Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், ஓமாம்புலியூர்

அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், ஓமாம்புலியூர், கடலூர் மாவட்டம்.

+91- 4144-264 845

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் (துயர்தீர்த்த நாதர்)
அம்மன் பூங்கொடிநாயகி
தல விருட்சம் இலந்தை
தீர்த்தம் கொள்ளிடம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் உமாப்புலியூர், திருவோமாம் புலியூர்
ஊர் ஓமாம்புலியூர்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்

தில்லையில் நடராஜ பெருமானின் திருநடனத்தை காணும் முன்பு வியாக்ரபாத முனிவர் ஓமாப்புலியூர் வந்தார். சிதம்பரத்தில் நடராஜரின் திருநடனத்தைக் காண தனக்கு அருள்தர வேண்டும் என வேண்டினார்.

வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்டதால் இவ்வூர் இறைவன் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர்என அழைக்கப்பட்டார். இங்கு அம்பாள் பூங்கொடி என அழைக்கப்படுகிறாள்.

பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த சதானந்தன் என்ற அரசன் தொழுநோயால் பாதிக்கப்பட்டான். இவன் சிவபக்தன். அசரீரியின் வாக்குப்படி, இவ்வூரிலுள்ள வர்ந்தனான் குளத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றான்.

உமாதேவியார் ஓம்என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக சிவனிடம் உபதேசம் கேட்டார். சிவன் அதற்குரிய விளக்கத்தை சொல்லிக் கொண்டிருக்கும்போது அவரது கவனம் திசை திரும்பவே, அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி சிவன் தண்டனை கொடுத்து விட்டார். அதன்படி பார்வதிதேவி, பூமிக்கு வந்தார். அவர் ஓமாப்புலியூரில் தங்கியிருந்து சிவனை வணங்கி உபதேசம் பெற்றார். சிவன் தெட்சிணாமூர்த்தியாக உபதேசித்ததால் இது குருமூர்த்தி ஸ்தலமாக கருதப்படுகிறது.

பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை

அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை, சிவபுரி போஸ்ட், அண்ணாமலை நகர், சிதம்பரம் தாலுகா, கடலூர் மாவட்டம்.

+91- 98426 24580.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.15 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பால்வண்ணநாதர்
அம்மன் வேதநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் கொள்ளிடம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கழிப்பாலை, காரைமேடு
ஊர் திருக்கழிப்பாலை
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்

கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும்போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி, சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது. முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து இலிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு, மணல் இலிங்கத்தின்மீது பட்டு இலிங்கம் பிளந்து விடுகிறது. வருந்திய முனிவர் பிளவுபட்ட இலிங்கத்தை எடுத்துவிட்டு வேறு இலிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்தபோது, இறைவன் பார்வதி சமேதராக காட்சி தந்து,”முனிவரே. பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த இலிங்கம் பிளவு பட்டிருந்தாலும் அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள். காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால்சொறிந்துள்ளது. எனவே இந்த இலிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள்என்றார்.

இங்குள்ள பைரவர் காசியில் உள்ளது போல நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை ஓட்டுடன், பூணூல் அணிந்து, சர்ப்பத்தை அரைஞான அணிந்து, ஜடாமுடி, சிங்கப்பல்லுடன் தனிக்கோயிலில் அருளுகிறார். காசியில் பைரவரை வடிவமைத்த சிற்பியே இங்குள்ள பைரவரையும் வடிவமைத்ததாக கூறப்படுகிறது. இத்தல பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் இத்தலத்தை பைரவர் கோயில் என்றே அழைக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.