சற்றும் எதிர்பார்க்காத மன்னன் மிரண்டு விட்டான். பகீரதனைப் போரில் வென்றான் அசுரன். நாடு, நகரம் என அனைத்தும் இழந்த மன்னன் காட்டிற்கு சென்றான். அங்கு நாரத முனிவர் இருந்தார். அவரிடம் இவன் நடந்ததை கூறி தன்னை மன்னிக்கும் படி வேண்டினான். நாரதரும் இதற்கான விமோசனத்தை துர்வாசமுனிவர் தான் தர முடியும். அவரிடம் சென்று கெஞ்சினால் நல்வழி காட்டுவார் என கூறி சென்று விட்டார். பகீரதனும் அந்த அடர்ந்த காட்டில் நீண்ட காலம் மிகுந்த சிரமப்பட்டான். பின் ஒரு வழியாக துர்வாசமுனிவரை தேடிக் கண்டு பிடித்து அவரிடம் தன் நிலையைக் கூறி, நாட்டை மீட்க வழி கேட்டு மன்றாடினான். துர்வாச அவனிடம், “வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து இங்குள்ள பாதிரி மரத்தடியில் உள்ள முருகனை வழிபட்டால் உனது குறைகள் நீங்கி வாழ்வு வளம் பெறும்” என்று கூறிச்சென்றார். இவனும் துர்வாச கூறியபடி முருகனை வழிபட்டான். சிறிது காலம் கழித்து முருகனுக்கு அவனே ஒரு கோயிலும் கட்டி வள்ளி, தெய்வானையுடன் பிரதிஷ்டை செதான். இவன் கட்டிய கோயில் தான் வல்லக்கோட்டை சுப்பிரமணியர் கோயில்.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புத்தூர், உசிலம்பட்டி
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புத்தூர், உசிலம்பட்டி, மதுரை மாவட்டம்.
+91 – 4552 – 251 428, 98421 51428
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
சுப்பிரமணிய சுவாமி |
|
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப்பெயர் | – |
குமார கோயில் |
|
ஊர் | – |
புத்தூர், உசிலம்பட்டி |
|
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
நாகாசுரன் என்ற கொள்ளையன் மக்களைத் துன்புறுத்தி வந்தான். இப்பகுதியை ஆண்ட மன்னரால், அவனை அழிக்க முடியவில்லை. முருக பக்தரான அம்மன்னர், அவனை அழிக்கும்படி முருகனிடம் முறையிட்டார். ஒருமுறைநாகாசுரன் மக்களின் உடைமைகளைச் சூறையாடினான். அப்போது, முருகப்பெருமான் ஒரு இளைஞனின் வடிவில் காலணி மற்றும் வீரதண்டை அணிந்து, வாள் மற்றும் கத்தியுடன் அங்கு வந்தார். நாகாசுரனை மறித்த முருகன், “அடேய். நீ செய்வது தவறு. எனவே, செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிவிடு” என எச்சரித்தார். முருகப்பெருமான் யாரையும் அவ்வளவு எளிதில் அழிக்கமாட்டார். அவர் கருணைக்கடல். பத்மாசுரனுக்கு கூட அவர் ஞானம் கொடுத்து மயிலாகவும், சேவலாகவும் ஆட்கொள்ளவே செய்தார். அவ்வகையில், நாகாசுரனுக்கும் எச்சரிக்கையே விடுத்தார். ஆனால், யாராலும் எதிர்க்க முடியாத தன்னை, ஒரு இளைஞன் துணிச்சலுடன் வந்து எதிர்த்ததால் அவமானமடைந்த நாகாசுரன், அவரைத் தாக்க முயன்றான். முருகன் அவனை வீழ்த்தினார். மக்கள் தங்களைக் காத்த இளைஞனை மன்னரிடத்தில் கூட்டிச் சென்ற போது, அவர் மறைந்து விட்டார். தான் வணங்கிய முருகப்பெருமானே இளைஞனாக வந்து, நாகாசுரனை அழித்தார் என்பதை உணர்ந்த மன்னர், இவ்விடத்தில் அவருக்கு கோயில் கட்டினார். இளைஞனாக வந்ததால், “குமரன்” என்றும், தலத்திற்கு “குமார கோயில்” என்றும் பெயர் ஏற்பட்டது. இப்பகுதியில் பாம்பு புற்றுகள் நிறைந்திருந்ததால் பிற்காலத்தில் “புத்தூர்” என்ற பெயர் ஏற்பட்டது. மூலவர் சுப்பிரமணியர் இடுப்பில் கத்தி, பாதத்தில் காலணி, காலில் போர் வீரர்கள் அணியும் தண்டை அணிந்திருக்கிறார். இத்தகைய கோலத்தில் முருகனைத் தரிசிப்பது அபூர்வம். முதலில் இவர் உக்கிரமாக இருந்தார். திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் இவரது உக்கிரத்தைக் குறைப்பதற்காக இவருடன் வள்ளி, தெய்வானையைப் பிரதிஷ்டை செய்தனர். அப்போது சுவாமியின் கையில் இருந்த வில்லுக்கு பதிலாக வேலைப் பிரதிஷ்டை செய்தனர். தைப்பூசத்தன்று இவருக்கு விசேஷ மகாபிஷேகம் நடக்கும்.