அருள்மிகு ஐயனார் திருக்கோயில், திருநாரையூர்
அருள்மிகு ஐயனார் திருக்கோயில், திருநாரையூர், காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஐயனார் | |
அம்மன் | – | பூரணை, புஷ்கலை | |
தல விருட்சம் | வேப்பமரம், ஆலமரம் | ||
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | திருநாரையூர் | |
மாவட்டம் | – | கடலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சங்க காலத்திலேயே தமிழகத்தில் ஐயனார் வழிபாடு பிரபலம் அடைந்து விட்டது. தமிழகத்தில் தொன்மையான ஊர்களில் வடக்கில் பிடாரியும், தெற்கில் ஐயனாரும் கோயில் கொண்டுள்ளனர். ஐயனார் என்பவர் பிச்சாண்டவராக வந்த சிவபெருமானுக்கும், மோகினியாக வந்த திருமாலுக்கும் ஏற்பட்ட காதலால் உருவான கடவுளாவார். கையனார் என்ற சொல்லே பிற்காலத்தில் ஐயனார் ஆயிற்று என்றும் கூறுவர். மிகவும் புகழ் பெற்ற தலமான திருநாரையூரில் எழுந்தருளியுள்ள ஐயனாரும் புகழ், பெருமைக்குரிய கடவுளாவார். தெய்வ அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பியின் திருஅவதாரத் தலம் திருநாரையூர் ஆகும். ஒருமுறை நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி இவ்வூரைக் கடந்து மாலை வேளையில் தாய்வீட்டிற்குச் சென்றுள்ளார். இப்பகுதி அப்போது அடர்ந்த மரங்கள் நிறைந்த காடாக இருந்துள்ளது. அச்சமயம் அவளுக்குப் பிரசவ வலி வந்துவிடவே துணைக்கு யாரும் இன்றித் தவித்திருக்கிறாள். அப்பொழுது ஐயனார் ஒரு பெண்ணாகத் தோற்றம் பெற்று நல்ல முறையில் குழந்தை பிறக்கச் செய்தார். பின் இரவு முழுவதும் அவளுக்கு துணையாக இருந்து விட்டு விடிந்தவுடன் மறைந்து விட்டார். அதன்பிறகுதான், தனக்குத் தாயாக வந்து பிரசவத்திற்கு உதவியவர் ஐயனார் என்பது அவளுக்குத் தெரிந்திருக்கிறது. இதன் அடிப்படையில் ஐயனாருக்கு இங்கு கோயில் கட்டி பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், வண்டியூர்
அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், வண்டியூர், மதுரை, மதுரை மாவட்டம்.
+91 452 262 3060 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் அதிகாலையிலேயே நடை திறந்திருக்கும்.
மூலவர் | – | வீர ஆஞ்சநேயர் | |
தீர்த்தம் | – | அழகர் கோயில் தீர்த்தம் | |
ஆகமம் | – | பாஞ்சராத்ரம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | வண்டியூர் | |
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்கள் மதுரையில் தமக்கென கோயில் அமைக்க முடிவு செய்து, வைகைக் கரையில் இக்கோயிலை அமைத்ததாகவும், இதற்கென அவர்கள் தனியே ஆஞ்சநேயர் விக்ரகத்தினை ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து இங்கே பிரதிஷ்டை செய்து வழிபடத்தொடங்கியதாகவும் செவி வழிச்செய்திகள் கூறுகின்றன.
வைகை நதிக்கறையில் தென் திசை நோக்கி அமைந்துள்ள இத்தலம் வைகை ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படினும் கூட இக்கோயிலின் வாசலுக்கு முன்பாக மட்டுமே தண்ணீர் தொட்டுச் செல்லும் என்பது பெருமையாகக் குறிப்பிடத்தக்க செய்தியாகக் கூறப்படுகிறது.
இத்தலத்துடன் இணைந்து சிவன், விநாயகர், நாகர் மற்றும் பாண்டி முனிசாமிகளுக்கு தனிச்சந்நிதிகள் உள்ளது. இங்கு நைவேத்தியமாக தயிர் சாதம் படைக்கப்படுகிறது. இத்தலத்தில் ஆஞ்சநேயர் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.