Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு படம்பக்கநாதர்(தியாகராஜசுவாமி) திருக்கோயில், திருவொற்றியூர்
அருள்மிகு படம்பக்கநாதர்(தியாகராஜசுவாமி) திருக்கோயில், திருவொற்றியூர், திருவள்ளூர் மாவட்டம்.
+91-44 – 2573 3703 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர் | |
அம்மன் | – | வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், திரிபுரசுந்தரி | |
தல விருட்சம் | – | மகிழம், அத்தி | |
தீர்த்தம் | – | பிரம்ம, நந்தி தீர்த்தம் | |
ஆகமம்/பூஜை | – | காரணம், காமீகம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருவொற்றியூர் | |
ஊர் | – | திருவொற்றியூர் | |
மாவட்டம் | – | திருவள்ளூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் |
பிரளயகாலத்தில் உலகம் அழிவுற்று, மீண்டும் புதிதாக உலகம் தோன்றும். அப்போதெல்லாம் பிரம்மா தோன்றி, உயிர்களைப் படைப்பார். ஒரு பிரளயகாலம் வந்தபோது, உலகம் அழிவதை பிரம்மா விரும்பவில்லை. எனவே, உலகம் அழியாமல் காக்கும்படி சிவனை வேண்டி யாகம் நடத்தினார். யாகத்தின் மத்தியில் அக்னி வடிவில் தோன்றிய சிவன், அவரது வேண்டுதலை ஏற்றார். பின், பிரம்மாவின் வேண்டுதலுக்காக இலிங்க ரூபமாக எழுந்தருளினார். யாக குண்டம் கோயிலாக உருவானது. பிரளயம் நீங்கி, உலகம் மீண்டும் துவங்கிய வேளையில் இங்கு எழுந்தருளியதால் இத்தலத்து சிவன், “ஆதிபுரீஸ்வரர்” என்று பெயர் பெற்றார். பிரளய வெள்ளத்தை ஒற்றச் செய்து (விலகச்செய்தல்) அருளியதால் தலம் “திருவொற்றியூர்” என்று பெயர் பெற்றது.
சப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர் பிரசித்தி பெற்ற மூர்த்தி என்பதால், இவரது பெயரிலேயே தலம் அழைக்கப்படுகிறது. இவ்வூரில் வசித்த ஏலேலசிங்கர் என்பவர், மன்னனுக்குக் கொடுப்பதற்காக மாணிக்க நகைகள் வைத்திருந்தார். அச்சமயத்தில் காசியில் வசித்த சிவபக்தர்கள் இருவர், இங்கு வந்தனர். அப்போது சிவன் ஏலேல சிங்கரிடம், அந்த பக்தர்களுக்கு மாணிக்கத்தைத் தரும்படி கூறவே, அவரும் கொடுத்துவிட்டார். மன்னன் ஏலேல சிங்கரிடம் மாணிக்கம் கேட்டபோது, அவர் செய்வதறியாது திகைத்தார். அப்போது, சிவனே அவருக்கு மாணிக்கம் தந்து அருள் செய்தார். எனவே இவர், “மாணிக்க தியாகர்” என்றும் அழைக்கப்படுகிறார்.
அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டலம்
அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டலம், ஊத்துக்கோட்டை தாலுகா, திருவள்ளூர் மாவட்டம்.
+91-44 – 2762 9144. +91- 99412 22814 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சிவாநந்தீஸ்வரர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | ஆனந்தவல்லி | |
தல விருட்சம் | – | கள்ளி | |
தீர்த்தம் | – | நந்தி தீர்த்தம் | |
ஆகமம் | – | காரணாகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருக்கள்ளில் | |
ஊர் | – | திருக்கண்டலம் | |
மாவட்டம் | – | திருவள்ளூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது, வடக்கு உயர்ந்து தெற்கு பகுதி தாழ்வாகியது. இதனால் பூமி சமநிலை இழக்கவே சிவன், அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார். சிவனது திருமணத்தை தானும் காணவேண்டுமென விரும்பிய அகத்தியர் அவரிடம், தான் விரும்பும் இடங்களில் எல்லாம் அவரது திருமணக்காட்சியை தரிசிக்கும்படி வரம் பெற்றார். தென்பகுதியை நோக்கி வந்த அகத்தியர், திருப்பாலைவனம் தலத்தை வணங்கிவிட்டு அங்கு தங்கியிருந்தார். அன்று இரவு அவரது கனவில் சிவன் தோன்றி, இத்தலத்தையும், தீர்த்தத்தையும் குறிப்பால் உணர்த்தி, சோமாஸ்கந்தராகவும் காட்சி தந்தார். பின் அகத்தியர் இத்தலம் வந்து சுவாமியை வழிபட்டார். சிவன், அம்பாளுடன் திருமணக்காட்சி காட்டியருளியதோடு, முருகனோடு சோமாஸ்கந்தராகவும் காட்சி தந்தார். அவரது தரிசனத்தால் அகத்தியர் சிவ ஆனந்தம் அடைந்தார். “தனக்கு அருள்புரிந்தது போலவே இத்தலத்தில் இருந்து அனைவருக்கும் அருளவேண்டும்” என சிவனிடம் அகத்தியர் வேண்டினார். சிவனும் இங்கு சுயம்புவாக எழுந்தருளி “சிவாநந்தீஸ்வரர்” என்ற பெயரும் பெற்றார்.
பிருகு முனிவர் சிவனை மட்டும் வணங்கும் பழக்கம் உடையவர். ஒருசமயம் சிவனைப் பார்க்க அவர் கைலாயம் சென்றார். அங்கு சிவன், பார்வதியுடன் அமர்ந்திருந்தார். அருகில் சென்ற பிருகு, சிவனை மட்டும் வணங்கி அவரை சுற்றி வந்தார். இதைக்கண்ட பார்வதி தேவி மனதில் கோபம் கொண்டாள். பிருகு தன்னையும் சேர்த்து வணங்க வேண்டும் என நினைத்த அவள் சிவனை ஒட்டியபடி அமர்ந்து கொண்டாள். பிருகுவோ வண்டு வடிவம் எடுத்து சிவனை மட்டும் சுற்றி வந்தார். சிவமும், சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன், தன் இடப்பாகத்தில் சக்திக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். அப்போதும் பிருகு முனிவருக்கு மனதில் திருப்தி ஏற்படவில்லை. “என்னதான் இருந்தாலும் சிவன்தானே பெரியவர்” என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது.