Category Archives: சிவ ஆலயங்கள்
அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாங்கூடலூர்
அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாங்கூடலூர், கரூர் மாவட்டம்.
+91-4324- 262 010, 238 442, 99435 27792 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கல்யாண விகிர்தீஸ்வரர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | பண்ணேர் மொழியம்மை | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | மணிமுத்தாறு, குடகனாறு | |
ஆகமம் | – | காமிகம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | வெஞ்சமாங்கூடலூர் | |
மாவட்டம் | – | கரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சுந்தரர் |
தேவர்களின் தலைவனான இந்திரன், கவுதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். அவளை அடைவதற்காக சமயம் பார்த்து காத்திருந்த அவன், ஒருநாள் விடியும் முன்பே கவுதமர் ஆசிரமத்திற்கு சென்றான். சேவல் வடிவம் எடுத்து கூவினான். அதைக்கேட்ட கவுதமர் விடிந்து விட்டது என எண்ணி ஆற்றிற்கு நீராடச் சென்றுவிட்டார். அப்போது, இந்திரன் கவுதமரின் வடிவம் எடுத்து ஆசிரமத்திற்குள் புகுந்தான். அவனைத் தன் கணவர் என்றெண்ணிய அகலிகை, பணிவிடைகள் செய்தாள். இதனிடையே ஆற்றிற்குச் சென்ற கவுதமர் பொழுது சரியாக விடியாமல் இருந்ததைக் கண்டார். ஏதோ சூழ்ச்சி நடந்திருப்பதை உணர்ந்த அவர் வீட்டிற்கு திரும்பினார். கவுதமரைக் கண்ட இந்திரன், பூனை வடிவம் எடுத்து தப்ப முயன்றான். நடந்த நிகழ்ச்சிகளை ஞானதிருஷ்டியில் அறிந்த கவுதமர், அவனது உடல் முழுதும் கண்ணாக மாறும்படி சபித்துவிட்டார். சாபம் பெற்ற இந்திரன் பூலோகத்தில் பல சிவதலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி, தான் செய்த பாவத்திற்கு விமோசனம் தேடினான். இத்தலத்திற்கு வந்த இந்திரன், சிவனை வணங்கி தவம் செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து, தகுந்த காலத்தில் சாபம் நீங்கப்பெறும் என்றார். அவன் தனக்கு காட்சி தந்து அருளியது போலவே, இங்கிருந்து அனைவருக்கும் அருளவேண்டுமென சிவனிடம் வேண்டினான். சிவனும், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.
சிவத்தல யாத்திரை வந்த சுந்தரர், இத்தலத்திற்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த பொன்னும், பொருளும் தீர்ந்து விட்டது. எனவே, விகிர்தீஸ்வரரை வணங்கிப் பொன் வேண்டும் எனக்கேட்டார். சிவன் தன்னிடம் “பொன் இல்லை” என்றார். “உன்னிடம் இல்லாத பொருள் ஏது?” என்று சொல்லி கட்டாயப்படுத்தி, பொன் கேட்டார் சுந்தரர். அப்போதும் சிவன், “தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. உனக்கு பொன் தரவேண்டுமானால் எந்த பொருளையாவது அடமானம் வைத்துத்தான் தரவேண்டும்” என்றார். சுந்தரரும் விடுவதாக இல்லை. “எதையாவது வைத்தாவது எனக்குப் பொன் தாருங்கள்” என்றார். சுந்தரருக்கு உதவி செய்ய எண்ணிய சிவன், பார்வதி தேவியை மூதாட்டியாக மாற்றி அங்கு வரச்செய்தார். அவளிடம் முருகன், விநாயகர் இருவரையும் கொடுத்துவிட்டு, அவர்களுக்கு மாறாகப் பொன் தரும்படி கேட்டார். அவரும் பொன் தந்தார். அதனை சுந்தரருக்கு கொடுத்தார். நண்பன், உதவி என்று தன்னிடம் வந்தபோது தன் பிள்ளைகளை அடமானம் வைத்து உதவி செய்தார் இத்தலத்து சிவன். இவ்வாறு நட்புக்கு மரியாதை செய்த சிவனாக இவர் இருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொண்டால் நண்பர்களுக்குள் ஒற்றுமை கூடும், நல்ல நண்பர்கள் கிடைக்கப்பெறுவர் என்கின்றனர். பிரகாரத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் 6 முகங்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரை அருணகிரியார், “வெஞ்சக்கூடல் பெருமானே” என்று பதிகம் பாடியிருக்கிறார். பிரிந்திருக்கும் தம்பதியர்கள் இவருக்கு திருக்கல்யாணம் செய்து வைத்து வேண்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதால் அவர்கள் மீண்டும் இணைந்து தாம்பத்யம் சிறக்கும் என நம்புகிறார்கள்.
அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், குளித்தலை
அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், குளித்தலை, கரூர் மாவட்டம்.
+91- 4323 – 225 228 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கடம்பவனேஸ்வரர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | முற்றிலா முலையம்மை | |
தல விருட்சம் | – | கடம்ப மரம் | |
தீர்த்தம் | – | காவிரி, பிரம்மதீர்த்தம் | |
ஆகமம் | – | காமிகம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | கடம்பந்துறை, குழித்தண்டலை | |
ஊர் | – | குளித்தலை | |
மாவட்டம் | – | கரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருநாவுக்கரசர் |
தூம்ரலோசனன் எனும் அசுரன், தேவர்களைத் துன்பப்படுத்தி வந்தான். அவர்கள் அம்பாளிடம், அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்றும்படி வேண்டினர். அவர்களுக்காக அம்பாள் துர்க்கை வடிவம் எடுத்து அவனை அழிக்கச் சென்றாள். அசுரன் தான் பெற்றிருந்த வரத்தினால் துர்க்கையுடன் தொடர்ந்து சமபலத்துடன் மோதவே, துர்க்கையின் பலம் குறைந்தது. எனவே, சப்தகன்னிகளை அனுப்பி அசுரனுடன் போர் புரியச் செய்தாள். அவர்களை எதிர்க்க முடியாத அசுரன், அவர்களிடமிருந்து தப்பி வனத்திற்குள் ஓடினான். அங்கு கார்த்தியாயன மகரிஷியின் ஆசிரமத்திற்குள் ஒளிந்து கொண்டான். சப்த கன்னியர்களும் ஆசிரமத்திற்குள் சென்றனர். அங்கு முனிவர் தவத்தில் இருந்ததைக் கண்ட அவர்கள், தூம்ரலோசனன்தான் முனிவர் போல உருமாறி அமர்ந்திருப்பதாக கருதி, முனிவரை அழித்து விட்டனர். இதனால், அவர்களுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடித்தது. அவர்கள் தங்களது தோஷம் நீங்க அருளும்படி அம்பாளை வேண்டினர். அம்பாள், இத்தலத்தில் சிவனை வேண்டிக்கொள்ள விமோசனம் கிடைக்கும் என்றாள். அதன்படி சப்தகன்னிகள் இங்கு வந்து தவமிருந்தனர். சிவன் அவர்களுக்கு கடம்ப மரத்தில் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். கருவறையில் லிங்கத்திற்கு பின்புறத்தில் சப்தகன்னியர்கள் இருக்கின்றனர். சிவன் சாபவிமோசனம் கொடுத்தபோது, சப்தகன்னியர்கள் மீண்டும் தூம்ரலோசனனை அழித்தால் தோஷம் பிடிக்குமே என அஞ்சி, அசுரனை எதிர்க்க முன்வரவில்லை. எனவே, அசுரனை அழித்து தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டிக்கொண்டனர்.
சிவன் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்து, அசுரனையும் அழித்தார். இவர் இத்தலத்தில் சப்தகன்னிகளுக்கு பாதுகாவலராக இருப்பதாக ஐதீகம். இங்கு சுவாமிக்கு நேர்பின்புறத்தில் இருக்கும் சாமுண்டியை, துர்க்கையாக வழிபடுகின்றனர். எனவே, துர்க்கைக்கு சன்னதி இல்லை. பெண்கள் துர்க்கைக்குரிய வழிபாட்டை சிவன் சன்னதி முன்பாகவே செய்வது விசேஷம். இராகுகால வேளையில் இவளுக்கும், சிவனுக்கும் விசேஷ பூஜைகளும் நடக்கிறது.