Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு சாஸ்தா (கைவிடேயப்பர்) திருக்கோயில், கைவிளாஞ்சேரி
அருள்மிகு சாஸ்தா (கைவிடேயப்பர்) திருக்கோயில், கைவிளாஞ்சேரி, நாகப்பட்டினம் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சாஸ்தா (கைவிடேயப்பர்) | |
அம்மன் | – | பூரணை, புஷ்கலை | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கைவிளாஞ்சேரி | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முன்னொரு காலத்தில் வீரமகேந்திரபுரம் என்ற தீவில் சூரபத்மனும் அவனது சகோதரர்களும் அரக்க சாம்ராஜ்யத்தை நிறுவினர். பூலோகம், பாதாள லோகத்தைக் கைப்பற்றிய அவர்கள் இந்திரலோகத்தையும் கைப்பற்றினார்கள். அங்கும் ஆட்சி அமைத்தார்கள். இந்திர லோகத்தில் ஆட்சியைப் பறிகொடுத்த தேவர்களின் தலைவனான இந்திரன், இந்திராணியுடன் பூலோகம் வந்தான். சீர்காழி என்ற புண்ணியத் தலத்தில் உள்ள மூங்கில் காட்டில் தங்கி மூங்கிலாக வடிவெடுத்து இருவரும் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். இந்திரலோகத்தை மீட்டுத் தரும்படி சிவபெருமானை பகல் வேளையில் தவமிருந்து வழிபட்டனர். இரவில் யார் கண்ணிலும் படாதபடி மறைந்து சென்று சாஸ்தாவின் கையில் உள்ள தாமரைப் பூவிதழ்களின் நடுவே தங்கி தங்களை பாதுகாத்துக் கொண்டனர். இவர்களது கடும் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், சிவலோகம் வந்து தங்கள் குறைகளை தெரிவிக்கக் கூறினார். இந்திரன், இந்திராணியை சாஸ்தாவிடம் ஒப்படைத்து விட்டு சிவலோகம் சென்றான். சில காலத்திற்குப் பின், சாஸ்தா தனது காவல் கணக்குகளை சிவபெருமானிடம் ஒப்படைப்பதற்காக சிவலோகம் வந்தடைந்தார். அப்படி வருமுன் இந்திராணியை தனது தளபதியான மகாகாளரிடம் ஒப்படைத்தார். இதுபோன்ற சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூரபத்மனின் தங்கை அஜமுகி, அழகே உருவான இந்திராணியைத் தன் அண்ணனுக்கு மணமுடிக்க எண்ணி, அவளை கவர்ந்து செல்ல முயன்றாள். இதைக் கண்டு கோபமடைந்த மகாகாளர், அஜமுகியிடம் சண்டையிட்டார். அவளது கரத்தை வெட்டியதும், அலறியடித்து ஓடினாள். மகாகாளர் இந்திராணியை மீட்டார். அரக்கியான அஜமுகியின் கை விழுந்த காடு கைவிழுந்த சேரி என அழைக்கப்பட்டது. இதுவே மருவி தற்போது “கைவிளாஞ்சேரி” என அழைக்கப்படும் ஊராகும். சாஸ்தா தனக்கு அளித்த பொறுப்பை ஏற்று இந்திராணியை காப்பாற்றி பேரருள் புரிந்தார். இந்திராணியைக் கை விடாது காப்பாற்றிய சாஸ்தா இங்கு “கைவிடேயப்பர்” என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
அருள்மிகு சாஸ்தா திருக்கோயில், சி.சாத்தமங்கலம்
அருள்மிகு சாஸ்தா திருக்கோயில், சி.சாத்தமங்கலம், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சாஸ்தா | |
அம்மன் | – | பூரணை, புஷ்கலை | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | சாஸ்தாமங்கலம் | |
ஊர் | – | சாத்தமங்கலம் | |
மாவட்டம் | – | கடலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஒரு காலத்தில் இப்பகுதி மக்களுக்கு திருடர்களால் மிகவும் தொந்தரவு ஏற்பட்டு வந்தது. இதனால் வருந்திய மக்கள் காவல் தெய்வமான சாஸ்தாவை வழிபட விரும்பினர். இதன் அடிப்படையில் இங்கு பூரணை, புஷ்கலை சமேத ஹரிஹரபுத்திரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். இதனால் அவர்களுக்கு திருடர்களின் தொந்தரவு நீங்கி நிம்மதி ஏற்பட்டது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலில் திருடர்கள் நுழைந்து பூரணை, புஷ்கலை சமேத ஹரிஹரபுத்திரரின் ஐம்பொன்சிலைகளை திருடி சென்று விட்டனர். பின்னர் ஹரிஹரபுத்திரரின் அருளால் அவர்களே இச்சிலைகளை இங்கு கொண்டு வந்து வைத்து விட்டு சென்று விட்டனர். கையில் சாட்டையுடன் உள்ள இந்த சாஸ்தாவை வணங்கினால் திருடர்கள் மற்றும் எதிரிகளின் தொந்தரவு விலகும் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் குடிகொண்டுள்ள ஹரிஹரபுத்திர சுவாமி சாஸ்தா மூலஸ்தானத்தில் இருபுறமும் இரண்டு அம்பாளுடன் (பூரணை, புஷ்கலை) கருங்கல் சிலா விக்ரகமாக மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளார். மூல விக்ரகமான பூரணை புஷ்கலை மற்றும் ஹரிஹரபுத்திர சுவாமி மூன்று தனித்தனி திருமேனிகளும் சேர்ந்து ஒரே கல்லால் செய்யப்பட்டது ஆகும். அத்துடன் அபூர்வ சக்தி வாய்ந்த இந்தக் கல் தட்டினால் ஒலி வரும் சிறப்புப் பெற்றது. இங்குள்ள சாஸ்தாவிற்கு வாகனமாக யானை வாகனம் உள்ளது. இக்கோயிலில் சாஸ்தாவிற்கு நேர் எதிரில் மிகப்பெரிய சுதையால் ஆன நந்தி ஒன்று உள்ளது. அதற்காக தனி மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. சாஸ்தா கோயிலில் நந்தி இருப்பது எங்கும் காண முடியாத சிறப்பாகும். மேலும் ஐயனார் கோயிலுக்கே உரிய விதத்தில் சுமார் பத்தடி உயரம் கொண்ட நான்கு குதிரைகள் சுதையால் செய்யப்பட்டுள்ளன. சாஸ்தா கையில் சாட்டையுடன் இருப்பது சிறப்பு.