Category Archives: மதுரை
திருமூலநாத சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், சோழவந்தான்
அருள்மிகு திருமூலநாத சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், சோழவந்தான், மதுரை மாவட்டம்.
+91 – 4543 – 260143
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். திருவிழா நாட்களில் அதிகாலையிலேயும் நடை திறக்கப்படுகிறது.
மூலவர் | – | திருமூலநாத சுவாமி (திருமூலநாத உடையார், மூலஸ்தான உடையார்) | |
உற்சவர் | – | நடராஜர் | |
அம்மன் | – | அகிலாண்டேஸ்வரி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | சுவர்ண புஷ்கரணி | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | சோழவந்தான் | |
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
நூற்றாண்டுகளுக்கு முன்பு, மக்கள் இறை பக்தியில் நாட்டம் இல்லாது இருந்தபோது, அவர்களை இறை பக்தியில் ஈடுபடுத்த வேண்டுமென ஈசனும் உமையாளும் முடிவெடுத்தனர். அதன்படி மக்களிடம் இறை உணர்வினை ஏற்படுத்திட யாரை அனுப்புவது என நந்திகேஸ்வரரிடம் கேட்டபோது, சுந்தரரை அனுப்பும் படி அவர் கூறினார். அதன் படி சுந்தரர் பூமிக்கு வர, ஒரிடத்தில் மாடு மேய்ப்பவன் ஒருவன் இறந்து கிடக்க அவனைக் சுற்றி மாடுகள் அழுது கொண்டிருந்த காட்சியைக் கண்டு மனம் இறங்கி, அவனது உடலில் புகுந்து மாற்று உரு பெற்றார். அவனது உருவிலேயே வீட்டிற்கு சென்ற அவர் வந்த காரியம் நிறைவேற்றாது இருந்தார். இதனைக் கண்ட ஈசன் சுந்தரரின் வேலையினை உணர்த்த முனிவர் வேடத்தில் சென்று அவரிடம் யாசகம் கேட்டார். சுந்தரர் உணவு கொண்டு வர, அங்கு முனிவர் வேடத்தில் இருந்த ஈசனைக் காணாததைக் கண்டு கலங்கினார். அப்போது அங்கே தரையில் கால் தடம் இருந்ததைக் கண்டு அதனைப் பின் தொடர்ந்தார். அத்தடம் நேரே சிதம்பரம் சென்றடைய, சுந்தரர், சிவனே முனிவர் வடிவில் வந்ததை உணர்ந்தார். தலம் இருக்கும் தென்கரை பகுதியில் திருமூலநாதர் காட்சி தந்தார். அதன் பின் இப்பகுதியில் திருமூலநாதருக்கு சிவாலயம் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
சிவ பெருமான், மூலநாதராக வீற்றுள்ள இத்தலத்தில் தனியாக உள்ள அகிலாண்டேஸ்வரி சந்நிதியின் எதிரே சுவர்ண புஷ்பகரிணி எனும் தீர்த்த குளம் உள்ளது. இதன் கரையில் அம்பாள் அகிலாண்டேஸ்வரி தவம் புரிந்து சிவனை மணம் புரிந்ததாக வரலாறு கூறகிறது.
தென்திருவாலவாய் திருக்கோயில், மதுரை
அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை, மதுரை மாவட்டம்.
+91 452 2344360
காலை 6 .30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்
மூலவர் | – | திருவாலவாயர் | |
அம்மன் | – | மீனாட்சி | |
தல விருட்சம் | – | அரசமரம் | |
தீர்த்தம் | – | சிவதீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | ஆலவாய் | |
ஊர் | – | மதுரை | |
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
மதுரை மாநகரில் சைவசமயமும் சமண சமயமும் தீவிரமாக இருந்த சமயம். அப்போது மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் கூன்பாண்டியன். அவர் சைவசமயத்தை சேர்ந்தவன். ஆனால் தீடீரென்று சமண சமயத்திற்கு மாறிவிடுகிறான். அவன் மனைவி மங்கையர்க்கரசி சைவ சமயத்தை சார்ந்தவள். மிகவும் தீவிர பற்றுள்ளவள். கணவனின் திடீர் மாற்றம் அவளுக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. அதனால் சிவபெருமானிடம் சென்று மனமுருக அழுது வேண்டுகிறாள். அப்போது சிவபெருமான் கூன்பாண்டியனுக்கு வெப்பு நோய் தருகிறார். உடம்பு பூராவும் வெப்பத்தால் பாதிக்கப்படும் மிகவும் கொடிய நோய் அது. கூன்பாண்டியனால் அந்த நோயைத் தாங்க முடியவில்லை. அப்போது சமணர்கள் எவ்வளவோ வைத்தியம் செய்து பார்க்கின்றனர். நோய் குணமாகவில்லை. அப்போது மங்கையர்க்கரசியின் கனவில் சிவபெருமான் தோன்றி,”தென்திருவாலவாய் கோயிலுக்கு சென்று ஞானசம்பந்தரால் இயற்றப்பட்ட திருநீற்றுப்பதிகம் பாடி அந்த சுவாமிக்கு அனைத்து அபிசேக அர்ச்சனைகளும் செய்து அந்த திருநீற்றை எடுத்து உன் கணவனான பாண்டிய மன்னன் மீது பூசி விட்டால் அந்த வெப்பு நோய் தீர்ந்து விடும்” என்று கூறுகிறார். உடனே அதுபடியே செய்ய அந்த வெப்பு நோய் தீர்ந்து விடுகிறது. கூன்பாண்டியன் சிவபெருமானின் இறையருளை முழுமையாக உணர்ந்து, தன் அங்கமெல்லாம் ஒரு கணம் ஆடிப்போய் அவரின் கருணைக்கு தலைவணங்கி சமணத்திலிருந்து மீண்டும் சைவ சமயத்திற்கு வந்து சிவத்தொண்டு புரியலானார் என வரலாறு கூறுகிறது.