Monthly Archives: July 2011

அருள்மிகு திரிசக்தி அம்மன் திருக்கோயில், தாழம்பூர்

அருள்மிகு திரிசக்தி அம்மன் திருக்கோயில் (கேளம்பாக்கம் அருகில்), பழைய மகாபலிபுரம் ரோடு, தாழம்பூர்-603 103, காஞ்சிபுரம் மாவட்டம்.

+91 93810 1919 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திரிசக்தி அம்மன்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் தாழம்பூர்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

ஒரு பக்தரின் கனவில் அன்னை தோன்றி உத்தர விட்டதால் உருவான கோயில் இது. கொட்டிவாக்கத்தில் ஓர் அழகிய ஆலயமெழுப்பும் எண்ணம் ஐயப்பன் பக்தர்களான சிலர் மனதில் மலர்ந்தது. அந்தக் கோயிலில் மூகாம்பிகை, சுவாலாம்பிகை, கன்னியாகுமரி அம்மன் ஆகிய மூன்று தேவியரையும் அமர்த்தி வழிபட விரும்பினார்கள். காலம் பல கடந்தது. அந்த பக்தர்களுள் ஒருவரின் கனவில், பட்டாடை உடுத்திய மூன்று சிறுமிகளும், கூடவே மூன்று நாகங்களும், சிம்மமும் அடிக்கடி தோன்றின. அந்த பக்தர் கனவுக்கான காரணம் தெரியாமல் திகைத்தார். தனக்கு அடிக்கடி வரும் இந்தக் கனவு குறித்து தனது குருசாமியிடம் கூறினார்.
மூன்று குழந்தைகள் எனில், சரசுவதி, இலட்சுமி, பார்வதி ஆகிய மூன்று சக்திகள். அவர்கள் உன் கனவில் தோன்ற ஏதேனும் காரணம் இருக்கும். நீ ஏதேனும் பிரார்த்தனை செய்து கொண்டு நிறைவேற்றாமல் இருக்கிறாயா?” என்று கேட்டார் குருசுவாமி.

பிரார்த்தனை என்று ஏதுமில்லை. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு மூன்று தேவியருக்கும் சேர்த்து ஒரு கோயில் கட்டும் திட்டம் இருந்ததுஎன்று பக்தர் பதிலளித்தார். உடனே அதை நிறைவேற்றும்படி கூறினார் குருசுவாமி. குருவின் வழிகாட்டுதலோடு ஆலயமெழுப்பிய பக்தர், ஞான சரசுவதி, மூகாம்பிகை, இலட்சுமி ஆகியோரை பிரதிட்டை செய்து கும்பாபிசேகம் நடத்தினார்.

அருள்மிகு தில்லைக் காளி திருக்கோயில், சிதம்பரம்

அருள்மிகு தில்லைக் காளி திருக்கோயில், சிதம்பரம் – 608 001, கடலூர் மாவட்டம்.

+91- 4144 – 230 251 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4.30 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தில்லைக் காளி, பிரம்ம சாமுண்டீசுவரி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் சிதம்பரம்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

சில காலத்துக்குப் பின்னால் நடக்க இருந்த ஒரு போரில், பார்வதியே வேறு அவதாரம் எடுத்து ஒரு அரக்கனை அழிக்க வேண்டும். அந்த அரக்கனை பார்வதியால் மட்டுமே அழிக்க முடியும் என்பது தேவ விதியாக இருந்தது.

ஆகவே பார்வதி சிவபெருமானை விட்டு பிரிந்து செல்லவில்லை என்றால் பார்வதி, உக்ர குணத்தைக் கொண்டு அந்த அவதாரத்தை எடுக்க முடியாது. மேலும் பார்வதி முன்னர் ஒரு சமயத்தில் பெற்று இருந்த சாபத்தினால், சிவபெருமானைப் பிரிந்து சில காலம் வாழ வேண்டும். இவை அனைத்தையும் அந்த ஈசன் அறிந்து இருந்தார். ஆகவே அதற்காக அவர் ஒரு திருவிளையாடலை நடத்தத் துவங்கினார்.


அதற்கேற்ப ஒரு முறை கைலாயத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் பெரிய வாக்குவாதம் ஏற்படுகின்றது. அது நீ பெரியவனா இல்லை நான் பெரியவளா எனத் துவங்கிய சண்டை. சக்தி இல்லையேல் சிவனும் இல்லை என பார்வதி வாதாடும் நிலைக்குப் போக, சினமுற்ற சிவபெருமான், பார்வதியைக் கோர உருவம் கொண்ட காளியாக மாறுமாறு சாபம் கொடுத்து விடுகிறார்.

சிவனை விட்டுப் பிரிய மனமில்லாத பார்வதி, அழுது புலம்பி, தன்னை மன்னித்து விடுமாறு அவரை கேட்டுக் கொண்டார். பின் சாப விமோசனம் பெற்று மீண்டும் அவரை எப்படி அடைவது எனக் கேட்க, அதற்கு, சிவபெருமான் கூறினார்: “இன்னும் சிறிது காலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் நடக்க உள்ளது. அந்த நேரத்தில் நீ இதே காளி உருவில் தேவர்களுக்காகப் போரிட்டு அசுரர்களை அழிப்பாய். பிறகு, நீ தில்லை மரங்கள் சூழ்ந்த தில்லைக்கு வந்து, என்னை நினைத்து தவம் இருக்க வேண்டும். நான் வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்களது வேண்டுகோளின்படி தில்லையில் ஆனந்த நடனம் ஆடுவேன். அப்போது நீ சிவகாமி என்ற திருநாமத்துடன் என்னிடம் வந்து சேர்வாய்என்றார். அவ்வாறே அவள் செய்தாள்.

காலம் ஓடியது. தாரகாசுரன் என்ற அசுரன் தோன்றி தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வரலானான். தேவர்களும் முனிவர்களும் மும்மூர்த்திகளிடம் சென்று அவன் தொல்லையில் இருந்து தம்மை காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து சிவபெருமானிடம் ஆலோசனைக் கேட்க, அவர் காளி உருவில் இருந்த பார்வதியை, தாரகாசுரனை வதம் செய்ய அனுப்பினார். காளி உருவில் இருந்த பார்வதி யுத்தகளத்துக்குச் சென்றாள். தாரகாசுரனையும் அவன் சேனையும் அழித்தப் பின் வெற்றி அடைந்தாள். ஆனால், அவனை வெற்றி கொண்டபின்னும் அவள் கோபம் அடங்கவில்லை. வெறிபிடித்தவள் போல் ஊழித்தாண்டவம் ஆடத் துவங்கினாள்.