Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

சோமநாதர் திருக்கோயில், பெருமகளூர்

அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், பெருமகளூர், பேராவூரணி தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 90479 58135

காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சோமநாதமுடையார்
அம்மன் சுந்தராம்பிகை, குந்தளாம்பிகை
தல விருட்சம் செந்தாமரைக் கொடி
தீர்த்தம் லெட்சுமி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சதூர்வேதி மங்கலம், பெருமூள்ளுர், பேரூர்
ஊர் பெருமகளூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் பெருமகளூர் கிராமத்தில் உள்ள பொதுக் குளத்தில் சோழ மன்னனின் யானை ஒன்று செந்தாமரையை பறிக்க முயன்ற போது, குளம் முழுவதும் செந்நிறமாக மாறியிருந்தது. இதை அறிந்த மன்னன் பதறி வந்து பார்த்த போது, தண்ணீருக்கு அடியில் சிவலிங்கம் இருப்பதை அறிந்தான். தான் தவறு செய்து விட்டதாக சோழமன்னன் சிவலிங்கத்தை கட்டித் தழுவி தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளான். அவன் கட்டித்தழுவியபோது சிவலிங்கத்தின் மீது மன்னன் அணிந்து இருந்த முத்து, வைரம், வைடூரிய நகைகளின் தடயம் பதிந்தது. இதற்கு அடையாளமாக இன்றும் கூட சிவலிங்க பாணத்தின் மீது அடையாளங்கள் உள்ளன. இதை அடுத்து சிவலிங்கம் இருந்த இடத்தை தூர்த்து இந்த சோமநாதர் கோயிலை சோழ மன்னன் கட்டியுள்ளான். இக்கோவிலை பாண்டியர்களும் திருப்பணி செய்துள்ளனர்.

தசரத மகாராஜா குழந்தை வரம் வேண்டி, புத்திரகாமேஷ்டி யாகம் தொடங்கும் முன், மாபெரும் சோம யாகம் நடத்த எண்ணி, தக்க இடத்தை தேர்ந்தெடுக்குமாறு குலகுருவான வசிஷ்டர் மகரிஷியை வேண்டியுள்ளார். சோம யாகத்திற்கு பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்பர் மாகாளம் என்னும் திருத்தலத்தில் அவ்வாண்டு வசிஷ்டர் குறித்த தேதியில் வேறு ஒரு சோம யாகத்தை நிகழ்த்த அவ்வூர் மக்கள் நிச்சயித்து இருந்தனர். அத்தேதியில் செய்யாவிடில் அதற்கு அடுத்த சரியான தேதி மூன்று ஆண்டு கழித்து வருவதால் தசரத மகாராஜா அம்பர் மாகாளத்திற்கு ஈடான திருத்தலத்தை கண்டு சொல்லுமாறு வசிஷ்டரை வேண்டியுள்ளார்.

ஆனந்தவல்லி சோமநாத சுவாமி திருக்கோயில், மானாமதுரை

அருள்மிகு ஆனந்தவல்லி சோமநாத சுவாமி திருக்கோயில், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சோமேஸ்வரர் (திருபதகேசர்)
அம்மன் ஆனந்தவல்லி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் மதுகூபம், சந்திரபுஷ்கரணி
புராணப் பெயர் ஸ்தூலகர்ணபுரம், சந்திரப்பட்டிணம்
ஊர் மானாமதுரை
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

முனிவர்கள் தவம் செய்ய, சிறந்த இடத்தை தேடி கொண்டு வந்தார்கள். எந்த இடமும் அவர்களுக்கு திருப்தியாக இல்லை. இப்படியே தேடித்தேடி சென்றதில், மிகப் பெரிய வில்வ மரங்கள் படர்ந்து விரிந்து இருந்தப் பகுதிக்கு வந்தார்கள். வில்வ இலையின் நறுமணம் காற்றில் தென்றலாய் வீசியது. சிவதவம் செய்ய சிறந்த இடமென எண்ணி, மகிழ்ந்து இந்த இடத்தில் தவம் செய்ய ஆரம்பித்தார்கள். பல வருடங்கள் அந்த இடத்தில் முனிவர்கள் தவம் செய்ததால் ஈசன் மகிழ்ந்து, பாதாளத்திலிருந்து இலிங்க வடிவில் வெளிப்பட்டார். பாதாளத்தை பிளந்து பூலோகத்தில் சிவலிங்கம் வந்திருப்பதை கண்ட முனிவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். அந்த இலிங்கத்தை வைத்து பூஜிக்க தொடங்கினார்கள்.

இராவணனிடம் இருந்து எப்படி சீதையை மீட்பது என்று வழி தெரியாமல் இராமன் சிந்தித்து கொண்டு இருந்தார். இதற்கு இராவணனை பற்றி நன்கு அறிந்த அகத்தியரிடம் ஆலோசனை கேட்டார். “குளவி தன் குட்டி குளவியின் உணவுக்கு, வெட்டுகிளியின் சிறகுகளை நீக்கி, உயிரோடு அதை தன் குட்டிகளுக்கு கொடுக்கும். இறந்த வெட்டுகிளியைச் சாப்பிட்டால் அதன் உடலில் உள்ள விஷதன்மை தன் குட்டிகளை பாதிக்கும் என்று குளவிக்கு தெரியும். இறைவனைத் தவிர வேறு யார் அந்த புத்தியை குளவிக்கு தந்திருக்க முடியும். குளவி இனத்தை படைப்பதற்கு முன்னதாகவே அதற்கு வெட்டுகிளிதான் உணவு என்று வெட்டுகிளியை முதலில் படைத்தான் இறைவன். இப்படியாக, எந்த ஒரு ஜீவன் பிறப்பதற்கு முன்னதாகவே அந்த ஜீவனுக்கு இவ்வூலகில் தேவையானவற்றை இறைவன் செய்து விட்டுத்தான் பூலோகத்தில் பிறக்க வைக்கிறான். ஆகவே இராமா… நீ எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் ஈசனை நம்பு. எல்லாம் நன்மையாகவே நடக்கும்.“ என்று இராமனுக்கு ஆசி வழங்கினார் அகத்திய முனிவர். இராவணனைப் போரில் சந்திப்பதற்கு முன்னதாக வில்வக் காட்டில் இருக்கும் சோமநாத ஈஸ்வரரை வணங்கி ஆசி பெற வந்தார் ராமன். அவருடன் வானர வீரர்களும் வந்தார்கள். காட்டில் சோமேஸ்வரரை இராமன் வணங்கி கொண்டு இருந்தார். பல நாட்கள் நடந்து வந்ததால் வானர வீரர்களுக்கு பசி ஏற்பட்டது. “குடிக்கத் தண்ணீர் கூட இல்லாத இந்த காட்டுக்குள் இராமர் அழைத்து வந்துவிட்டாரேஎன்று பசி மயக்கத்தால், கோபத்தில் சத்தம் போட ஆரம்பித்தார்கள். அவர்களின் பசியை போக்க ஈஸ்வரரிடம் உதவி கேட்டார் இராமர். சோமேஸ்வரரும் அவர்களுக்கு இந்த ஊரில்தான் தண்ணீருக்கான குளத்தையும், உணவையும் கொடுத்தார்.