Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்புறம்பியம்
அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்புறம்பியம், தஞ்சாவூர் மாவட்டம்.
+91 435 2459519, 2459715, 94446 26632, 99523 23429 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சாட்சி நாதேஸ்வரர், சாட்சீஸ்வரர், புன்னைவனநாதர் | |
அம்மன் | – | கரும்பன்ன சொல்லி | |
தல விருட்சம் | – | புன்னை | |
தீர்த்தம் | – | பிரமதீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருப்புறம்பயம், கல்யாண மாநகர், புன்னாகவனம் | |
ஊர் | – | திருப்புறம்பியம் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் |
பிரளய வெள்ளம் வந்தபோது புறம்பாய் இருந்தமையால் “புறம்பயம்” என்று பெயர். இரத்தினவல்லி என்னும் ஒரு வணிக குலத்துக் கன்னிப் பெண் தனக்கென்று உறுதிசெய்யப் பெற்றிருந்த கணவனுடன் திருமணமாகுமுன் இவ்வூருக்கு வந்தாள். அப்பொழுது கணவனை பாம்பு கடித்து இறந்தமையால் அவள் வருந்தியழுதாள். அவ்வூருக்கு வந்திருந்த திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடி அவனை எழுப்பியருளி, இரத்தினவல்லிக்கு திருமணம் செய்து வித்தார். இறைவன் சான்றாக நின்றருளினார். இதனால் இறைவனுக்கு “சாட்சிநாதர்” என்று பெயர் பெற்றார். இதற்கு வன்னிமரமும் ஒரு சான்றானது. வன்னிமரம் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது, சாட்சி சொன்ன வரலாறு திருவிளையாடற் புராணத்திலும், தலபுராணத்திலும் வருகிறது. இத்தலத்திலுள்ள பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகசதுர்த்தியன்று தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தேன் வெளிவராது. மற்ற நாள்களில் திருமுழுக்கு இல்லை. தெட்சிணாமூர்த்திக்குரிய 24 முக்கியத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும். அகத்தியர், பிரமன், சனகாதி நால்வர், விசுவாமித்திரர் முதலியோர் வழிபட்ட தலம். அரித்துவசன் என்னும் அரசனுக்குத் துர்வாச முனிவர் சாபத்தால் ஏற்பட்ட முயலக நோய் நீங்கிய தலம். கோவிலுக்கு விறகு கொண்டுவந்த ஒரு ஏழைக்கு இறைவன் தெட்சிணாமூர்த்தி ரூபமாகத் தரிசனம் கொடுத்தார். கோவிலின் கிழக்கேயுள்ள குளக்கரையில் இத்தெட்சிணாமூர்த்தியுள்ளார்.
அருள்மிகு எழுத்தறிநாதர் கோயில், இன்னம்பூர்
அருள்மிகு எழுத்தறிநாதர் கோயில், இன்னம்பூர், தஞ்சாவூர் மாவட்டம்.
+91 435 200 0157, 96558 64958 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | எழுத்தறிநாதர்(அட்சரபுரீஸ்வரர்) | |
அம்மன் | – | நித்தியகல்யாணி, சுகந்த குந்தளாம்பாள் | |
தல விருட்சம் | – | செண்பகமரம் | |
தீர்த்தம் | – | ஐராவத தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருஇன்னம்பூர், திருவின்னம்பர் | |
ஊர் | – | இன்னம்பூர் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருநாவுக்கரசர் |
சோழமன்னனின் கணக்கரான சுதன்மன் ஒருமுறை காட்டிய கணக்கில் சந்தேகம் ஏற்பட்டது. உரிய கணக்கை சரியாகக் காட்டும்படி கடுமையான உத்தரவிட்டான். சரியான கணக்கு காட்டியும், தன் மீது பழி வந்துவிட்டதே என எண்ணிய அவர், சிவனை வேண்டினார். உடனே சிவன் சுதன்மனின் வடிவத்தில் மன்னனிடம் சென்று ஐயத்தைப் போக்கினார். சுதன்மன் சற்றுநேரம் கழித்து கணக்குடன் செல்லவே,”ஏற்கனவே காட்டிய கணக்கை மீண்டும் ஏன் காட்ட வருகிறீர்?” என மன்னன் சொல்ல, தனக்குப் பதிலாக இறைவனே வந்து கணக்கு காட்டிய விபரத்தை மன்னனிடம் எடுத்துரைத்தார். வருத்தப்பட்ட மன்னன், சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டதுடன், ஈசனுக்கு கோயிலும் எழுப்பினான். சுவாமிக்கு “எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர்” என்ற திருநாமம் ஏற்பட்டது. “அட்சரம்” என்றால் “எழுத்து.” இது சுயம்புலிங்கம் என்பதால் “தான்தோன்றீயீசர்” என்றும் பெயர் உள்ளது. அகத்தியருக்குத் இறைவன் இலக்கணம் உபதேசித்த தலம் இது. அம்பாள் “கொந்தார் குழலம்மை” என்னும் சுகந்த குந்தளாம்பாளுக்கு தனி சந்நிதியும், நித்திய கல்யாணி அம்மனுக்குத் தனி சந்நிதியும் ஆக இரண்டு அம்பாள் சந்நிதிகள் உள்ளன.