Monthly Archives: January 2012

அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், வடசென்னிமலை

அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், வடசென்னிமலை, சேலம் மாவட்டம்.

+91- 4282 – 235 201 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பாலசுப்பிரமணியர்

உற்சவர்

சுப்பிரமணியர்

அம்மன்

வள்ளி, தெய்வானை

தீர்த்தம்

வசிஷ்ட தீர்த்தம்

ஆகமம்

காமீகம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

வடசென்னிமலை

மாவட்டம்

சேலம்

மாநிலம்

தமிழ்நாடு

வடசென்னிமலையில் இருக்கும் பாலசுப்பிரமணியர் ஒரு குன்றின் மீது கோயில் கொண்டுள்ளார். பல்லாண்டுகளுக்கு முன்பு இக்குன்றின் அடிவாரத்தில் சில சிறுவர்கள் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சிறுவன் ஒருவன் அவர்களுடன் விளையாட்டில் சேர்ந்துகொண்டான். சிறிது நேரம் விளையாடிய அவன், திடீரென ஒன்றும் சொல்லாமல் குன்றின் மீது வேகமாக ஏறினான். சிறுவர்களும் விளையாட்டு எண்ணத்தில் பின்தொடர்ந்தனர். ஓரிடத்தில் நின்ற அச்சிறுவன், பேரொளி தோன்ற அதன் மத்தியில் மறைந்துவிட்டான். உடன் சென்ற சிறுவர்கள், அதிர்ச்சியடைந்து ஊர்மக்களிடம் நடந்ததை கூறினர். மக்கள் வந்து பார்த்தபோது, சிறுவன் மறைந்த இடத்தில் மூன்று சுயம்பு சிலைகளும், அவ்விடத்தில் பூஜை செய்ததற்கான அடையாளங்களும் இருந்தன. சிறுவனாக வந்து அருள் புரிந்தது முருகன்தான் என்றறிந்த மக்கள் இவ்விடத்தில் கோயில் கட்டினர்.

கருவறையில் காட்சி தரும் பாலசுப்பிரமணியர் குழந்தை வடிவில் மேற்கு நோக்கியபடி சிரித்த கோலத்திலும், அருகிலுள்ள தண்டாயுதபாணி துறவறக் கோலத்திலும், உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் கிரகஸ்த நிலையிலும் (குடும்பம்) காட்சி தருகின்றனர். இவ்வாறு முருகன் ஒரே தலத்தில் மூன்று கோலங்களிலும் காட்சி தருவது அபூர்வம். ஒரேசமயத்தில் முருகனின் இம்மூன்று கோலங்களையும் வணங்கினால் சகல நன்மைகளும் கிடைக்கும், பவுர்ணமியில் கிரிவலம் சென்று வணங்க தீமைகள் விலகும் என்பது நம்பிக்கை.

அருள்மிகு பால சுப்பிரமணியர் திருக்கோயில், சீலநாயக்கன்பட்டி

அருள்மிகு பால சுப்பிரமணியர் திருக்கோயில், சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை, சேலம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பால சுப்பிரமணியர்

தலவிருட்சம்

வில்வம்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை

மாவட்டம்

சேலம்

மாநிலம்

தமிழ்நாடு

தமிழ் முனிவர் அகத்தியருக்கும், முருகனுக்கும் சம்பந்தம் அதிகம். அவர் பொதிகை மலைக்கு வந்ததும், தாமிரபரணியை உருவாக்கினார். அதன்பிறகு பொதிகையின் ஒரு பகுதியில் நீர்வீழ்ச்சி ஒன்றை ஒட்டியிருந்த முருகன் கோயிலில்தான் தங்கினார். காலப்போக்கில் அந்தக் கோயிலே அகத்தியர் கோயில் என பெயர் மாறியது. இங்கு தான் அகத்தியம் என்னும் தமிழ் இலக்கண நூலை எழுதினார். பொதிகையில் இருந்து புறப்பட்ட அகத்தியர் தமிழகமெங்கும் சென்றிருக்க வேண்டும். அவர் சேலம் பகுதிக்கும் வந்ததற்கான சான்றுகள் உள்ளன. முருகன் பாலவடிவத்தில் காட்சி தரும் தலமான சேலத்திலுள்ள சீலநாயக்கன்பட்டியில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும் அவர் விஜயம் செய்துள்ளார்.

இங்கு மூலவர் பால சுப்பிரமணியர் நின்ற திருக்கோலத்தில், மயில் வாகனத்துடன், கையில் வேலுடன் காட்சி தருகிறார். இடப்பக்கம் விநாயகரும், வலப்பக்கம் நந்தியுடன் கூடிய சிவலிங்கமும் உள்ளன. இந்த மலையில் சமணர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதை இங்குள்ள குகைகள் மூலம் அறியலாம். இங்குள்ள முருகனை அகத்தியர் பூஜித்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அத்துடன் மிகப்பெருமை வாய்ந்த ஸ்ரீ சக்ராதேவியும், 43 முக்கோணங்கள் கொண்ட சக்தி இயந்திரங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. சகல சக்திகளையும் உள்ளடக்கியதாக கருதப்படும் ஸ்ரீ சக்கரத்தின் ஒரு பக்கம் ஒரு குடில் உள்ளது. அந்த குடிலில் ரிஷிபத்தினி ஒருவர் தவக்கோலத்தில் இருக்கிறார். ஸ்ரீ சக்கரத்தின் மற்றொரு பக்கத்தில் புலித்தோல் மீது அகத்தியர் ஒரு மரத்தடியில் அமர்ந்த நிலையில் உள்ளார்.