Category Archives: மதுரை
அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், வண்டியூர்
அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், வண்டியூர், மதுரை, மதுரை மாவட்டம்.
+91 452 262 3060 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் அதிகாலையிலேயே நடை திறந்திருக்கும்.
மூலவர் | – | வீர ஆஞ்சநேயர் | |
தீர்த்தம் | – | அழகர் கோயில் தீர்த்தம் | |
ஆகமம் | – | பாஞ்சராத்ரம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | வண்டியூர் | |
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்கள் மதுரையில் தமக்கென கோயில் அமைக்க முடிவு செய்து, வைகைக் கரையில் இக்கோயிலை அமைத்ததாகவும், இதற்கென அவர்கள் தனியே ஆஞ்சநேயர் விக்ரகத்தினை ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து இங்கே பிரதிஷ்டை செய்து வழிபடத்தொடங்கியதாகவும் செவி வழிச்செய்திகள் கூறுகின்றன.
வைகை நதிக்கறையில் தென் திசை நோக்கி அமைந்துள்ள இத்தலம் வைகை ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படினும் கூட இக்கோயிலின் வாசலுக்கு முன்பாக மட்டுமே தண்ணீர் தொட்டுச் செல்லும் என்பது பெருமையாகக் குறிப்பிடத்தக்க செய்தியாகக் கூறப்படுகிறது.
இத்தலத்துடன் இணைந்து சிவன், விநாயகர், நாகர் மற்றும் பாண்டி முனிசாமிகளுக்கு தனிச்சந்நிதிகள் உள்ளது. இங்கு நைவேத்தியமாக தயிர் சாதம் படைக்கப்படுகிறது. இத்தலத்தில் ஆஞ்சநேயர் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு வல்லடிக்காரர் திருக்கோயில், அம்பலக்காரன்பட்டி
அருள்மிகு வல்லடிக்காரர் திருக்கோயில், அம்பலக்காரன்பட்டி, மதுரை மாவட்டம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வல்லடிக்காரர் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | அம்பலக்காரன்பட்டி | |
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பழங்கால முறைப்படி இந்தப் பகுதியில் பல கிராமங்களை உள்ளடக்கி, நாடு என்ற கட்டமைப்பில் அதன் கட்டுமானம் சிதையாமல் இன்றளவும் காத்து வருகிறார்கள். இப்படி அறுபது கிராமங்கள் கொண்ட வெள்ளலூர் நாட்டுக்குள்தான் வல்லடிக்காரர் குடி கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் வெள்ளலூர் நாட்டுக் கிராமங்களில் அளவுக்கு அதிகமாக வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. புயலாகப் பறக்கும் குதிரையில் பறந்து வரும் மாயாவி ஒருவர்தான் இந்த வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவர். ஒரு கட்டத்தில் மாயாவியின் அட்டூழியத்தைத் தாங்க முடியாத கிராம மக்கள், தங்களை வாழ வைக்கும் ஏழை காத்த அம்மனின் வாசலுக்குப் போய், மாயாவியின் அட்டூழியத்தைத் தடுத்து நிறுத்துமாறு முறையிட்டனம். அதற்கு மனம் இரங்கிய ஏழைகாத்த அம்மன், மாயாவியை வழிமறித்து இனிமேல், நீ இந்த மக்களைத் துன்புறுத்தக் கூடாது. இதற்குக் கட்டுப்பட்டால், எனது எல்லைக்குள் உனக்கும் ஓரிடம் உண்டு. என்னை பூஜிக்கும் இந்த மக்கள் உனக்கும் கோயில் கட்டி வழிபடுவார்கள் என்று சொன்னாராம். அம்மனின் பேச்சுக்குக் கட்டுப்பட்ட மாயாவி, அந்த இடத்திலேயே பூமிக்குள் புதைந்து போனார். அதன் பிறகு கிராம மக்கள் வழிப்பறித் தொந்தரவு இல்லால் நிம்மதியாக நாட்களைக் கடத்தினர். பிறகொரு நாளில் வயலுக்குக் கஞ்சிப்பானை எடுத்துச் சென்ற பெண் ஒருத்தி, மாயாவி புதையுண்ட இடத்தைக் கடந்துபோது கால் இடறிக் கீழே விழுந்தாள். அதனால் பானை உடைந்து, கஞ்சி கீழே கொட்டியது. இதைப் பொருட்படுத்தாத, அந்தப் பெண் மறுநாளும் தலையில் கஞ்சிப் பானையுடன் அந்த வழியாக வந்தாள். குறிப்பிட்ட அந்த இடத்தை அடைந்தபோது அன்றும் சொல்லி வைத்தாற் போல் கால் இடறி விழுந்தாள். பானை உடைந்தது. பிறகு, இதுவே தொடர்கதை ஆனது. இதனால் கோபம் அடைந்த அவள் கணவன், மண்வெட்டியுடன் கிளம்பி, மண்வெட்டியுடன் கிளம்பி, தன் மனைவியின் காலை இடறிவிடும் கல்லைப் பெயர்த்தெடுக்க முயன்றான். ஆனால், அவனால் அந்தக் கல்லை இம்மியும் அசைக்க முடியவில்லை. மட்டுமின்றி, மண்வெட்டியின் வெட்டு விழுந்த இடங்களில் இருந்தெல்லாம் இரத்தம் பீய்ச்சியடித்தது. இதைக் கண்டு அலறி, மயங்கி விழுந்தவன் படுத்த படுக்கையானான். இந்த நிலையைக் கண்டு, என்னவோ ஏதோவென்று பதறிய கிராம மக்கள், கோடாங்கிக்காரரைக் கூட்டி வந்து குறி கேட்டனர். “ஏழைகாத்த அம்மனால் அடக்கி வைக்கப்பட்ட மாயாவி அங்கு புதையுண்டு கிடக்கிறான். இது அவனது வேலைதான். அம்மன், அவனுக்கு வாக்குக் கொடுத்தது போல நீங்கள் அவனுக்கு ஆலயம் கட்டி வழிபட வேண்டும்” என்று சொன்னார் கோடாங்கி. கோடாங்கி சொன்னபடி, மாயாவி புதையுண்ட அம்பலக்காரன்பட்டி எல்லையில் அவனுக்குக் கோயில் எழுப்பிய ஊர் மக்கள், கோயில் வாசலில் மாயாவியின் குதிரை ஒன்றையும் மண்ணால் செய்து வைத்தனர். இதற்கு சேமங்குதிரை எனப் பெயர். அந்த மாயாவிதான் இப்போது வல்லடிக்காரராக நின்று ஊர் மக்களை வாழ வைக்கிறார்.