Category Archives: வேலூர்
அருள்மிகு மணிகண்டீஸ்வரர் கோயில், திருமால்பூர்
அருள்மிகு மணிகண்டீஸ்வரர் கோயில், திருமால்பூர், திருமாற்பேறு, வேலூர் மாவட்டம்.
காலை 6 மணி முதல் மதியம் 12மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மணிகண்டீஸ்வரர் | |
அம்மன் | – | அஞ்சனாட்சி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | சக்கர தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | ஹரிசக்கரபும், திருமாற்பேறு | |
ஊர் | – | திருமால்பூர் | |
மாவட்டம் | – | வேலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருநாவுக்கரசர், சம்பந்தர் |
குபன் என்ற அரசனுக்காக திருமால், துதீசி முனிவர் மீது தனது சக்கரத்தை வீசினார். ஆனால், அது முனிவரின் தெய்வீக உடம்பில் பட்டு முனை மழுங்கிவிட்டது. கவலையடைந்தார் திருமால். என்ன செய்வதென்று தேவர்களுடன் கலந்தாலோசித்து, சலந்தராசுரனை அழிப்பதற்காக உண்டாக்கிய சுதர்சன சக்கரம் சிவனிடம் உள்ளதை அறிந்தார். உடனே இத்தலம் வந்து அம்பிகை பூஜித்த இந்த இலிங்கத்தை தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் பூஜை செய்தார். ஒரு நாள் சிவன், திருமாலின் பக்தியை சோதிக்க, பூஜைக்கான ஆயிரம் மலர்களில் ஒன்றை மறைத்துவிட்டார். திருமால் பூஜை செய்யும் போது மலர் ஒன்று குறைய, தனது கண்ணைப்பறித்து இறைவனின் திருவடியில் அர்ப்பணித்தார். இந்த பூஜைக்கு மகிழ்ந்த சிவன், “தாமரை மலருக்காக உனது கண்ணை எடுத்து பூஜித்ததால், தாமரை போலவே உனக்கு கண் கொடுக்கிறேன்.
இதனால் உன்னை ‘பதுமாஷன்‘ என அழைப்பார்கள். இத்தலமும் ‘திருமாற்பேறு‘ என அழைக்கப்படும்” எனக்கூறி திருமால் வேண்டிய சக்கரத்தை கொடுத்தருளினார். மேலும் அவர் திருமாலிடம்,”நீ கூறி வழிபட்ட ஆயிரம் நாமங்களால் என்னை பூஜிப்பவர்களுக்கு முக்தியை கொடுப்பேன். அதைச் சொல்ல இயலாதவர்கள் என்னை, தீண்டச்சிவந்தார், சாதரூபர், மணிகண்டர், தயாநிதியார், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், சாகிசனர் ஆகிய திருநாமங்கள் சொல்லி பூஜித்தால் வேண்டிய வரம் தருவேன்” என்று அருளினார். “இத்தலத்தில் ஒரு கண நேரம் தங்கியவர்களுக்கும் முக்தியளிக்க வேண்டும் எனவும், இங்கு வழிபட்டால் அனைத்துக் கோயில்களிலுள்ள இலிங்கங்களையும் வழிபட்ட பலன் கிடைக்க வேண்டும்” எனவும் வரம் பெற்றார். சிவன் மகிழ்ந்து திருமால் கேட்ட வரம் தந்தருளியதாக வரலாறு.
அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருகோயில், திருவல்லம்
அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருகோயில், திருவல்லம், வேலூர் மாவட்டம்.
91- 416-223 6088 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வில்வநாதேஸ்வரர் | |
அம்மன் | – | வல்லாம்பிகை | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | நீவாநதி, கவுரி தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருவலம் | |
ஊர் | – | திருவல்லம் | |
மாவட்டம் | – | வேலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருநாவுக்கரசர், சம்பந்தர் |
திருவல்லத்தில் வாழ்ந்த அர்ச்சகர் ஒருவர், அருகில் உள்ள கஞ்சன் மலையிலிருந்து சிவனின் அபிஷேகத்திற்காக தீர்த்தம் கொண்டு வருவது வழக்கம். அந்த மலையில் இருந்த கஞ்சன் என்ற முரடன் தொல்லை கொடுத்து வந்தான். அர்ச்சகரும் இறைவனிடம் முறையிட, ஈசன் தன் வாகனமான நந்தியிடம் அந்த முரடனை அடக்குமாறு கட்டளையிட்டார். நந்தி, அரக்கனை எட்டு பாகங்களாக கிழித்துப் போட்டது. சிவனிடம் சாகா வரம் பெற்றிருந்த அந்த முரடன், நந்தியின் தாக்குதலில் இருந்து தப்பி விட்டான். அவன் மீண்டும் வருகிறானா என்பதை கண்காணிக்கும் வகையில், நந்தி சிவனை நோக்கி இராமல், கோயில் வாசலை நோக்கி திரும்பியுள்ளது.
முழு முதற்கடவுளான விநாயகர் “அம்மையப்பன் தான் உலகம்,” “உலகம் தான் அம்மையப்பன்,” என உலகிற்கு அறிவித்த தலமே திருவல்லம். “வலம்” வந்ததை உணர்த்துவதால், “திருவலம்” என்றாகி, நாளடைவில் “திருவல்லம்” ஆயிற்று. இங்குள்ள தலவிநாயகர் “கனிவாங்கிய பிள்ளையார்” என அழைக்கப்படுகிறார். அதற்கேற்றாற் போல் துதிக்கையில் மாங்கனியை வைத்து வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தன் வாகனமான மூஞ்சூரின் மீது அமர்ந்திருக்கிறார். முருகனுக்கும், விநாயகருக்கும் சிவன் வைத்த போட்டியில் வென்ற விநாயகர் ஞானப்பழத்துடன் இத்தலத்தில் வந்து அமர்ந்ததாக வரலாறு. எனவே, இவரை வணங்குவோர் பிறப்பற்ற நிலையை அடைவர். இத்தல முருகனை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார்.
சுவாமி சன்னதியின் வலது பக்கம் தொட்டி போன்ற அமைப்பில் ஜலகண்டேஸ்வரர் என்னும் பாதாளேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். மழை வேண்டி இவருக்கு வழிபாடு செய்யப்படுகிறது. சிவபெருமானின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களுல் இதுவும் ஒன்று.