Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர்

அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை, சென்னை மாவட்டம்.

+91 – 44 – 2441 0477 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6மணி முதல் மணி 12வரை, மாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மருந்தீஸ்வரர்
உற்சவர் தியாகராஜர்
அம்மன் திரிபுரசுந்தரி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் பஞ்ச தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவான்மீகியூர்
ஊர் திருவான்மியூர்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

வசிஷ்டமுனிவர் செய்த சிவபூஜைக்காக, இந்திரன் தன்னிடமிருந்த காமதேனுவை அவருடன் அனுப்பி வைத்தான். பூஜை நேரத்தில் காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்யவே கோபம்கொண்ட முனிவர், அதனை புனிதத்தன்மை இழந்து காட்டுப்பசுவாக மாறும்படி சபித்தார். கலங்கிய காமதேனு, தனக்கு விமோசனம் கேட்க, இத்தலத்தில் வன்னி மரத்தடியில் சுயம்புலிங்கமாக உள்ள சிவனை வணங்கினால் விமோசனம் உண்டு என்றார். அதன்படி, இங்கு வந்த காமதேனு, சுயம்புவாய் இருந்த சிவன் மீது தினசரி பால் சுரந்து விமோசனம் பெற்றது. இதனால், இங்குள்ள இறைவன் பால்வண்ணநாதர்என்றும் அழைக்கப்படுகிறார்.

கொள்ளைக்காரராக இருந்த வால்மீகி, திருந்திட எண்ணம் கொண்டு இங்குள்ள சிவனை வணங்கி வந்தார். ஒருமுறை, அவர் சிவனை தரிசிக்க வந்தபோது, அவரைக்கண்டு பயந்த காமதேனு ஓடியது. அப்போது இங்கிருந்த இலிங்கத்தை அறியாமல் மிதித்ததில் சுவாமியின் மேனியில் தடம் பதிந்தது. இன்றும்கூட, சுவாமியின் தலையிலும், மார்பிலும் பசு மிதித்த தடம் இருக்கிறது.

அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை

அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை.

+91- 44 – 2464 1670 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கபாலீஸ்வரர்
அம்மன்
கற்பகவல்லியம்மை
தல விருட்சம்
புன்னை
தீர்த்தம் கபாலீ தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், இராம தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000 ஆண்டுகளுக்கு முன்
புராணப் பெயர் கபாலீச்சரம், திருமயிலாப்பூர்
ஊர் மயிலாப்பூர்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், 
சுந்தரர் 

பார்வதிதேவி சிவனிடம், “சிவாயநமஎன்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினாள். சிவனும் உபதேசித்தார். அவ்வேளையில் மயில் ஒன்று நடன மாடவே, அதன் அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தை கவனிக்காமல் வேடிக்கை பார்த்தாள். பாடத்தைக் கவனிக்காத மாணவர்களுக்கு, குரு தண்டனை கொடுப்பார்.

இப்போது குருவான சிவன், மாணவியான அம்பிகையை, “எதன் அழகில் மயங்கினாயோ அதுவாகவே பிறஎன்று மயிலாக மாறும்படி செய்து விட்டார். அம்பிகை தன் குற்றத்திற்கு விமோசனம் கேட்டாள். பூலோகத்தில் தன்னை மயில் வடிவில் வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலம் வந்தாள். சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர்.

சிவனைப்போலவே பிரம்மாவும் ஐந்து தலைகளுடன் இருந்தார். இதனால் தானும் சிவனுக்கு ஈடானவனே என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. இதனால் அவர் ஆணவத்துடன் இருந்தார். பிரம்மா, ஒவ்வொரு யுகம் அழியும்போது அழிந்து விடுவார். மீண்டும் புது யுகம் உண்டாகும்போது, புதிதாக ஒரு பிரம்மா படைக்கப்படுவார். ஆக, பிரம்மா ஒவ்வொரு யுகத்திலும் அழிந்து மீண்டும் பிறப்பதால் அவர் நிலையில்லாதவர் ஆகிறார். சிவபெருமானோ ஆதியும், அந்தமும் இல்லாதவர். இதை உணராமல், பிரம்மா ஆணவம் கொண்டதால், அவரைத் திருத்த நினைத்த சிவபெருமான், அவரது ஒரு கபாலத்தை (தலையை) கிள்ளிக் கையில் ஏந்திக்கொண்டார். எனவே இவர், “கபால ஈஸ்வரர்என்றழைக்கப்பட்டு கபாலீஸ்வரர்ஆனார். கபாலீச்சரம் என்பது இத்தலத்தின் புராணப்பெயர் ஆகும்.