Category Archives: பரிகார தலங்கள்
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில், திருந்துதேவன்குடி
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில், திருந்துதேவன்குடி, வேப்பத்தூர் போஸ்ட், திருவிடைமருதூர் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.
+91 435 – 2000 240, 99940 15871 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 9 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கற்கடேஸ்வரர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | அபூர்வநாயகி, அருமருந்துநாயகி | |
தல விருட்சம் | – | நங்கை மரம் | |
தீர்த்தம் | – | நவபாஷாண தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | கற்கடேஸ்வரம் | |
ஊர் | – | திருந்துதேவன்குடி | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சம்பந்தர் |
ஒரு சமயம் துர்வாச முனிவர், சிவபூஜை செய்து விட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற ஒரு கந்தர்வன் துர்வாசரின் நடையைப் பார்த்து, “நீர் நண்டு ஊர்ந்து செல்வதைப் போல நடக்கிறீர்” என்று கேலி செய்ததுடன், அவரைப் போல நடந்தும் காட்டி அவமானப்படுத்தினான். கோபம் கொண்ட துர்வாசர், அவனை நண்டாகப் பிறக்கும்படி சபித்துவிட்டார். வருந்திய கந்தர்வன் மன்னிப்பு வேண்டினான். துர்வாசரின் அறிவுரைப்படி இத்தலத்தில் நண்டு வடிவில் பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றான். சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையை இப்போதும் காணலாம். கற்கடகத்திற்கு (நண்டு) விமோசனம் தந்தவர் என்பதால் இவர் “கற்கடேஸ்வரர்” என்று பெயர் பெற்றார்.
இந்திரன் தன் ஆணவம் நீங்க, குரு பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி இங்கு சிவபூஜை செய்தான். இங்கிருந்த புஷ்கரிணியில் தினமும் 1008 மலர் பறித்து சிவலிங்கத்திற்கு படைத்து வழிபாடு செய்து திருந்தினான். இதனால் இத்தலம், “திருந்து தேவன்குடி” என்றழைக்கப்படுகிறது. இப்பெயரைச் சொன்னால் உள்ளூர்வாசிகளுக்கு தெரிவதில்லை. “நண்டுகோயில்” என்று சொன்னால் தான் புரியும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது, வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய தலம் இது.
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர்
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர், (வழி) துகிலி, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
+91-435-247 3737 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7.30 முதல் மதியம் 12 வரை. மாலை 4.30 முதல் இரவு 9 மணிவரை நடை திறந்திருக்கும்.
மூலவர் | – | அக்னீஸ்வரர் | |
அம்மன் | – | கற்பகாம்பாள் | |
தல விருட்சம் | – | பலா | |
தீர்த்தம் | – | அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | கஞ்சனூர்(பலாசவனம், பராசபுரம்,பிரமபுரி, அக்கினிபுரம், கம்சபுரம், முத்திரிபுரி | |
ஊர் | – | கஞ்சனூர் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருநாவுக்கரசர் |
முன்பு கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு பிறந்த குழந்தையின் பெயர் சுதர்சனர். வைணவக்குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. திருநீறு, உருத்திராக்கதாரியாகத் திகழ்ந்த அக்குழந்தை எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீது அமர்ந்து “சிவமே பரம்பொருள்” என்று அக்குழந்தை மும்முறை கூறியதைக்கண்டு வியந்தனர். இக்காட்சியை சித்தரிக்கும் உருவம் இவ்வூர் பெருமாள் கோயிலிலும், அக்னீஸ்வரர் கோயில் நடராஜர்சன்னதியிலும் உள்ளது. பெருமாள் கோயிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர்.
ஹரதத்தருக்கு உபதேசித்து அருள்செய்த தெட்சிணாமூர்த்தி உருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு ஹரதத்தர் என்ற பெயர் அளித்து சிவநாம தீட்சை செய்தவர்.
ஒரு செல்வந்தர் தினமும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்துவந்தார். அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி அவ்வுணவை உண்பதுபோல காட்சி தருவார். ஒருநாள் அக்கனவு தோன்றவில்லை. காரணம் புரியாது அவர் விழித்தார். விசாரித்ததில் அன்று அக்னீஸ்வரர் ஹரதத்தரிடம் ஏழை பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கி உண்டதாகவும் அதனால் வயிறு நிரம்பிவிட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். இதன்மூலம் ஹரதத்தரின் பெருமையை அறிந்து அச்செல்வர் அவரை நாடிச்சென்று வணங்கியதாக வரலாறு சொல்லப்படுகிறது. ஆலயத்தில் ஹரதத்தரின் குடும்பமும், ஏழை அந்தணராக வந்த இறைவனின் திருவுருவமும் உள்ளன. ஊருக்குள் வரும்போது அரசமரத்தின் எதிரில் கிழக்குநோக்கி ஹரதத்தர் சிவபூஜை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக்கோயிலும் இத்தலத்தில் உள்ளது.