Category Archives: ஈரோடு
அருள்மிகு இராகவேந்திரர் திருக்கோயில், ஈரோடு
அருள்மிகு இராகவேந்திரர் திருக்கோயில், ஈரோடு, ஈரோடு மாவட்டம்.
+91-424- 221 4355 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ராகவேந்திரர் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | ஈரோடு | |
மாவட்டம் | – | ஈரோடு | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
கடந்த 17ம் நூற்றாண்டில் பல்லாரி மாவட்டம் ஹோசபேட்டைக்கு அருகில் வாழ்ந்து வந்த திம்மண்ணபட்டர், கோபிகாம்பாள் ஆகியோருக்கு பிறந்தவர்தான் இராகவேந்திரர். இவர் சிறு வயதிலேயே சகல சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தார். இவர் கும்பகோணத்தை சேர்ந்த ஸ்ரீசுதீந்தரரிடம் சிஷ்யராக அமர்ந்து சகல வித்தைகள் பயின்றார். சுதா பரிமளம் என்ற நூலை இயற்றினார். இவருடைய குடும்ப வாழ்க்கை கஷ்டமாக அமைந்தது. இவருடைய மனைவி மனமுடைந்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் ராகவேந்திரர் பல இடங்களுக்குத் தீர்த்த யாத்திரை சென்றார். கல்வி அறிவு இல்லாதவனுக்கு உயர்ந்த பதவி கிடைக்கும்படியும், தஞ்சாவூரில் ஏற்பட்ட பஞ்சத்தை நிவர்த்தி செய்தும், கருநாகம் தீண்டிய தன் சீடனை உயிர்பித்தும் அற்புத சாதனைகளை செய்தார். முன் காலத்தில் பிரகலாதன் யாகம் செய்த பூமியாக மந்த்ராலயம் இருந்ததை அறிந்த இராகவேந்திரர், அந்த இடத்திலேயே தமது பிருந்தாவனத்தை தாமே நிர்மாணம் செய்து கொள்ள தீர்மானித்தார். அதன்படி 1671ம் ஆண்டு இவர் தன் சிஷ்யர்கள் முன்னிலையில் “இந்து எனகே கோவிந்தா” என்று தொடங்கும் பாடலை இயற்றி, அதை பாடிக் கொண்டும் “நாராயணா” என்ற நாமச்சரணம் செய்து கொண்டும் பிருந்தாவனப் பிரவேசம் செய்து ஜீவ சமாதி அடைந்தார். இதையடுத்து தென் இந்தியா முழுவதும் பிருந்தாவனங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மக்களின் விருப்பத்திற்கு இணங்கி வேத விற்பன்னர் இராமாச்சார் என்பவர் 250 ஆண்டுகளுக்குமுன் ஆந்திர மாநிலம் மந்த்ராலயம் சென்று அங்கிருந்து மிருத்திகையை (புனித மண்) தலையில் சுமந்தவாறே, நடந்தே ஊர் ஊராக வந்து, ஈரோடு காவேரி கரையில் சாஸ்திரப்படி சிறிய பிருந்தாவனம் ஸ்தாபித்து கும்பாபிஷேகம் செய்தார்.
அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில், புதுப்பாளையம்
அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில், புதுப்பாளையம், அந்தியூர், ஈரோடு மாவட்டம்.
+91 96773- 65525 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | குருநாதசுவாமி | |
அம்மன் | – | காமாட்சி | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | புதுப்பாளையம் | |
மாவட்டம் | – | ஈரோடு | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிதம்பரத்தை அடுத்த பிச்சாபுரம் வனப்பகுதியில் 600 ஆண்டுகளுக்கு முன் குட்டியாண்டவருக்கு கோயில் கட்டி, மூன்று குழவிக்கற்களை மட்டும் நட்டு வழிபட்டனர். இந்த கோயில் பூசாரி வீட்டுப் பெண்ணை, ஆற்காடு நவாப் திருணம் செய்ய விருப்பம் தெரிவித்துப் பெண் கேட்டுள்ளார். உறவினர்களிடம் கலந்து பின் சம்மதம் தெரிவிப்பதாக நவாபின் ஜவானிடம் பூசாரி கூறினார். உறவினர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. அனைவரையும் சிறையில் தள்ளிவிடுவதாக நவாப் மிரட்டியுள்ளார். அப்போது உறவினர் ஒருவருக்கு அருள்வந்து, “நீங்கள் வணங்கி வரும் இம்மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு, இரவோடு இரவாக சென்றுவிடுங்கள்” என்று கூறினார். பூசாரியாரின் உறவினர்கள் ஒரு கூடையில் மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு சென்றனர். அடுத்த நாள் நவாப்பின் ஆட்கள் அங்கு சென்று பார்த்த போது யாரும் இல்லை. கோயில் கோபுரம், குதிரை மற்றும் யானைகள் கட்டும் இடங்களை சேதப்படுத்தினர். கற்களுடன் சென்றவர்கள் பல ஊர் கடந்து பசியாலும், பட்டினியாலும் வாடி வதங்கினர். தங்களையே பாதுகாக்க இயலாத நிலையில், தம்முடன் கொண்டு வந்த மூன்று கற்களையும் அருகில் இருந்த ஆற்றில் வீசிவிட்டு, வேறு ஊருக்குச் செல்ல முடிவு செய்து ஓரிடத்தில் படுத்தனர். அடுத்தநாள் அனைவரும் புறப்பட்ட போது, தங்களுடைய கூடையில் மூன்று கல் சிலைகள் இருந்ததைக் கண்டு ஆனந்தக்கண்ணீர் விட்டனர். அவற்றைத் தங்கள் குலதெய்வமாக வழிபட முடிவெடுத்தனர். அந்தியூரில் உள்ள புதுப்பாளையம் என்ற இடத்திலுள்ள கல்மண்டபத்தை அடைந்தனர். பாண்டிய மன்னரிடம் அனுமதி பெற்று மூன்று கற்களையும் வழிபாடு செய்தனர். பிற்காலப் பாண்டிய மன்னர்களில் ஒரு குறுநிலமன்னன் இந்த இடத்தில் ஒரு கோயில் கட்டினார். காலப்போக்கில் மூன்று கற்சிலைகளுக்கும் பதிலாக, மூன்று உருவங்களை அமைத்து வழிபட முடிவு செய்தனர். அதன்படி முதல் கல்லைக் குலதெய்வமாக்கி காமாட்சி அம்மனாகவும், இண்டாவது கல்லை பெருமாளாகவும், மூன்றாவது கல்லை அப்பன் (சிவன்), மகன் (முருகன்) ஆகிய இருவரையும் இணைத்த நிலையில் குருநாதசுவாமி என்றும் பெயரிட்டனர். குரு என்றால் ஈஸ்வரன், நாதன் என்றால் முருகன். தெலுங்கு பக்தர்கள் இவரை பாலகுருநாதசுவாமி என்றும், உக்கிரகுருநாதர் என்றும் வணங்கி வருகின்றனர்.