Category Archives: திருநெல்வேலி
அருள்மிகு மிளகு பிள்ளையார் திருக்கோயில், சேரன்மகாதேவி
அருள்மிகு மிளகு பிள்ளையார் திருக்கோயில், சேரன்மகாதேவி, திருநெல்வேலி மாவட்டம்
காலை 8 மணி முதல் 11 மணி வரை மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர்: – மிளகு பிள்ளையார்
பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர்: – சேரன்மகாதேவி
மாவட்டம்: – திருநெல்வேலி
மாநிலம்: – தமிழ்நாடு
கேரளத்தை ஆண்ட மன்னர் ஒருவருக்கு தீராத வியாதி உண்டாயிற்று. மருந்தால் அது தீரவில்லை. ஒருநாள், கனவில், “மன்னா! நீ உன் உயரத்துக்கு ஒரு எள் பொம்மை தயார் செய்து, அதனுள் துவரம்பருப்பு அளவுள்ள மாணிக்கக் கற்களைக் கொட்டி, உன் வியாதியை அதற்குள் இடம் மாற்றி, ஒரு பிராமணனுக்கு தானமாகக் கொடுத்து விடு. அதன்பிறகு, வியாதி அந்த பிராமணனைச் சேர்ந்து விடும்,” என ஏதோ ஒரு தெய்வத்தின் குரலைக் கேட்டார் மன்னர். அதன்படியே பொம்மை செய்தார். ஆனால், எந்த பிராமணரும் அதை வாங்க முன்வரவில்லை. இதை கர்நாடகாவிலுள்ள பிரம்மச்சாரி பிராமண இளைஞன் ஒருவன் கேள்விப்பட்டு வந்து, வாங்கிக் கொண்டான். பொம்மை பிரம்மச்சாரியின் கைக்கு வந்ததும் அது உயிர் பெற்றது. தனக்கு அந்த பிரம்மச்சாரி செய்திருந்த காயத்ரியின் பலனில் ஒரு பகுதியைக் கேட்டது. அப்படி கொடுத்து விட்டால், வியாதி உன்னை அண்டாது என சொன்னது. பிரம்மச்சாரியும் கொடுத்து விட்டான். கொடுத்த பிறகு, அவனது மனது துன்புற்றது.