Category Archives: நாகப்பட்டினம்
அருள்மிகு சாஸ்தா திருக்கோயில், இரட்டக்குடி
அருள்மிகு சாஸ்தா திருக்கோயில், இரட்டக்குடி, நாகை மாவட்டம்.
மாசுபடாத தூய்மையான சில்லென்ற காற்று. எளிமையான சின்னச் சின்ன வீடுகள், பச்சைப் பசேலென்ற வயல்கள், சிற்றோடைகள் கொண்ட சிறிய கிராமம் இரட்டக்குடி. நாகை மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் கொல்லுமாங்குடி வழியாகப் பூந்தோட்டத்தை அடுத்து இந்த கிராமம் உள்ளது. இங்கு கொலுவிருக்கும் ஐயனாரின் திருநாமம் ஆகாச சாஸ்தாவாகும். பூர்ணா, புஷ்கலாம்பாள் சமேதராய் காட்சிதரும் சாஸ்தாவின் கோயில் மிகப் பழமையானதாகும். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்.
சாஸ்தாவின் வலதுபுறம் பிள்ளையாரின் சிலையும் உள்ளது. எதிர்ப்புறம் பைரவரும், குதிரை அருகில் வாளுடன் வீற்றிருக்கும் வீரனின் வடிவங்களையும் தரிசிக்கலாம். அதைத் தவிர வீரனுக்கு தனிச் சந்நிதியும் உள்ளது. கோயில் அருகிலேயே திருக்குளம் உள்ளது. கோயிலின் உள்ளே மேற்புறம் கூரையில் இரு பக்கமும் துளைகள் உள்ளன. சாஸ்தா ஆகாசத்திலிருந்து இறங்கி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். சில காலம் முன்பு கோயிலைப் புதுப்பிக்கும்போது அந்தத் துளைகளை மூடி விட்டார்களாம். ஐயனார் ஒரு பக்தனின் கனவில் தோன்றி, ‘நான் ஆகாச சாஸ்தா. கூரையின் மேல்புறம் துளைகள் வையுங்கள்’ என்று சொல்லி மறைந்தாராம். இப்போதும் அந்தக் கோயிலின் மேற்கூரையில் துளைகள் இருப்பதைக் காணலாம்.
அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை காளீஸ்வரர் திருக்கோயில், வில்லியநல்லூர்
அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை காளீஸ்வரர் திருக்கோயில், வில்லியநல்லூர், மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம்.
காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | காளீஸ்வரர் | |
அம்மன் | – | சிவகாமசுந்தரி | |
தலவிருட்சம் | – | வில்வமரம் | |
தீர்த்தம் | – | ஹோம குளம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | வில்லியநல்லூர் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஒவ்வொரு யுகத்தில் தெய்வ அவதாரங்கள் வெவ்வேறு வகையில் நிகழும். அப்படி ஒரு யுகத்தில்தான் கண்ணுதற் கடவுளுக்கும் முன்பாகவே பிறந்துவிட்டார் கணேசன். அதன்பின்னர், பார்வதி கேட்ட வரத்தின்படி முதற்கடவுளே அவளது மூத்த மகனாகவும் அவதரித்தார். முதல் யுகத்தில்தான் சிவ– பார்வதி கல்யாணத்தை தாமே வேதியராக இருந்து நடத்தி வைத்திருக்கிறார் விநாயகர். அந்தக் கல்யாணம் நடந்த தலம் திருமணஞ்சேரி. மகேசனுக்கும் மகேஸ்வரிக்கும் திருமணம் நடத்தி வைக்க பிள்ளையார் வந்தபோது, அவர் இங்கேயே தங்கி நீராடி, நியமநிஷ்டைகளோடு தினசரி பூஜைகள் செய்தது, இத்தலத்து ஈசனுக்குத்தான். இன்னொரு விசேஷம் இங்கே பிள்ளையார் தனியாக இல்லை. இரட்டை வடிவெடுத்து தானே தன்னுடன் இருக்கும் இரட்டைப் பிள்ளையாராக காட்சி தருகிறார். ஒரு வடிவில் இங்கே சிவபூஜை நடத்திய கணபதி. மற்றொரு வடிவில் திருமணஞ்சேரியில் நடந்த உமா மகேசர் திருமணத்தில் வேதியராக இருந்தாராம். எனவே இரட்டை வடிவம்.
காளீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே வெகு அருகிலே தனிக் கோயில் கொண்டிருக்கிறார், இந்தத் தந்தமுகன். இவர் கோயிலருகே இருக்கும் குளம், ஹோமம் நடத்துவதற்குரிய புனித நீருக்காக கணபதியால் அமைக்கப்பட்டது. அதனால் ஹோம குளம் என்றே பெயர். சிவ–பார்வதி திருமணம் நடந்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது, அசுர சக்திகள் பல அதனைத் தடுத்திட முயன்றனவாம். அப்போது அம்பிகை விஸ்வரூபக் காளி வடிவெடுத்து அந்தத் தீய சக்திகளை அழித்தாள். அதன்பிறகும் கோபம் தணியாமல் இருந்த அவளை, ஈசன் மையலோடு நோக்கினார். அந்தப் பார்வை கண்டு நாணிய அம்பிகை சிறிய வடிவுக்கு மாறி, குளிர்ந்த நிலவு போல் ஆனாள். சிவனின் விருப்பத்திற்கு உரியவள் என்பதால் சிவகாமசுந்தரியானது அவளது திருநாமம்.
காளியை சினம் தணியச் செய்ததால் இவரது திருநாமம் காளீஸ்வரர் என்று ஆனது.