Category Archives: சென்னை
அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி கோயில், பாகசாலை, மணவூர் வழி, அரக்கோணம்
அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி கோயில், பாகசாலை, மணவூர் வழி, அரக்கோணம், சென்னை மாவட்டம்.
உலக உயிர்களை உய்விப்பதற்காகவே கருணையே வடிவான கந்தப் பெருமான் தோன்றினாள் என்பதை கந்தபுராணம் சிறப்பித்துக் கூறுகிறது. அத்தகைய முருகப்பெருமான் கோயில் கொண்டுள்ள பழம்பெரும் பதிகளில் ஒன்று, பாகை என வழங்கும் பாகசாலையாகும். குன்று தோராடும் குமரக்கடவுள் இங்கு கங்கை நதிக்கு இணையான, குசஸ்தலை ஆற்றின் கரையில் கோயில் கொண்டுள்ளார்.
ஆள் உயரத்திருமேனியுடன், நான்கு திருக்கரங்களுடன் பிரமசாஸ்தா எனும் கம்பீரமான திருக்கோலத்தில் பாலசுப்ரமணியன் எனும் திருநாமம் கொண்டு மந்திர மயிலையும், சக்தி வடிவேலையும் தாங்கித் தம்மை தரிசிப்போர் பரவசப்படும் விதத்தில் வேண்டுவோர்க்கு வேண்டும் வரமளிக்கும் வள்ளலாகக் காட்சி தருகிறார். பிரம்ம தேவன், நாரதர், சித்ரகுப்தன், அகத்தியர் ஆகியோர் இங்கு முருகனிடம் உபதேசம் பெற்றனர். நாக கன்னியர்கள், சித்தர்கள், மகரிஷிகள் ஆகியோர் முருகனை வழிபட்டு வரங்கள் பெற்றனர் என மச்சபுராணம், கூர்ம புராணம், பவிஷ்ய புராணம் போன்ற பழம்பெரும் புராணங்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.
அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வட பழநி
அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வட பழநி, சென்னை மாவட்டம்.
+91-44-2483 6903 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வடபழநி ஆண்டவர் | |
தீர்த்தம் | – | திருக்குளம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | வடபழநி | |
மாவட்டம் | – | சென்னை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
அண்ணாசாமி தம்பிரான் :
இவர்தான் இக்கோயில் தோன்ற மூல காரணமாக இருந்தவர். தன் நாக்கை அறுத்து திருத்தணி முருகனுக்கு காணிக்கை செலுத்தியவர். நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கத்திற்கு பாவாடம் என்று பெயர். இவர்தன் இருந்த வீட்டை சிறிய கீற்றுக் கொட்டகையாக போட்டு அங்கு குறிசொல்லும் மேடை அமைத்து, பழநியிலிருந்து வாங்கி வந்த பழநிஆண்டவர் படத்தை அங்கு வைத்துப் பூஜை செய்தவர். இவர் வைத்துப் பூஜை செய்த பழநி ஆண்டவர் படம் இன்றும் சன்னதியின் உட்பிரகாரத்தில் வடக்கு மண்டபத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இரத்தினசாமி தம்பிரான் :
இவரும் ஆண்டவருக்குப் பாவாடம் செய்தவர். இவர் அண்ணாச்சாமி தம்பிரானின் தொண்டர் ஆவார். அண்ணாச்சாமிக்கு பிறகு இவர் காலத்தில் தான் இங்குள்ள முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்போதுள்ள கருவறைப் பகுதி உள்ள இடத்தில் செங்கல், சுண்ணாம்புக் கட்டிடம் கட்டப்பட்டது. குறிசொல்லி வந்த மேடையை வடபழநி ஆண்டவர் கோயில் என அழைக்கச் செய்தவரும் இவர்தான்.
பாக்யலிங்க தம்பிரான் :
இப்போதுள்ள வடபழநி கோயிலின் கர்ப்பகிருகமும், முதல் உட்பிரகாரத் திருச்சுற்றும் கருங்கல் திருப்பணி ஆகியவற்றை செய்வித்தவர் இவர். இவரும் வடபழநி கோயிலுக்குப் பாவாடம் தரித்தவர். இவர் காலத்தில்தான் இக்கோயில் மிகவும் புகழ் பெற்று விளங்க தொடங்கியது. இம்மூவரின் சமாதிகளும் வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு வடமேற்காக 1 பர்லாங்கு தொலைவில் இருக்கின்றன. இப்போதுள்ள கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் பழைய குறிமேடை இருந்த இடம் இருக்கிறது. இம்மூன்று சாதுக்களுக்கும் நெற்குன்றம் பாதையில் தனியே திருக்கோயில்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட ஏதுவாக தினசரி பூஜைகளும் நடைபெறுகின்றன.