Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில், கடுவெளி

அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில், கடுவெளி, திருவையாறு தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.

+91 96267 65472, 94434 47826

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும். பூராடம் நாட்களில் காலை 8 – 1 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ஆகாசபுரீஸ்வரர்

தாயார்

மங்களாம்பிகை

பழமை

2000 வருடங்களுக்கு முன்

ஊர்

கடுவெளி

மாவட்டம்

தஞ்சாவூர்

மாநிலம்

தமிழ்நாடு

கடுவெளிச்சித்தரின் அவதாரத்தலம் இது. கடுவெளி என்றால் பரந்தவெளி. இந்த சித்தர், தான் கண்டுணர்ந்த ஞானத்தை மக்களுக்கு உபதேசித்தார். இவர் சிவதரிசனம் வேண்டி தவமிருந்தார். அவருக்காக, இத்தலத்தில் எழுந்தருளிய சிவன், சித்துக்களில் வல்லமை பெறும்படி அருள் செய்தார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சோழமன்னன் ஒருவன், சித்தருக்கு அருளிய சிவனுக்கு, கோயில் எழுப்பினான். இவர் பஞ்சபூதங்களில் ஆகாயத்திற்கு அதிபதியாக திகழ்வதால் ஆகாசபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார். இந்த தலத்துக்கு சித்தரின் பெயரையே வைத்தான்.

சுவாமி ஆகாசபுரீஸ்வரர் பூராடம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக அருளுகிறார். மங்களகரமான வாழ்க்கை தருபவள் என்பதால், அம்பிகைக்கு மங்களாம்பிகை என்று பெயர். ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும், வாஸ்து பகவானும், பூராட நட்சத்திரநாளில் ஆகாசபுரீஸ்வரரை வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர நாளில் இத்தல சிவனுக்கு புனுகு, ஜவ்வாது சாத்தி, கேசரி நைவேத்யம் செய்து வணங்கி வரலாம். திருமணத்தடை உள்ளவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சுவாமி சன்னதியில் சாம்பிராணி புகையிட்டு வழிபடுகின்றனர்.

அருள்மிகு அபயவரதீஸ்வரர் திருக்கோயில், அதிராம்பட்டினம்

அருள்மிகு அபயவரதீஸ்வரர் திருக்கோயில், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.

+91 99440 82313, 94435 86451 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

அபய வரதீஸ்வரர்

தாயார்

சுந்தர நாயகி

தல விருட்சம்

வில்வம், வன்னி

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

அதிராம்பட்டினம்

மாவட்டம்

தஞ்சாவூர்

மாநிலம்

தமிழ்நாடு

முன்னொரு காலத்தில், அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர். பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளிலும், சிவபெருமான் உலாவரும் லோகங்களில் திருவாதிரை நட்சத்திர மண்டலமும் ஒன்று. இந்த மண்டலத்தில் நுழையவே அசுரர்கள் பயப்படுவர். அதே நேரம் அங்கு சென்று சரணடைந்தவர்களை அவர் அபயம் தந்து காப்பாற்றுவார். இதனால் சிவனுக்கு அபயவரதீஸ்வரர் என்று பெயர். எனவே திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறந்த பலன் தரும். பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகியோர் இத்தலத்தில் அருவமாக அபயவரதீஸ்வரரை வழிபாடு செய்வதாகக் கூறப்படுகிறது. ரைவதம் என்பது சிவனது முக்கண்ணிலும் ஒளிரும் ஒளியாகும். இந்த சக்தியின் வடிவமாக ரைவத மகரிஷி திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்தார். இந்த முனிகள் இருவரும் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வதாகக் கூறப்படுகிறது. ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன் ஆதிரை தானதில் அபயமென்றருளுவன் ஆதிரை வதனழல் ஆகிடும் ஆதியில் ஆதிரு ஆதிரை ஆலமர் ஆரணா! என்ற திருவாதிரை கோயில் பற்றிய பாடலை, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், அபயவரதீஸ்வரர் முன் நின்று பாடி வணங்கினால் சிவனின் திருவருளையும், ரைவத மகரிஷியின் அருளையும் பெறலாம்.