Monthly Archives: December 2011
அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோயில், சாக்கோட்டை
அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோயில், சாக்கோட்டை (திருக்கலயநல்லூர்), கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 435-2414 453, 98653 06840 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 10 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அமிர்தகடேஸ்வரர், அமிர்தகலசநாதர் | |
உற்சவர் | – | அமிர்தகலசநாதர் | |
அம்மன் | – | அமிர்தவல்லி | |
தல விருட்சம் | – | வன்னி | |
தீர்த்தம் | – | நால்வேத தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருக்கலயநல்லூர் | |
ஊர் | – | சிவபுரம், சாக்கோட்டை | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சுந்தரர் |
காஞ்சிபுரம் அருகே சங்கமங்கையில் மார்கழி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர் சாக்கியநாயனார். இவர் சிவனிடமும் அவரது அடியார்களிடமும் மிகவும் அன்பு கொண்டிருந்தார். பிறவிப்பெருங்கடலை கடக்க சிவநெறியே உயர்ந்தது என்பதை உணர்ந்தார். சாக்கியர் கோலத்தில் இருந்தாலும் எப்போதும் மனதில் சிவ சிந்தனையுடன், யாரும் அறியாமல் சிவபூஜையும் செய்து வந்தார். எப்போதும் சிவபூஜை முடித்த பின்பு தான் சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்த இவர், ஒரு நாள் வெளியே சென்றார். வழியில் ஒரு இலிங்கம் வழிபாடு ஏதும் இன்றி இருப்பதைக்கண்டு மனம் வருந்தினார். இலிங்கத்தை நீராட்டி, மலர் போட்டு, பூஜை செய்ய ஆசைப்பட்டார். ஆனால் அந்த இடத்தில் எதுவும் இல்லை. இவரது நல்ல மனம் மட்டுமே இருந்தது. சிவனின் மீது கொண்ட அன்பால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து “நமசிவாய” மந்திரத்தை உச்சரித்து இலிங்கத்தின் மீது போட்டார். இவரது அன்பால் கட்டுப்பட்ட இறைவன், வீசிய கல்லை மலராக ஏற்றுக்கொண்டார். இதே போல் தினமும் இலிங்கத்தின் மீது கல்லெறிந்து வழிபாடு செய்து அதன் பின் உணவருந்தி வந்தார். இவர் சாக்கியர் கோலத்தில் இருந்ததால், பார்ப்பவர்களுக்கு இவர் சிவன் மீது கோபத்தில் கல் எறிகிறார் என நினைத்தார்கள். ஆனால் சிவன் ஒருவருக்கு மட்டும்தான் அன்பால் செய்கிறார் என்பது புரியும். இந்நிலையில் ஒருநாள் சாக்கியநாயனார், சிவ சிந்தனையிலேயே மூழ்கியிருந்ததால், சிவபூஜை செய்யாமல் சாப்பிட அமர்ந்தார். திடீரென நினைவு வந்ததும், தான் எவ்வளவு பெரிய சிவத்துரோகம் செய்துவிட்டோம் என வருந்தி ஓடி சென்று, கல் எறிந்து சிவபூஜை செய்தார். சிவபக்தியுடன் இவர் எறிந்த கல் கயிலையில் பார்வதியுடன் அமர்ந்திருந்த சிவனின் பாதத்தில் பொன்மலராக விழுந்தது. மகிழ்ந்த இறைவன் பார்வதிதேவியுடன் இவருக்கு காட்சி கொடுத்து நாயன்மார்களில் ஒருவராக்கினார். சாக்கிய நாயனார் வழிபட்ட தலமாதலால் சாக்கோட்டை எனப்பட்டது.
அருள்மிகு சிவகுருநாதசுவாமி திருக்கோயில், சிவபுரம்
அருள்மிகு சிவகுருநாதசுவாமி திருக்கோயில், சிவபுரம், சாக்கோட்டை, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 98653 06840 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல்11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சிவகுருநாதசுவாமி, சிவபுரீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், சிவபுரநாதர் | |
அம்மன் | – | ஆர்யாம்பாள், சிங்காரவல்லி, பெரியநாயகி | |
தல விருட்சம் | – | செண்பகம் | |
தீர்த்தம் | – | சந்திர புஷ்கரணி, சுந்தர தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | குபேரபுரம், திருச்சிவபுரம் | |
ஊர் | – | சிவபுரம் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர், அப்பர் |
இவ்வூரில் பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒர் சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனால்தான் ஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல், அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்து, பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாக வரலாறு. அவ்வாறு பாடிய இடம் இன்று “சுவாமிகள் துறை” என்றழைக்கப்படுகிறது. (அரிசொல் ஆறு) அரிசிலாறு பக்கத்தில் ஓடுகின்றது. இவ்வூர் பட்டிடைத்து விநாயகர் கோயிலில் பட்டினத்தார் அமர்ந்த திருக்கோலத்தில் சிலை வடிவாய் உள்ளார். குபேரபுரம், பூ கயிலாயம், சண்பகாரண்யம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும். திருமால் (சுவேதவராக) வெள்ளைப்பன்றி உருவில் பூஜித்த தலம். திருமகள், குபேரன், ராவணன், அக்னி முதலானோர் வழிபட்ட தலம். சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும். குபேரன் தனபதி என்ற பெயருடைய மன்னனாகப் பிறந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்ற தலம்.
பழமையான கோயில். 5 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கியது. கொடி மரம் இல்லை. பலி பீடம் மட்டுமே உள்ளது. உள்கோபுரம் 3 நிலைகள் கொண்டது. உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சன்னிதி. முன்னால் விசாலமான கல்மண்டபம் உள்ளது. உள்கோபுரத்தில் உட்சுவற்றில் சன்னிதியை பார்த்தவாறு சூரிய சந்திரரின் உருவங்கள் உள்ளன. விசாலமான பிரகாரம். கோஷ்ட மூர்த்தங்களாக நடன வினாயகரும், பக்கத்தில் தக்ஷிணாமூர்த்தியும், அடுத்து இலிங்கோற்பவரும், பிரம்மனும், துர்கையும் உள்ளனர். நால்வர் பிரதிஷ்டையில் பரவை நாச்சியாரும் இடம் பெற்றுள்ளார். வெளிச்சுற்றில் வினாயகர் சன்னிதியும், அடுத்து சுப்பிரமனியர், கஜலக்ஷ்மி சன்னிதிகளும் உள்ளன. மூலவர் பெரிய கம்பீரமான சிவலிங்கத் திருமேனி. முன் மண்டபத்தில் அம்பாள் சன்னிதி தெற்கு நோக்கியது. தெட்சிணாமூர்த்திக்குப் பக்கத்து சுவரில் திருமால் வெண் பன்றியாக இருந்து தாமரை மலர்களைக் கொண்டு வழிபடும் ஐதீக சிற்பம் உள்ளது. இந்நிகழ்ச்சியை அப்பர் பெருமான் இத்தலத்துத் திருத்தாண்டகத்தில் “பாரவன்காண்” என்று தொடங்கும் பாடலில் “பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும் சீரவன்காண்” என்று பாடியுள்ளார்.