Category Archives: நாகப்பட்டினம்
அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம்
அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம்(திருமறைக்காடு), நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4369 -250 238 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்) | |
அம்மன் | – | வேதநாயகி, யாழைப் பழித்த மொழியாள், வீணாவாத விதூஷணி | |
தல விருட்சம் | – | வன்னிமரம், புன்னைமரம் | |
தீர்த்தம் | – | வேததீர்த்தம், மணிகர்ணிகை | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருமறைக்காடு | |
ஊர் | – | வேதாரண்யம் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | சுந்தரர், அப்பர், ஞானசம்பந்தர் |
வடமொழி வேதங்கள் ரிக், யசூர், சாம, அதர்வணம் என்ற நான்கும் மனித உருக்கொண்டு, இத்தலத்திற்கு அண்மையில் உள்ள நாலுவேதபதி என்கிற ஊரில் தங்கி, அருகாமையில் உள்ள புஷ்பவனம் என்கிற ஊரில் மலர் எடுத்து இத்தலத்து இறைவனைப் போற்றி வழிபாடுகள் செய்தன. கலியுகம் பிறந்தவுடன், “இனி நல்லவற்றுக்கு காலம் இல்லை. இனி நாங்கள் இருப்பது நல்லதல்ல” என்று இறைவனிடம் கூறிவிட்டு இத்தலத்தின் பிரதான வாயிலை அடைத்து விட்டுச் சென்று விட்டன. இன்றும் இத்தலத்தை சுற்றிலும் மரம், செடி, கொடி என்று வனமாக இருந்து இறைவனை வழிபாடு செய்து வருவதாகக் கருதப்படுகிறது. பிரதான வாயில் அடைக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் பக்கத்திலுள்ள திட்டி வாயில் வழியாக வந்து இறைவனை வழிபட்டு வந்தனர். பின்னர் இத்தலத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரப்பதிகம் பாடி கதவை திறந்தனர் என்பதும், வேதங்களே இறைவனை வணங்கியதால் “வேதாரண்யம்” என்று பெயர் வந்தது என்பதும் தலவரலாற்றுச் செய்தி.
சைவ சமயத்தின் முக்கிய நாயன்மார்களில் இருவரான அப்பரும் ஞானசம்பந்தரும் சிவதலம் தோறும் சென்று எம்பெருமானை போற்றிப் பதிகம் பாடி வருகையில் இந்த திருமறைக்காட்டிற்கும் வந்தனர். அப்போது வேதங்களே வழிபட்ட இத்தலத்து மறைக்காட்டீசுவரரை வழிபட எண்ணி கோயிலுக்கு செல்கையில் கோயிலின் பிரதான வாயிற் கதவு மூடப்பட்டிருந்தது. இறைவனை எல்லோரும் பக்கத்து வாயில் வழியாகவே சென்று வழிபட்டவண்ணம் இருந்தனர். இதைப்பார்த்த அப்பரும் சம்பந்தரும் இறைவனை வணங்க இப்படியொரு சிக்கல் இருப்பது ஏன் என்று வினவினர். வேதங்கள் பூஜித்து வந்து வரம்பெற்றுப் பின்னர் திருக்கதவைத் தாழிட்டுவிட்டுச் சென்ற விபரம் அறிந்தனர். உடனே ஞானசம்பந்தர் அப்பரிடம் மிக்க பழமை மிக்க வேதங்களே வழிபட்ட இத்திருக்கோயில் கதவை திறந்து இறைவனை நேராக தரிசிக்க திருப்பதிகம் பாடியருளுமாறு வேண்டிக் கொண்டார். அதைக்கேட்ட அப்பர் மிகுந்த ஆராமையோடும் பண்ணினேர்மொழியென்று மொத்தம் 10 திருப்பாசுரம் பாடியவுடன் கதவு திறந்து கொண்டது. உள்ளே சென்று ஆனந்தப்பரவசத்துடன் மறைக்காட்டீசரை வணங்கிவிட்டு வெளியே வந்தபோது அப்பர், “சம்பந்தரே! இந்த கதவு எப்போதும் மூடவும் திறக்கவும் பதிகம் பாடும்” என்று கேட்டுக்கொள்ள ஞானசம்பந்தர் “சதுரம் மறை” என்று ஒரே ஒரு திருப்பதிகம் பாடியவுடன் கதவு மூடிக்கொண்டது. இறைவனின் இந்த கருணையை எண்ணி இருவரும் பரவசம் எய்தினர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கதை நிகழ்ந்த கோயில் இது.
அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்
அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர், வழி திருக்குவளை, திருவாரூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.
+91-97862 44876 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வாய்மூர்நாதர் | |
அம்மன் | – | பாலின் நன்மொழியாள், க்ஷீரோப வசனி | |
தல விருட்சம் | – | பலா | |
தீர்த்தம் | – | சூரியதீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருத்தென் திருவாய்மூர் | |
ஊர் | – | திருவாய்மூர் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர், அப்பர் |
சிவபெருமான் சொர்க்கத்தில் வீற்றிருக்கும் வடிவமே விடங்க வடிவமாகும். இந்த வடிவம் பூலோகத்திலும் இருக்க வேண்டுமென அவர் விரும்பினார். இந்திரன் ஒருமுறை சிவனின் விடங்க வடிவத்தை யாசித்தான். விடங்கம் என்றால் சிறிய சிவலிங்க வடிவமாகும். இந்த இலிங்கத்தை போக வாழ்வு நிறைந்த இந்திரலோகத்தில் வைத்துப் பூஜை செய்வது கஷ்டம் என சிவன் கூறினார். இருப்பினும் இந்திரன் வற்புறுத்தியதால், சிவன் விடங்க வடிவத்தை அவனிடம் கொடுத்து விட்டார். அதன் சிறப்பை உணர்ந்த இந்திரன், பூஜையை நல்ல முறையில் நடத்தி வந்தான். சிவபெருமான் அந்த இலிங்கம் பூலோகத்தில் இருக்க வேண்டும் என விரும்பினார். முசுகுந்த சக்கரவர்த்தி என்பவர் பூவுலகை ஆண்டு வந்த போது, மக்கள் மிருகங்களால் துன்பப்பட்டனர். எனவே அவர் வேட்டைக்குச் சென்றார். வடபகுதியில் வேட்டையை முடித்து விட்டு, காவிரிக்கரைக்கு அவர் வந்தார். ஒரு சிவராத்திரி இரவில், முசுகுந்தன் வேட்டையாடிக் கொண்டிருந்த போது, சில முனிவர்கள் அவ்வழியே சென்றனர். அவர்கள் சிவராத்திரி பூஜைக்காக வில்வாரண்யம் எனப்படும் பகுதிக்கு சென்று சிவலிங்க பூஜை செய்யப்போவதாகக் கூறினர். சிவராத்திரியன்று மிருகங்களை வேட்டையாடுவதை சாஸ்திரம் அனுமதிப்பதில்லை. இதனால், வருந்திய அரசன், தன் ராஜ கோலத்தை கலைத்து விட்டு, ராஜரிஷி போல் வேடம் தரித்து, முனிவர்களுடன் சென்றான். தவறை உணர்ந்த அவனுக்கு சிவன் காட்சி கொடுத்தார். இந்திரனிடம் இருக்கும் சிவலிங்கத்தை எப்படியேனும் வாங்கி, பூலோகத்தில் வழிபாட்டுக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.