Category Archives: சிவ ஆலயங்கள்
புராதன வனேஸ்வரர் உடனுறை பெரியநாயகி அம்பாள் திருக்கோயில், பட்டுக்கோட்டை
அருள்மிகு புராதன வனேஸ்வரர் உடனுறை பெரியநாயகி அம்பாள் திருக்கோயில், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
காலை 6 மணி முதல்11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | புராதன வனேஸ்வரர் | |
அம்மன் | – | பெரியநாயகி | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | பட்டுக்கோட்டை | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
வனவாசமும் வாழ்க்கையின் அவசியமே என உலகிற்கு உணர்த்திட இறைவன் தன் தேவியுடன், வனப்பிரதேசமாக விளங்கிய இப்புராதன வனத்தில், தேவர்களும், சித்தர்களும், துறவிகளும் சூழ வந்தமர்ந்தார். இத்தலத்தில் சிவபெருமான் நீண்ட கால நிஷ்டையில் அமர்ந்தார். இதனால் உலகில் அசுரர் பலம் மிகுந்தது. தேவர்களும், ரிஷிகளும் அசுரர்களின் செயல்களால் துன்பம் அடைந்தனர். எல்லோரும் ஒரு சேர தேவியிடம் முறையிட்டனர். தேவியரோ மன்மதனை அழைத்து சிவனின் தவத்தைக் கலைக்கலாம் என்றாள். உலக நன்மைக்காக மன்மதனும் மலர்க்கணைகளைத் தொடுத்து எய்தான். அவன் நின்று மலர்களை எய்த இடம் “பூவனம்” என்று இன்றும் அழைக்கப்படுகிறது. மலர்க்கணையால் நிஷ்டை கலைந்த முக்கண்ணன், மலர்க்கணை வந்த திசை நோக்க, மன்மதன் வெப்பசக்தியால் எரிந்தான். இந்த இடம் “மதன்பட்டவூர்” என்று ஆயிற்று. நிஷ்டை கலைய நாங்களே காரணமென்றும், மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டுமென தேவர்களும், ரிஷிகளும் கேட்டுக் கொண்டனர். மன்மதன் பால் தெளித்து உயிர்ப்பிக்கப்பட்டான். இந்த இடம் “பாலத்தளி” என்று விளங்குகிறது. இத்தலத்தில் காமனை எரித்ததற்கு சான்றாக “காமன் கொட்டல்” என்ற இடத்தில் காமன் பண்டிகை விழா நடக்கிறது.
பொதுஆவுடையார் கோவில், பரக்கலக்கோட்டை
அருள்மிகு பொதுஆவுடையார் கோவில், பரக்கலக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 4373 – 283 295, 248 781
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பொதுஆவுடையார் (மத்தியபுரீஸ்வரர்) | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | பரக்கலக்கோட்டை | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
வான் கோபர், மகா கோபர் என்ற இரு முனிவர்களுக்கு, “இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?” என்று சந்தேகம் வந்தது. தங்களுக்குத் தீர்ப்பு சொல்லும்படி இருவரும் சிதம்பரம் சென்று நடராஜரிடம் வேண்டினர். அவர் இத்தலத்தில் காத்திருக்கும்படி சொல்லி, தான் அவர்களுக்கு தீர்ப்பு வழங்குவதாக கூறினார். அதன்படி இத்தலம் வந்த இரு முனிவர்களும் புளிய மரத்தின் கீழ் அமர்ந்தனர். நடராஜர், ஒரு கார்த்திகை மாத, திங்கட்கிழமையன்று சிதம்பரத்தில் பூஜைகள் முடிந்த பிறகு இங்கு வந்து, ஒரு வெள்ளால மரத்தின் கீழ் நின்று இருவருக்கும் பொதுவாக, “இல்லறமாயினும், துறவறமாயினும் நல்லறமாக இருந்தால் இரண்டுமே சிறப்பு” என்று பொதுவாக தீர்ப்புக் கூறிவிட்டு, பின்பு வெள்ளால மரத்திலேயே ஐக்கியமானார். தீர்ப்பு சொல்வற்காக வந்த சிவன் என்பதால் இவர் “பொது ஆவுடையார்” என்றும், “மத்தியபுரீஸ்வரர்” என்றும் பெயர் பெற்றார்.
ரூபமாகவும் (வடிவம்), அரூபமாகவும் (வடிவம் இல்லாமல்), அருவுருவமாகவும் (இலிங்கம்) வழிபடப்பெறும் சிவன், இத்தலத்தில் வெள்ளால மரத்தின் வடிவில் அருள் செய்கிறார்.