Category Archives: நாகப்பட்டினம்
அருள்மிகு வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில், வழுவூர்
அருள்மிகு வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில், வழுவூர், நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4364 – 253 227 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 5.30 மணி முதல் 6.30 மணி. செவ்வாய், வெள்ளியில் காலை 7- மாலை 6 மணி
மூலவர் | – | வீரபத்திரர் (வழிக்கரையான்) | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | வழுவூர் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
தாருகாவனத்தில் வசித்த ரிஷிகள், தங்களது யாகத்தால் கிடைக்கும் அவிர்பாகத்தால்தான் தேவர்களே வாழ்கின்றனர் என்று கர்வம் கொண்டனர். அவர்களது ஆணவத்தை அடக்க எண்ணிய சிவன், கையில் பிச்சைப்பாத்திரத்துடன் பிட்சாடனாராக அங்கு வந்தார். திருமால், மோகினி வேடத்தில் அவருடன் சேர்ந்து கொண்டார். மோகினி வடிவிலிருந்த திருமாலைக் கண்ட ரிஷிகள், அவளது அழகில் மயங்கி, தாங்கள் செய்த யாகத்தை விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தனர். பிட்சாடனார் வடிவிலிருந்த மிக அழகிய சிவனைக் கண்ட ரிஷிபத்தினிகள், தங்களது நிலை மறந்து அவர் பின் சென்றனர். பின்னர், தங்கள் நிலை உணர்ந்த ரிஷிகள், வந்திருப்பவர்கள் இறைவன் என அறியாமல், சிவன் மீது அக்னி, புலி, மான், மழு, நாகம் என பல ஆயுதங்களை எய்து போரிட்டனர். சிவன் அவற்றையெல்லாம் அடக்கி, தனது ஆபரணங்களாக்கிக் கொண்டார். முனிவர்கள் ஒரு யானையை அனுப்பினர். அதன் தோலைக் கிழித்த சிவன், கஜசம்ஹார மூர்த்தியாக காட்சி தந்தார். ரிஷிகளின் ஆணவம் அடங்கியது. பின்பு அவர்கள் உண்மையை உணர்ந்து சிவனைச் சரணடைந்தனர். சிவன் அவர்களை மன்னித்தருளினார். மோகினி வடிவில் இருந்த திருமாலுக்கும், சிவனுக்கும் சாஸ்தா பிறந்தார். அவரது பாதுகாப்பிற்காக சிவன், தனது அம்சமான வீரபத்திரரை காவலுக்கு வைத்துவிட்டுச் சென்றார். இந்த வீரபத்திரரே இத்தலத்தில் காட்சி தருகிறார். பால சாஸ்தாவும் இங்கிருக்கிறார்.
அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்
அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில், பழைய பஸ் ஸ்டாண்டு அருகில், நாகப்பட்டினம், நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 98949 06455 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | விஸ்வநாதர் | |
உற்சவர் | – | அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் | |
அம்மன் | – | விசாலாட்சி | |
தல விருட்சம் | – | இலந்தை | |
தீர்த்தம் | – | வீரகங்கை | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | சிவராததானி | |
ஊர் | – | நாகப்பட்டினம் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
தன்னை அழைக்காமல் யாகம் செய்த தட்சனை அழிக்க, சிவன் தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரரும் தட்சனை அழித்து விட்டார். இதனால் அவரை பிரம்மகத்தி தோஷம் (கொலை பாவம்) பிடித்தது. இந்த தோஷம் தீர, பூலோகத்தில் சிவபூஜை செய்ய வேண்டுமென கூறிய மகரிஷிகள், ஒரு நதியில் அவரது ஆபரணங்களை வீச வேண்டுமென்றும், அவை கரை ஒதுங்கும் இடத்தில் சிவபூஜை செய்யும்படியும் கூறினர். அதன்படி நதியில் வீரபத்திரர் தான் அணிந்திருந்த அணிகலன்களை வீச, அவை இத்தலத்தில் கரை ஒதுங்கின. இங்கே, வீரபத்திரர் இங்கு இலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிற்காலத்தில் இங்கு வீரபத்திரருக்கும், சிவனுக்கும் கோயில் எழுப்பப்பட்டது.
வீரபத்திரர் தனிசன்னதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். வழக்கமாக வீரபத்திரர் அருகில் ஆட்டுத்தலையுடன் தட்சன் வணங்கியபடி இருப்பார். இங்கோ, தட்சனின் வெட்டிய தலையை கையில் வைத்துள்ளார். ஐப்பசி பூசம் நட்சத்திரத்தில், வீரபத்திரரின் தோஷம் நிவர்த்தியானதாக ஐதீகம். எனவே அந்நாளில் வீரபத்திரருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அன்று சிவபூஜையை வீரபத்திரரே செய்வதாக ஐதீகம். எனவே அன்று உச்சிக்காலத்தில் (மதிய வேளை) உற்சவர் அகோர வீரபத்திரரை, விஸ்வநாதர் சன்னதிக்குள் கொண்டு சென்று பூஜை செய்கின்றனர். அன்று ஒருநாள் மட்டுமே, வீரபத்திரர், சிவன் இருவரையும் சேர்த்து தரிசிக்க முடியும்.