Monthly Archives: December 2011
அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில், வைகல் மாடக்கோயில், ஆடுதுறை
அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில், வைகல் மாடக்கோயில், ஆடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 435 – 246 5616 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வைகல்நாதர் (செண்பகாரண்யேஸ்வரர்) | |
அம்மன் | – | கொம்பியல்கோதை (சாகா கோமளவல்லி) | |
தல விருட்சம் | – | செண்பகம் | |
தீர்த்தம் | – | செண்பக தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | வைகல்மாடக்கோயில் | |
ஊர் | – | திருவைகல் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் |
முன்னொரு காலத்தில் பூமி தேவி, தன்னை விரும்பி மணம் செய்து கொள்ளுமாறு திருமாலை வேண்டினாள். இவளது வேண்டுகோளை ஏற்ற பெருமாள், பூமிதேவியைத் திருமணம் செய்து கொண்டார். இதனால் மகாலட்சுமிக்கு பெருமாள் மீதுகோபம் ஏற்பட்டது. எனவே இலட்சுமி தேவி செண்பகவனம் எனும் இத்தலத்தை அடைந்து கடும் தவம் செய்தாள். பெருமாளும், பூமி தேவியும் பிரிந்து போன இலட்சுமியை காண இத்தலம் வந்தனர். இவர்களை தேடி வந்த பிரம்மனும் இத்தல இறைவனை வழிபட்டார். சிவனின் திருவருளால் பெருமாள், இலட்சுமி, பூமாதேவி இருவரையும் மனைவியராகப்பெற்றார்.
கோச்செங்கண்ணன் கட்டிய மாடக்கோயிலில் இதுவும் ஒன்று. வைகல் என்ற ஊரில் கட்டப்பட்ட மாடக்கோயிலாக விளங்குவதால் “வைகல் மாடக்கோயில்” ஆனது. இவ்வூரில் சிவனது மூன்று கண்ணைப்போல் மூன்று கோயில் உள்ளன. வலக்கண்ணாக விசாலாட்சி உடனாகிய விஸ்வநாதர் கோயில், இடக்கண்ணாக பெரியநாயகி உடனுறை பிரமபுரீஸ்வரர் கோயில், நெற்றிக்கண்ணாக கொம்பியல் கோதை உடனாகிய வைகல் நாதர் திருக்கோயில். இந்த மூன்று திருக்கோயிலுமே பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலமாகும்.
அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில், பரிதியப்பர்கோவில்
அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில், பரிதியப்பர்கோவில் (பரிதி நியமம்), ஒரத்தநாடு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 4372-256 910 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பாஸ்கரேஸ்வரர், பரிதியப்பர், பரிதீசர் | |
அம்மன் | – | மங்களாம்பிகை | |
தல விருட்சம் | – | அரசு | |
தீர்த்தம் | – | சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, கருங்குழி தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | பரிதிநியமம், திருப்பரிதி நியமம் | |
ஊர் | – | பரிதியப்பர்கோவில் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | சம்பந்தர், அப்பர், சுந்தரர் |
பரிதி என்று அழைக்கப்படும் சூரியன், கொடிய நோயினால் பாதிக்கப்படுகிறான். நோயிலிருந்து தன்னைக் காக்க சிவனிடம் வேண்ட, இத்தலம் வந்து தீர்த்தம் உண்டாக்கி, சிவலிங்கம் அமைத்து தன்னை வழிபட்டால் நோய் விலகும் என்கிறார் சிவன். சூரியனும் அதன்படி செய்ய, அவனது நோய் நீங்கியது. இதனால் இங்குள்ள இறைவன் “பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர்” என அழைக்கப்படுகிறார்.
இத்தலத்திற்கு இன்னொரு வரலாறும் உண்டு. இராமபிரானின் முன்னோர்களான சூரிய குலத்தில் தோன்றிய சிபிச் சக்கரவர்த்தி, வயதான காலத்தில் மகனிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சிவத்தலங்களைத் தரிசிக்க புறப்பட்டான். (இவன் புறாவிற்காக தன் சதையை கொடுத்தவன்). அப்போது இந்த இடத்திற்கு வந்ததும் அசதியின் காரணமாக இளைப்பாறினான். குதிரைச்சேவகன் குதிரைக்கு புல் சேகரித்து கொண்டிருந்தான். புல்லுக்காக பூமியை தோண்டியபோது, அவன் கையிலிருந்த ஆயுதம், பூமிக்குள் இருந்த, சூரியனால் அமைக்கப்பட்ட இலிங்கத்தின் மீது பட்டது. உடனே இலிங்கத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. இதனை அறிந்த மன்னன் அந்த இடத்தைத் தோண்டுமாறு உத்தரவிட்டான். உள்ளிருந்து சூரிய இலிங்கம் வெளிப்பட்டது. அதற்கு அபிஷேகம் ஆராதனை செய்து வழிபட்டான். இதை நினைவு படுத்தும் வகையில் இன்றும் கூட சிவலிங்கத்தில் ரத்த வடு உள்ளது. இலிங்கம் இந்த இடத்திற்கு எப்படி வந்தது என்பதை ஒரு முனிவர் மூலம் அறிந்து, அந்த இடத்தில் கோயில் கட்டினான்.