Monthly Archives: February 2012

அருள்மிகு இராகவேந்திரர் திருக்கோயில், ஈரோடு

அருள்மிகு இராகவேந்திரர் திருக்கோயில், ஈரோடு, ஈரோடு மாவட்டம்.

+91-424- 221 4355 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ராகவேந்திரர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ஈரோடு
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

கடந்த 17ம் நூற்றாண்டில் பல்லாரி மாவட்டம் ஹோசபேட்டைக்கு அருகில் வாழ்ந்து வந்த திம்மண்ணபட்டர், கோபிகாம்பாள் ஆகியோருக்கு பிறந்தவர்தான் இராகவேந்திரர். இவர் சிறு வயதிலேயே சகல சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தார். இவர் கும்பகோணத்தை சேர்ந்த ஸ்ரீசுதீந்தரரிடம் சிஷ்யராக அமர்ந்து சகல வித்தைகள் பயின்றார். சுதா பரிமளம் என்ற நூலை இயற்றினார். இவருடைய குடும்ப வாழ்க்கை கஷ்டமாக அமைந்தது. இவருடைய மனைவி மனமுடைந்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் ராகவேந்திரர் பல இடங்களுக்குத் தீர்த்த யாத்திரை சென்றார். கல்வி அறிவு இல்லாதவனுக்கு உயர்ந்த பதவி கிடைக்கும்படியும், தஞ்சாவூரில் ஏற்பட்ட பஞ்சத்தை நிவர்த்தி செய்தும், கருநாகம் தீண்டிய தன் சீடனை உயிர்பித்தும் அற்புத சாதனைகளை செய்தார். முன் காலத்தில் பிரகலாதன் யாகம் செய்த பூமியாக மந்த்ராலயம் இருந்ததை அறிந்த இராகவேந்திரர், அந்த இடத்திலேயே தமது பிருந்தாவனத்தை தாமே நிர்மாணம் செய்து கொள்ள தீர்மானித்தார். அதன்படி 1671ம் ஆண்டு இவர் தன் சிஷ்யர்கள் முன்னிலையில் இந்து எனகே கோவிந்தாஎன்று தொடங்கும் பாடலை இயற்றி, அதை பாடிக் கொண்டும் நாராயணாஎன்ற நாமச்சரணம் செய்து கொண்டும் பிருந்தாவனப் பிரவேசம் செய்து ஜீவ சமாதி அடைந்தார். இதையடுத்து தென் இந்தியா முழுவதும் பிருந்தாவனங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மக்களின் விருப்பத்திற்கு இணங்கி வேத விற்பன்னர் இராமாச்சார் என்பவர் 250 ஆண்டுகளுக்குமுன் ஆந்திர மாநிலம் மந்த்ராலயம் சென்று அங்கிருந்து மிருத்திகையை (புனித மண்) தலையில் சுமந்தவாறே, நடந்தே ஊர் ஊராக வந்து, ஈரோடு காவேரி கரையில் சாஸ்திரப்படி சிறிய பிருந்தாவனம் ஸ்தாபித்து கும்பாபிஷேகம் செய்தார்.

அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில், திருவொற்றியூர்

அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில், திருவொற்றியூர், திருவள்ளூர் மாவட்டம்.

+91- 98402 84456 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பட்டினத்தார்
தலவிருட்சம் வில்வம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருவொற்றியூர்
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

சோழ நாட்டு தலைநகரம் காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த சிவசருமர், சுசீலை தம்பதியருக்கு, சிவபெருமானே மகனாகப் பிறந்தார். மருதவாணர் என்றழைக்கப்பட்ட இவரை, இதே ஊரில் வசித்த திருவெண்காடர் சிவகலை தம்பதியர் தத்தெடுத்து வளர்த்தனர். திருவெண்காடர் வணிகம் செய்து வந்தார். மருதவாணரும் வளர்ப்புத்தந்தையின் தொழிலையே செய்தார். ஒருசமயம் வியாபாரத்திற்கு சென்று திரும்பிய மருதவாணர், தவிட்டு உமியால் செய்த எருவை மட்டும் கொண்டு வந்தார். இதைக்கண்டு கோபம் கொண்ட தந்தை, எருவை வீசியெறிந்தார். அதற்குள் காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கேஎன்று எழுதப்பட்ட ஓலை இருந்தது. “மனிதன் எவ்வளவு சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாதுஎன்பதை உணர்ந்தார் திருவெண்காடர். பின் இல்லறத்தை துறந்த அவர், பிறப்பற்ற நிலை வேண்டி சிவனை வணங்கினார். துறவியானார். காசியை ஆட்சி செய்த பத்ரகிரியார் என்னும் மன்னனைத் தனது சீடனாக ஏற்றுக்கொண்டார். திருவிடைமருதூர் தலத்தில் இருவரும் சிலகாலம் தங்கியிருந்தனர். சிவன் பத்ரகிரியாருக்கு முதலில் காட்சி கொடுத்து முக்தி கொடுத்தார். பட்டினத்தார் தனக்கும் முக்தி வேண்டவே ஒரு கரும்பை கொடுத்து, அதன் நுனி இனிக்கும் இடத்தில் முக்தி தருவதாக கூறினார். அதன்பின் பல தலங்களுக்குச் சென்ற பட்டினத்தார் இத்தலத்திற்கு வந்தபோது நுனிக்கரும்பு இனித்தது. அங்கிருந்த சிலரை அழைத்த வெண்காடர், தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி கூறினார். அவர்களும் மூடவே, இலிங்க வடிவமாக மாறி முக்தி பெற்றார். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர், “பட்டினத்தார்என்று அழைக்கப்பட்டார்.