Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
அருள்மிகு நீள்நெறிநாத சுவாமி திருக்கோயில், தண்டலைச்சேரி
அருள்மிகு நீள்நெறிநாத சுவாமி திருக்கோயில், தண்டலைச்சேரி, வேளூர், திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம்.
+91- 98658 44677 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நீள்நெறிநாதர் (ஸ்திரபுத்தீஸ்வரர் ) | |
அம்மன் | – | ஞானாம்பிகை | |
தல விருட்சம் | – | குருந்தமரம் | |
தீர்த்தம் | – | ஓமக தீர்த்தம் | |
ஆகமம் | – | காரண ஆகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருத்தண்டலை நீள்நெறி, தண்டலச்சேரி, தண்டலைநீணெறி | |
ஊர் | – | தண்டலச்சேரி | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள | – | சம்பந்தர் |
முன்னொரு காலத்தில் தண்டலச்சேரிக்கு கிழக்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் கண்ணமங்கலம் என்ற ஊர் இருந்தது. இந்த ஊர் தற்போது கண்ணந்தங்குடி என அழைக்கப்படுகிறது. சோழநாட்டின் வளத்திற்கு இலக்கணமாக இவ்வூர் அமைந்திருந்தது. இவ்வூரில் வேளாளர் குலத்தில் தாயனார் என்ற சிவனடியார் அவதரித்தார். இவர் சிவனடியார்களிடத்தில் மிகவும் அன்பு கொண்டிருந்தார். தண்டலச்சேரியில் அருள்பாலிக்கும் இறைவனுக்கு நாள்தோறும் சம்பா அரிசியில் உணவும், செங்கீரையும், மாவடுவும் நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்து வந்தார். இந்தக் கோயிலுக்கு தாயனார் பல திருப்பணிகள் செய்து வந்தாலும், நைவேத்தியம் வைக்கும் பணியை முக்கிய திருப்பணியாக செய்து வந்தார். இவரது மனைவியும் இவரைப்போலவே இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். இவர்களுக்கு ஒரு சமயம் வறுமை ஏற்பட்டது. வறுமையைக்கண்டு அடியார் மனம் தளரவில்லை. தெய்வத்திருப்பணியை விடாமல் செய்து வந்தார். கூலிக்கு ஆள் வைத்து நெல் அறுத்து வந்த இவர், வறுமை காரணமாக தானே கூலிக்கு நெல் அறுக்க சென்றார். வேலைக்கு கூலியாக கிடைக்கும் நெல்லைக்கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்து வந்தார். பின்னரும் இவரை இறைவன் சோதிக்க நினைத்தார். இவருக்கு கூலியாக கிடைத்ததெல்லாம் இறைவனுக்கு நைவேத்தியம் செய்ததால், இவரது குடும்பத்திற்கு உணவில்லாமல் போனது. இவரும் இவரது மனைவியும் கீரையை மட்டும் சாப்பிடத் தொடங்கினர். நாளடைவில் கீரைக்கும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது தண்ணீரை குடித்து வாழத்தொடங்கினர். இறைவனுக்கு நைவேத்தியம் செய்வதற்காவது நெல் கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சியில் வாழ்க்கையை நடத்தி வந்தார். ஒரு நாள் இவர் இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதற்காக செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஒரு கூடையில் சுமந்து கொண்டு புறப்பட்டார். சாப்பிடாததால் இவரை பசி வாட்டியது. மனைவிக்கும் பசி மயக்கம். தாயனார் பசியினால் கீழே விழப்போனார். அவரை மனைவி தாங்கிக் கொண்டார். கூடையில் சுமந்து வந்த நைவேத்தியப்பொருள்கள் நிலத்தில் விழுந்து சிதறின. தாயனார் மனம் கலங்கினர். அவருக்கு உயிர் வாழவே விருப்பமில்லை. எனவே தம்மிடம் நெல் அறுக்க வைத்திருந்த அரிவாளை எடுத்து தன் கழுத்தை அரிந்து கொள்ள துணிந்தார். அவரது பக்தியின் ஆவேசத்தை கண்டு உடன் வந்த மனைவி திகைத்தாள். தன் மாங்கல்யத்தை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டு இறைவனை வேண்டினாள். அப்போது நைவேத்தியப்பொருள் விழுந்த இடத்தில் வெடிப்பு ஏற்பட்டு, உள்ளிருந்து உருத்ராட்ச மாலையும், திருநீரும் அணியப்பெற்ற திருக்கரம் ஒன்று வெளிப்பட்டது. அத்திருக்கரம் தாயனாரின் கையைப்பற்றியது. இறைவனின் திருக்கரம் பட்டவுடன் மெய்மறந்து நின்றார் தாயனார். தாயனாரின் பக்தியை மெச்சிய இறைவன் இத்தலத்தில் பார்வதியுடன் தரிசனம் தந்தார். அரிவாளால் தம் கழுத்தை அரியத்துணிந்தமையால் இவருக்கு “அரிவாள் தாய நாயனார்” என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது. பொதுவாக அனைத்து கோயில்களிலும் நடராஜரின் தலையில் வீற்றிருக்கும் கங்கா தேவி இத்தலத்தில் நடராஜரின் பாதத்தில் அருள்பாலிக்கிறாள்.
அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில், கற்பகநாதர் குளம்
அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில், கற்பகநாதர் குளம், தொண்டியக்காடு வழி, திருவாரூர் மாவட்டம்.
+91- 4369 – 240 632 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கற்பக நாதர் | |
அம்மன் | – | பாலசுந்தரி | |
தல விருட்சம் | – | பலா | |
தீர்த்தம் | – | விநாயகர் தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருக்கடிக்குளம் | |
ஊர் | – | கற்பகநாதர்குளம் | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | சம்பந்தர் |
கார்த்திகாசுரன் என்ற அரக்கன் இத்தல இறைவனை வழிபாடு செய்து வரங்கள் பல பெற்றான். தான் வேண்டும் போதெல்லாம் கற்பக விருட்சம் போல வரங்களை அள்ளித்தந்த இறைவனுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்தான். இதனால் இத்தல இறைவன் “கற்பகநாதர்” என வழங்கப்படுகிறார். கற்பக விநாயகர் கற்பகநாதரை வழிபட்டு மாங்கனி பெற்றுள்ளார். இத்தல சிவபெருமான் 8 முக பட்டை இலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
இராமர் சேது சமுத்திரத்தில் பாலம் கட்டும் முன்பாக இத்தலம் வந்து கற்பக விநாயகரையும், கற்பகநாதரையும் வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது. இதன் காரணமாக கோதண்டராமர் கோயில் இத்தலத்தின் அருகே உள்ளது. ஒரு அந்தணர் தன் தந்தைக்கு பிதுர்கடன் செய்வதற்காக கொண்டு வந்த அஸ்தி இத்தலத்திற்கு வந்தவுடன் கொன்றை மலராக மாறியது என்பர். இத்தல விநாயகர் “மாங்கனி விநாயகர்” என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.