Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில், திருவாய்ப்பாடி

அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில், திருவாய்ப்பாடி, திருப்பனந்தாள் போஸ்ட், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 94421 67104 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பாலுகந்தநாதர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் ஆத்தி
தீர்த்தம் மண்ணியாறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வீராக்கண், திருஆப்பாடி
ஊர் திருவாய்பாடி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவர் தன் இளம் வயதில் அனைத்தும் கற்றார். ஏழாவது வயதில் குல முறைப்படி உபநயனம் நடந்தது. சிவனே அனைத்தும் என நினைத்து அதன்படி வாழ்ந்து வந்தார். ஒருநாள் கன்றுக்குட்டி, தன்னை மேய்க்கும் இடையனை முட்டப் பாய்ந்தது. உடனே அவன் கம்பால் அடித்தான். இதைக்கண்ட விசாரசருமன் தானே அப்பசுக்களை மேய்த்தான். தாயன்புடன் இவன் மேய்த்ததால் முன்னை விட அதிக பால் கொடுத்தது. விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால், மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான். அதற்கு பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தான். இருந்தாலும் பசுவின் சொந்தக்காரருக்கு சரியான அளவு பால் கிடைத்து வந்தது.


விசாரசருமரின் இந்த செயலை பார்த்த சிலர், வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாக கூறினர். இவனது தந்தையும் இதை கேள்விப்பட்டு, மறைந்திருந்து நடப்பதை பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமன் எப்போதும் போல் நீராடி விட்டு தன் பூஜைகளை தொடர்ந்தான். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தான். இதைப்பார்த்த தந்தை அவனை அடித்ததுடன், பால்குடங்களையும் தட்டி விட்டார்.
சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன், பூஜைக்கு இடையூறு செய்தவரை ஒரு கோலால் தாக்க, அதுவே மழுவாக மாறி கால்களை வெட்டியது. கால்கள் வெட்டப்பெற்றவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமன் மீண்டும் சிவபூஜையில் ஆழ்ந்தார். இதைக்கண்ட சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து,”என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தையாவேன்எனக் கூறி தன் கழுத்திலிருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி சண்டிகேஸ்வரர்ஆக்கினார். 63 நாயன்மார்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் இவர். அருகிலுள்ள சேய்ஞலூர் இவரது அவதார தலமாகவும், திருவாய்ப்பாடி லிங்கம் அமைத்து வழிபட்டு முக்தி பெற்ற தலமாகவும் போற்றப்படுகிறது. மூலஸ்தானத்தின் அருகிலேயே சண்டிகேஸ்வரர் அருள்பாலிப்பது சிறப்பு.

அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள்

அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள்,தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435 – 245 6047, 94431 16322 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அருணஜடேசுவரர்
அம்மன் பெரிய நாயகி
தல விருட்சம் பனைமரம்
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்
ஆகமம் காமிய ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தாடகையீச்சரம், திருப்பனந்தாள்
ஊர் திருப்பனந்தாள்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

தாடகை என்ற பெண் இத்தல இறைவனை நாள்தோறும் பூஜித்து வந்தாள். ஒரு நாள் சிவனுக்கு மாலை சாத்தும் போது அவளது மேலாடை நழுவியது. ஆடையை ஒரு கையால் பற்றிக்கொண்டு மாலை சாத்தமுடியாமல் அப்பெண் வருந்தினாள். அப்போது இறைவன் அந்த பெண்ணுக்காக இரங்கி தன் தலையை சற்று சாய்த்து கொடுத்தார். மங்கையும் மாலையை அணிவித்துவிட்டு மகிழ்ச்சியுடன் வணங்கிச் சென்றாள். அன்று முதல் சிவலிங்க திருமேனி சாய்ந்தே இருந்தது. அப்போது இந்தக்கோயிலில் சோழ மன்னனின் திருப்பணி நடந்து கொண்டிருந்தது. சிவன் தலை சாய்ந்திருக்கும் செய்தியை மன்னன் கேள்விப்பட்டான். உடனே தனது படையை அனுப்பி சிவனது தலையை நிமிர்த்த ஏற்பாடு செய்தான். யானைகளை சிவலிங்கத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டி இழுத்தனர். ஆனால் முடியவில்லை. மனம் வருந்தினான் மன்னன்.

63 நாயன்மார்களில் ஒருவரான குங்குலியக்கலய நாயானர் இத்தல சிவனை வழிபட வந்திருந்தார். அவருக்கும் இந்த செய்தி எட்டியது. “நமசிவாயஎனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி சிவனுக்கு குங்குலியப்புகையினால் தூபமிட்டார். பின் பூவினால் சுற்றப்பட்ட ஓர் கயிறை எடுத்து ஒரு முனையை சிவலிங்கத்தில் இணைத்து, மற்றொரு முனையை தன் கழுத்தில் கட்டி பலமாக இழுத்தார். கயிறு இறுகியதால் இவரது உயிர் போகும் நிலை ஏற்பட்டது. ஆனால் நாயனார் கவலைப்படவில்லை. தன் முழு பலத்தையும் கொண்டு இழுத்தார். இவரது அன்புக்கு கட்டுப்பட்டார் சிவன். இதற்கு மேலும் நாயனாரை இறைவன் சோதிக்க விரும்பவில்லை. சிவலிங்கம் நேரானது. குங்குலியக்கலயனாரின் பக்தியையும், இறைவனிடம் கொண்ட அன்பையும் கண்ட மன்னன் மகிழ்ந்தான். நாயனாருக்கு பல பரிசுகள் கொடுத்து கவுரவப்படுத்தினான்.