Category Archives: ஆலயங்கள்
நாகநாதசுவாமி திருக்கோயில், கீழ்ப்பெரும்பள்ளம்
அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், (கேது தலம்), கீழ்ப்பெரும்பள்ளம், நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4364 – 260 051, 260 582, 260 088, 94435 64642
மூலவர் | – | நாகநாதர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | சவுந்தர்யநாயகி | |
தல விருட்சம் | – | மூங்கில் | |
தீர்த்தம் | – | நாகதீர்த்தம் | |
ஆகமம் | – | காமிகம் | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கீழப்பெரும்பள்ளம் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற, பாற்கடலை கடைந்தபோது வாசுகி என்ற நாகத்தைக் கயிறாகப் பயன்படுத்தினர். தொடர்ந்து பாற்கடலை கடைந்ததால் வாசுகி பலவீனமடைந்தது. ஒருகட்டத்தில் களைப்பால் விஷத்தை உமிழ்ந்தது. பயந்து போன தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவர் விஷத்தை விழுங்கி, தேவர்களைக் காப்பாற்றினார். தனது விஷத்தை, சிவன் விழுங்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக வாசுகி வருந்தியது. சிவஅபச்சாரம் செய்ததற்கு பிராயச்சித்தமாக தவமிருந்தது.
வாசுகிக்கு காட்சி தந்த சிவன், பாவ விமோசனம் கொடுத்ததோடு, அதன் தியாக உணர்வைப் பாராட்டினார். அப்போது வாசுகி, தனக்கு அருள் செய்த கோலத்தில், தனக்கு காட்சி கொடுத்த இடத்தில் எழுந்தருள வேண்டும் என்று வேண்டியது. அதன் வேண்டுதலை ஏற்ற சிவன், நாகத்தின் பெயரைத் தாங்கி, “நாகநாதர்” என்ற பெயருடன் இத்தலத்தில் அமர்ந்தார்.
இக்கோயிலில் கேது பகவானுக்கு இராகுகாலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது.
நாகமல்லீஸ்வரர் திருக்கோயில், நாலூர்
அருள்மிகு நாகமல்லீஸ்வரர் திருக்கோயில், நாலூர் (மீஞ்சூர் வழி), திருவள்ளூர் மாவட்டம்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள நாலூரில் இருக்கிறது மிகப்புராதனமான சிவாலயம் ஒன்று. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் இது.
ஆனால் கோயிலை நெருங்கின போது கண்டது முட் செடிகள், செடி, கொடி, புதர்கள் மதிலில் முளைத்த அரசமரம் என்று பெரிய புதர் ஒன்றுதான். சிறப்பும் செழிப்புமாக ஒரு காலத்தில் திகழ்ந்த கோயில். சிதைந்தும், சீரழிந்தும் கிடக்கிறது. செருப்புக்காலோடு போகக் கூடாது என்பார்கள். ஆனால் நெருஞ்சி முள் குத்துவதால் , செருப்புடன் தான் செல்லமுடியும். புதரை விலக்கி எட்டி பார்த்தால் புழுதிபடிந்த நிலையில் நாகமல்லீஸ்வரரின் இலிங்கம் உள்ளது. ஆண்டுகள் பல கடந்து விட்டன. மேனியெலாம் திருநீறுக்கு பதில் புழுதி படர்ந்திருக்கிறது.
அசுரனாக இருந்து அமுதத்தை ஏமாற்றிப் பெற்றதால், இராகுவுக்கும் கேதுவுக்கும் தோஷம் பற்றிக்கொண்டது. அதோடு காட்டிக்கொடுத்த சூரிய சந்திரனோடு பகையும் எழுந்தது. பகை விலகவும், தோஷம் தொலையவும் பல்வேறு தலங்களில் சிவனின் இலிங்க திருமேனியை அமைத்து வழிப்பட்டனர். அப்படி இத்தலம் வந்த போது இங்குள்ள தாமரைத் தடாகத்தில் நீராடிவிட்டு சிவனுக்கு ஆராதனை புரிய நினைத்தனர். அப்போது பூத்திருந்த தாமரைகளுள் ஒன்று பொன் வண்ணமாக மாறியது. வியப்புடன் அவர்கள் அதை நோக்கினர். காரணம் புரிந்தது. இறைவனையும் இறைவியையும் ஒரு சேர வழிபடுவதையும் மறந்து ஈசனை மட்டுமே பூஜிப்பதால் தான் தங்களின் தோஷம் தொலையாமல் இருப்பதாக உணர்ந்தார்கள். இராகுவும், கேதுவும், அதனால், அம்மைக்கும், அப்பனுக்கும் வடிவங்கள் அமைத்து, மல்லிகையாலும் தமரையாலும் அர்ச்சனை செய்து வணங்கினார்கள். இறைவனும், இறைவியும், பாம்பு கிரகங்களின் தோஷம் நீங்க அனுகிரகம் புரிந்தார்கள். அதோடு, “இத்தலம் வந்து எம்மை வழிபடுவோரை நீங்கள் வாட்டாமல் இருக்க வேண்டும்” என்று ஆணையிட்டார்கள். பாம்பு கிரகங்கள் வழிபட்ட அப்பகுதியில் பரமனுக்கும் பார்வதிக்கும் ஓர் ஆலயம் அமைந்தது. நாகங்கள் மல்லிகையால் அர்ச்சித்து வழிபட்டதால், நாகமல்லீஸ்வரர் ஆனார் ஈசன். தங்க நிறத் தாமரையில் தன் வடிவம் காட்டியதால், சொர்ணாம்பிகை ஆனாள் அம்மன்.