Category Archives: சிவ ஆலயங்கள்
அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், வைத்தீசுவரன்கோயில்
அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், வைத்தீசுவரன்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4364- 279 423 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வைத்தியநாதர் | |
அம்மன் | – | தையல்நாயகி | |
தல விருட்சம் | – | வேம்பு | |
தீர்த்தம் | – | சித்தாமிர்தம் | |
ஆகமம் | – | காமிகம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | புள்ளிருக்குவேளூர் | |
ஊர் | – | வைத்தீசுவரன்கோயில் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் |
அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்தது. அப்போது, “வைத்தீசுவரன் கோயில் சென்று, ஒருமண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு வைத்தியநாதசுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும்” என்று அசரீரி ஒன்று ஒலித்தது. இதையடுத்து, அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது. இந்த வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்தபோது, பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு “தைல நாயகி” என்று பெயர் வந்தது. இங்கு மொத்தம் ஐந்து சந்நிதிகள் உள்ளன.
1. கற்பக விநாயகர். இவரை வழிபட்டால் என்ன வரம் கேட்டாலும் தருவார்.
2. செவ்வாய் தோசம் உள்ளவர்கள் அங்காரகனை வழிபட்டால் திருமண வரம் கிடைக்கப் பெறுவர் .
3. வைத்தியநாதசுவாமி – சர்வ ரோக நிவாரணி. இவரை வணங்கினால் தீராத பிணிகள் எல்லாம் தீரும்.
4. செல்வ முத்துக் குமரர் என்ற முருகப்பெருமானை வணங்கினால் புத்திர பாக்கியம் தொழில் விருத்தி கிடைக்கும்.
5.தையல் நாயகி அம்பாளை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோசம் என்ற குறை நீங்கும். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது.
இத்தல இறைவனுக்கு சித்தர்கள் அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு பல வரங்கள் பெற்றனர். அப்போது சிந்திய அமிர்தம் இங்குள்ள தீர்த்த குளத்தில் கலந்துள்ளது. எனவே இக்குளம் “சித்தாமிர்த தீர்த்தம்” எனப்படுகிறது. உடலில் ஏற்படும் அனைத்து வகையான நோய்களுக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடினால் குணமாகும் என்பது நம்பிக்கை. இதில் 18 தீர்த்தங்கள் கலந்துள்ளன.
அருள்மிகு சப்தபுரீசுவரர் திருக்கோயில், திருக்கோலக்கா
அருள்மிகு சப்தபுரீசுவரர் திருக்கோயில், திருக்கோலக்கா, சீர்காழி நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4364-274 175 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சப்தபுரீசுவரர் | |
அம்மன் | – | ஓசைகொடுத்த நாயகி | |
தல விருட்சம் | – | கொன்றை | |
தீர்த்தம் | – | சூரிய தீர்த்தம், ஆனந்த தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | சப்தபுரி, திருத்தாளமுடையார் கோயில் | |
ஊர் | – | திருக்கோலக்கா | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர், சுந்தரர் |
பார்வதிதேவியால் ஞானப்பால் கொடுக்கப்பட்ட திருஞான சம்பந்தர், பல தலங்களுக்குச் சென்று, தனது சிறு கைகளால் தாளம் போட்டு பாடுவதைப்பார்த்தார் சிவன். குழந்தையின் கைகள் வலிப்பது பொறாமல், அவருக்கு தங்கத்தால் ஆன இரண்டு தாளங்களை கொடுத்தார். தட்டிப்பார்த்தார் சம்பந்தர். ஆனால் அதிலிருந்து ஓசை வரவில்லை. உடனே அந்த தாளத்திற்கு ஓசை கொடுத்தாள் அம்மன். எனவே தான் இங்குள்ள மூலவர் “தாளபுரீஸ்வரர்” எனவும், அம்மன் “ஓசைநாயகி” எனவும் அழைக்கப்படுகிறார்கள். இசைக்கலையில் விருப்பமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால் இசையில் வல்லவராகலாம். கோயிலின் நுழைவு வாயிலிலேயே ஞானசம்பந்தருக்கு தாளம் கொடுக்கும் ஈசனும், ஓசை கொடுக்கும் நாயகியும் அருள்பாலிக்கிறார்கள். இந்திரனும் சூரியனும் இத்தலம் வந்து பூஜை செய்து பலனடைந்துள்ளனர். இங்குள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள். எல்லா செல்வங்களும் அருளக்கூடியவள். திருமகள் தவம் செய்து திருமாலுடன் இணைந்த தலம் என்பதால் இத்தலம் “திருக்கோலக்கா” எனப்பட்டது. ஓசை நாயகியின் சன்னதியில் சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள், இன்னிசை நிகழ்த்துபவர்கள் மாபெரும் புகழை அடைவார்கள் என்பது கண்கூடான உண்மை. தற்போது “திருத்தாளமுடையார் கோவில்” என அழைக்கப்படுகிறது.
கோயிலின் எதிரில் திருக்குளம் ஆனந்ததீர்த்தம், முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுனையில் ரிஷபாரூடர் தரிசனம் – உள்நுழைந்ததும் வலப்பால் வாகன மண்டபம், நுழையும்போது நால்வர், அதிகார நந்தி சந்நிதிகள் உள்ளன.