அருள்மிகு சாஸ்தா திருக்கோயில், இரட்டக்குடி

அருள்மிகு சாஸ்தா திருக்கோயில், இரட்டக்குடி, நாகை மாவட்டம்.

மாசுபடாத தூய்மையான சில்லென்ற காற்று. எளிமையான சின்னச் சின்ன வீடுகள், பச்சைப் பசேலென்ற வயல்கள், சிற்றோடைகள் கொண்ட சிறிய கிராமம் இரட்டக்குடி. நாகை மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் கொல்லுமாங்குடி வழியாகப் பூந்தோட்டத்தை அடுத்து இந்த கிராமம் உள்ளது. இங்கு கொலுவிருக்கும் ஐயனாரின் திருநாமம் ஆகாச சாஸ்தாவாகும். பூர்ணா, புஷ்கலாம்பாள் சமேதராய் காட்சிதரும் சாஸ்தாவின் கோயில் மிகப் பழமையானதாகும். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்.


சாஸ்தாவின் வலதுபுறம் பிள்ளையாரின் சிலையும் உள்ளது. எதிர்ப்புறம் பைரவரும், குதிரை அருகில் வாளுடன் வீற்றிருக்கும் வீரனின் வடிவங்களையும் தரிசிக்கலாம். அதைத் தவிர வீரனுக்கு தனிச் சந்நிதியும் உள்ளது. கோயில் அருகிலேயே திருக்குளம் உள்ளது. கோயிலின் உள்ளே மேற்புறம் கூரையில் இரு பக்கமும் துளைகள் உள்ளன. சாஸ்தா ஆகாசத்திலிருந்து இறங்கி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். சில காலம் முன்பு கோயிலைப் புதுப்பிக்கும்போது அந்தத் துளைகளை மூடி விட்டார்களாம். ஐயனார் ஒரு பக்தனின் கனவில் தோன்றி, ‘நான் ஆகாச சாஸ்தா. கூரையின் மேல்புறம் துளைகள் வையுங்கள்’ என்று சொல்லி மறைந்தாராம். இப்போதும் அந்தக் கோயிலின் மேற்கூரையில் துளைகள் இருப்பதைக் காணலாம்.

அருள்மிகு வீரப்ப அய்யனார் திருக்கோயில், தேனி

அருள்மிகு வீரப்ப அய்யனார் திருக்கோயில், தேனி, தேனி மாவட்டம்.

தேனியில் இருந்து 5 கி.மீ., தூரம் மலையடிவாரத்தில் இயற்கையான சூழ்நிலையில் வீரப்ப அய்யனார் கோயில் அமைந்துள்ளது. சித்திரை முதல் தேதியில் இங்கு திருவிழா கோலாகலமாக நடக்கும். சிவ அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் சுவாமி கருவறைக்கு மேற்கூரை கிடையாது. சுயம்பு தோற்றத்திற்கு ஆகாய கங்கை அபிஷேகமே உகந்தது என்பதை உணர்த்தும் பொருட்டு இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட கிரீடம், ஒட்டியாணம் போன்றவைகளை இலகுவாக போட முடியாததைக் கொண்டு சுயம்பு வளர்ச்சியை அறியலாம். கோயில் வளாகத்தில் குறி சொல்வது பிரபலமாக கருதப்படுகிறது. மனதில் உள்ள குறைகள், ஆதங்கங்கள், தவறுகள் போன்றவைகளை உருக்கமாக வேண்டிக் கொண்டால் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இதற்கு பரிகாரமாக கோயிலுக்குத் தேவைப்படும் பொருட்களை பக்தர்கள் தந்து மகிழ்கின்றனர். பலருடைய வாழ்வில் ஏற்பட்ட போராட்டங்கள், சிக்கல்கள் நீங்கியுள்ளதால் வாழ்க்கை குறை நீக்கும் தலமாக இப்பகுதியினரால் வணங்கப்படுகிறது.