அருள்மிகு இராகவேந்திரர் திருக்கோயில், ஈரோடு
அருள்மிகு இராகவேந்திரர் திருக்கோயில், ஈரோடு, ஈரோடு மாவட்டம்.
+91-424- 221 4355 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ராகவேந்திரர் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | ஈரோடு | |
மாவட்டம் | – | ஈரோடு | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
கடந்த 17ம் நூற்றாண்டில் பல்லாரி மாவட்டம் ஹோசபேட்டைக்கு அருகில் வாழ்ந்து வந்த திம்மண்ணபட்டர், கோபிகாம்பாள் ஆகியோருக்கு பிறந்தவர்தான் இராகவேந்திரர். இவர் சிறு வயதிலேயே சகல சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தார். இவர் கும்பகோணத்தை சேர்ந்த ஸ்ரீசுதீந்தரரிடம் சிஷ்யராக அமர்ந்து சகல வித்தைகள் பயின்றார். சுதா பரிமளம் என்ற நூலை இயற்றினார். இவருடைய குடும்ப வாழ்க்கை கஷ்டமாக அமைந்தது. இவருடைய மனைவி மனமுடைந்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் ராகவேந்திரர் பல இடங்களுக்குத் தீர்த்த யாத்திரை சென்றார். கல்வி அறிவு இல்லாதவனுக்கு உயர்ந்த பதவி கிடைக்கும்படியும், தஞ்சாவூரில் ஏற்பட்ட பஞ்சத்தை நிவர்த்தி செய்தும், கருநாகம் தீண்டிய தன் சீடனை உயிர்பித்தும் அற்புத சாதனைகளை செய்தார். முன் காலத்தில் பிரகலாதன் யாகம் செய்த பூமியாக மந்த்ராலயம் இருந்ததை அறிந்த இராகவேந்திரர், அந்த இடத்திலேயே தமது பிருந்தாவனத்தை தாமே நிர்மாணம் செய்து கொள்ள தீர்மானித்தார். அதன்படி 1671ம் ஆண்டு இவர் தன் சிஷ்யர்கள் முன்னிலையில் “இந்து எனகே கோவிந்தா” என்று தொடங்கும் பாடலை இயற்றி, அதை பாடிக் கொண்டும் “நாராயணா” என்ற நாமச்சரணம் செய்து கொண்டும் பிருந்தாவனப் பிரவேசம் செய்து ஜீவ சமாதி அடைந்தார். இதையடுத்து தென் இந்தியா முழுவதும் பிருந்தாவனங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மக்களின் விருப்பத்திற்கு இணங்கி வேத விற்பன்னர் இராமாச்சார் என்பவர் 250 ஆண்டுகளுக்குமுன் ஆந்திர மாநிலம் மந்த்ராலயம் சென்று அங்கிருந்து மிருத்திகையை (புனித மண்) தலையில் சுமந்தவாறே, நடந்தே ஊர் ஊராக வந்து, ஈரோடு காவேரி கரையில் சாஸ்திரப்படி சிறிய பிருந்தாவனம் ஸ்தாபித்து கும்பாபிஷேகம் செய்தார்.
இந்த பிருந்தாவனம் தமிழகத்திலேயே முதலாவதும், பழமையானதும் ஆகும். இந்தியாவில் உள்ள பிருந்தாவனங்களில் மூன்றாவதாகும். ஏற்கனவே இங்கு ஆஞ்சநேயர் கோயில் இருந்தது. அதில் பூஜைகள் நடந்து வந்தன. ஆஞ்சநேயர் சன்னதிக்கு மேல் கோபுரம், அதன் முன்புறம் கல் மண்டபம் இருந்தது. கடந்த 1912ம் ஆண்டில் ஈரோடு மகாஜன பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராக பணிபுரிந்த மந்த்ராலயம் கிருஷ்ணாச்சார் என்பவர் பக்தர்களிடம் நன்கொடை வசூல் செய்து கிரானைட் கற்களினால் மந்த்ராலயத்தில் உள்ளது போல் ஏழு பீடங்களை கொண்ட பெரிய பிருந்தாவனத்தை இங்கு நிர்மாணம் செய்தார். பின்னர் இதே ஆண்டில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இராகவேந்திரர் கோயிலில் கடந்த 1938ம் ஆண்டு இராமர், சீதை, ஆஞ்சநேயர் சிலைகளுடன் கூடிய இராஜகோபுரம் நிர்மாணம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இக்கோயிலின் அருகில் மிகவும் பழமையும் முற்றிலும் பழுதடைந்த இருண்ட மண்டபம் வவ்வால்கள் வாசம் செய்ததால் வவ்வால் மண்டபம் என அழைக்கப்பட்டு வந்தது. இந்த மண்டபத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் புதிய மண்டபம் கட்டப்பட்டது.
ஈரோடு, காவேரிக் கரையில் பிருந்தாவனம் அமையப் பெற்றது சிறப்பாகும். தமிழகத்திலேயே மிகப் பெரிய பிருந்தாவனம் ஈரோடு ராகவேந்திர சுவாமி கோயிலில் அமைந்துள்ளது.
இந்த பிருந்தாவனத்தை காண பக்தர்கள் கூட்டம் அதிகம் வருகிறது. மந்திராலயத்தின் மூல பிருந்தாவனத்திலிருந்து புனித மண் எடுத்து வந்து ஈரோடு பிருந்தாவனத்தில் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது.
ஜாதி மத மொழி இன பேதமில்லாமல் அனைவரும் வந்து இராகவேந்திர சுவாமிகளுக்கு சேவை செய்து பலன் அடைந்து வருகின்றனர். இந்த கோயில் மாத்வ சமூகத்தினரின் கோயிலாகும்.
தினசரி காலை 6 மணிக்கு நிர்மால்ய விசர்ஜன பூஜை, காலை 9 மணிக்கு பால், பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 11 மணிக்கு நைவேத்யம், 12 மணிக்கு தீபாராதனை, மாலை 6 மணிக்கு சந்தி கால பூஜையும், தீபாராதனையும் நடைபெறுகிறது.
திருவிழா:
ஸ்ரீராம நவமி, கோகுலாஷ்டமி, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் இராகவேந்திர சுவாமிகளின் ஆராதனை மூன்று நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோயிலில் இராமநவமி உற்சவம், நரசிம்ம சுவாமி உற்சவம், அனுமத் ஜெயந்தி உற்சவம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வேண்டுகோள்:
தீராத வியாதி குணமடையவும், கடன் தொல்லை தீரவும், குழந்தை வரம் வேண்டுவோரும் இங்கு வந்து இராகவேந்திரரை தரிசனம் செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
தங்களின் விரும்பியபடி நேர்த்திக்கடன் செய்கிறார்கள்.
Leave a Reply