Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், குன்னியூர்
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மன்னார்குடி, குன்னியூர் – தஞ்சாவூர் மாவட்டம் .
********************************************************************************************************
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை திறந்திருக்கும்.
மதுவன சேத்திரம் என்று அழைக்கப்படும் மன்னார்குடி நகரின் கீழ்திசையில் அகத்திய நதியின் வடக்கிலும், அரிச்சந்திரா நதியின் தெற்கிலும் கன்னிபுரி என்ற கிராமம் இருக்கிறது. இப்போது இவ்வூர் குன்னியூர் எனப்படுகிறது.
இங்கே “சீதளா பரமேசுவரி” என்ற பெயரில் காமாட்சியம்மன் குடிகொண்டிருக்கிறாள். “காம” என்ற சொல்லுக்கு “அன்பு” எனப் பொருள். “அக்ஷி” என்ற சொல்லுக்கு கண் என்று பொருள். “அன்பு பொங்கும் கண்களை உடையவள்” என்று காமாட்சிக்குப் பொருள் கொள்ளலாம்.
மற்றொரு பொருளின் படி “கா” என்ற எழுத்திற்கு “சரசுவதி” எனப் பொருள். “மா” என்ற சொல்லுக்கு “மகாலட்சுமி” என்று பொருள். இருவரையும் தங்கள் கண்களாகக் கொண்டவள் காமாட்சி. இது சங்கராச்சாரியார் வாக்கு.
இந்த கோயிலில் உள்ள காமாட்சி விக்கிரகம் மிகவும் சிறியது. 200 ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக தோன்றியது. இங்கு அம்மன் வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள். ஆரம்பத்தில் கீற்றுக் கொட்டகையே இருந்தது. பின்பு பெரிய கோயிலாக கட்டப்பட்டது.
சிறப்பம்சம்: இங்குள்ள அம்மன் பூமியில் இருந்த தானாக தோன்றியவள் என்பதால், மக்கள் கோயில் அருகே செல்லும் போது வேகமாக அதிர்ந்துகூட நடக்க மாட்டார்கள். மிகமிக மெதுவாக அடிமேலடி வைத்து நடந்து செல்வார்கள்.
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு-602101. காஞ்சிபுரம் மாவட்டம்.
***********************************************************************************************
+91- 44 – 2627 2053, 2649 5883 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி – 1.30 மணி, மாலை 3 – இரவு 9.30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பகலில் நடை அடைக்கப்படுவதில்லை.
தல விருட்சம்: – மாமரம்
பழமை: – 2000-3000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்: – சூதவனம்
ஊர்: – மாங்காடு
மாநிலம்: – தமிழ்நாடு
கைலாயத்தில் ஒருசமயம் பார்வதிதேவி, விளையாட்டாகச் சிவனின் கண்களை மூட, உலக இயக்கமே நின்றது. தவறை உணர்ந்த அம்பிகை மன்னிப்பு கோரினாள். சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார்.
இத்தலத்தில் தவமிருந்து வழிபட்டால், தகுந்த காலத்தில் காட்சி தந்து அவளைத் திருமணம் செய்து கொள்வதாக சிவன் கூறினார். அதன்படி இங்கு வந்த அம்பாள் பஞ்சாக்னியை (ஐந்து அக்னிகள்) வளர்த்து, அதன் மத்தியில் இடது கால் கட்டைவிரலை ஊன்றி நின்று கடுந்தவமிருந்தாள்.
காஞ்சிக்குச் சென்று தவமிருக்கும்படி சிவனின் அருள்வாக்கு கிடைக்கவே அங்கு சென்றாள். இருப்பினும், அம்பிகை முதன் முதலாக தவம் செய்த இடம் என்பதால் மாங்காடு,”ஆதி காமாட்சி தலம்” எனப்படுகிறது.
அம்பாள் அந்தஸ்தில் ஸ்ரீசக்ரம்:
பொதுவாகக் கருவறையில் அம்பிகைதான் பிரதான தெய்வமாக(மூலவர்) வணங்கப்படுவாள். ஆனால், இக்கோயிலில் அர்த்தமேரு ஸ்ரீசக்ரமே அம்பாளாகக் கருதி வணங்கப்படுகிறது. ஸ்ரீசக்ரத்திற்கு பின்புறம் அம்பாளின் உற்சவர் சிலை இருக்கிறது. இவளுக்கே அபிசேக, அலங்காரங்கள் செய்யப்படுகிறது.