Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், அனேகதங்காவதம்
அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், அனேகதங்காவதம், காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44 – 2722 2084 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 8 மணி வரை மட்டுமே நடைதிறந்திருக்கும். பிறநேரங்களில் சுவாமியை வெளியில் இருந்து தரிசிக்கலாம்.
மூலவர் | – | கச்சி அனேகதங்காவதேஸ்வரர் | |
அம்மன் | – | காமாட்சி | |
தீர்த்தம் | – | தாணு தீர்த்தம் | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | காஞ்சிபுரம் | |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சுந்தரர் |
பிரம்மாவின் புத்திரராகிய மரீசி மகரிஷி, தடாகத்தில் நீராடச்சென்றபோது, நீரிலிருந்த தாமரை மலரில் ஒரு குழந்தையைக் கண்டார். குழந்தைக்கு “வல்லபை” என பெயரிட்டு வளர்த்து வந்தார். சிவபக்தையாக இருந்த அவளை, இரண்ய அசுரனான கேசி பிடித்துச் சென்றான். வல்லபை, தன்னை காத்தருளும்படி சிவனிடம் வேண்டினாள். சிவன், விநாயகரை அனுப்பி வல்லபையை மீட்டுவர எண்ணினார். அப்போது அம்பிகை சிவனிடம், “விநாயகன் அசுரர்களை அழித்து வெற்றி பெற அருள் செய்ய வேண்டும்” என்றாள். சிவன், இத்தலத்தில் தன்னை வணங்கிவிட்டு சென்றிட அசுரர்களை வெற்றி கொள்ள வலிமை உண்டாகும் என்றார். விநாயகரும் அசுரர்களை அழிக்கச் செல்லுமுன்பு, இவ்விடத்தில் இலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின், வல்லபையை மீட்டு வந்தார். சிவன், அம்பாள் இருவரும் விநாயகருக்கு இத்தலத்திலேயே வல்லபையை மணம் முடித்து வைத்தனர்.
குபேரன், தன் முற்பிறவியில் செய்த புண்ணிய பலனால், அருந்தமனின் மகனாகப் பிறந்து, அளகைக்கு அரசனானான். அசுரகுருவான சுக்கிரன், அவன் மீது பொறாமை கொண்டு தொல்லைகள் கொடுத்தான். எனவே, இங்கு சிவனை வேண்டி தன்னை காக்கும்படி வேண்டினான் குபேரன். சிவன், அவனுக்காக சுக்கிரனை விழுங்கி, அவனது கர்வத்தை அடக்கினார். இத்தலத்தில் சிவன், பெரிய லிங்கவடிவில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். காஞ்சி காமாட்சி அம்மனே சிவனுக்குரிய அம்பாள் என்பதால், இங்கு அம்பாளுக்கு சன்னதி இல்லை.
அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், ஓணகாந்தன்தளி, காஞ்சிபுரம்
அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், ஓணகாந்தன்தளி, காஞ்சிபுரம் (பஞ்சுப்பேட்டை), காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 98944 43108 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக திறந்திருக்கும்.
மூலவர் | – | ஓணகாந்தேஸ்வரர் | |
அம்மன் | – | காமாட்சி | |
தல விருட்சம் | – | வன்னியும், புளியமரமும் | |
தீர்த்தம் | – | ஓணகாந்த தீர்த்தம் , தான் தோன்றி தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருவோணகாந்தன் தளி | |
ஊர் | – | ஓணகாந்தன்தளி | |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சுந்தரர் |
ஒரு காலத்தில் அசுர வேந்தனான வாணாசுரன் என்பவனின் சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்பவர்கள் புழல் என்ற பகுதியில் உள்ள கோட்டையின் பாதுகாவலர்களாக இருந்தனர். இவர்களில் ஓணன் என்பவன் அப்பகுதியில் சுயம்புவாய் எழுந்த இலிங்கம் ஒன்றிற்கு, தன்ரத்தத்தால் அபிஷேகம் செய்து, கடும் விரதமிருந்து பல வரங்களைப் பெற்றான்.
இதே போல் காந்தனும் மற்றொரு இலிங்கத்தைப் பூஜித்து சிறந்த வரங்களைப் பெற்றான். இப்பகுதியில் வசித்த ஜலந்தராசுரன் என்பவனும் ஒரு இலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டான். பிற்காலத்தில் சிவனின் தோழரான சுந்தரர் இப்பகுதிக்கு வந்தார். மூன்று இலிங்கங்கள் வெட்ட வெளியில் பூமிக்குள் பதிந்து இருந்தன. அசுரர்களுக்கும் கூட பக்தி இருந்துள்ளது என்பதை வெளிக்காட்டவும், இலிங்கங்களுக்குப் பாதுகாப்பு தரவும் கோயில் எழுப்ப விருப்பம் கொண்டார். அதற்குரிய பொன், பொருள் வேண்டி சிவனைப் பாடினார். அவரது பாட்டில் மயங்கிய சிவன், இன்னும் சில பாடல்கள் பாடட்டுமே எனத் தாமதம் செய்து, பின்னர் அருகில் இருந்த புளியமரம் ஒன்றைக் காட்டி மறைந்தார். அம்மரத்திலுள்ள காய்களெல்லாம் சுந்தரர் பதிகம் கேட்டு, பொன் காய்களாக மாறின. பின்னர் இலிங்கங்களை வெளியே எடுத்து, கிடைத்த பணத்தில் கோயில் எழுப்பினார்.